தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை - இயேசுவின் வளர்ப்புத்தந்தை யோசேப்பு

புனித யோசேப்பின் பரிந்துரையின் வழியாக, குடும்பங்களின் தந்தையர்கள் தங்களின் உன்னத அழைப்பை ஏற்று பதில் மொழி வழங்குவதற்கான அருளைப் பெற மன்றாடுவோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

அன்பு நெஞ்சங்களே, புனித யோசேப்புக்கென அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி நிறைவுக்கு வந்துள்ள போதிலும், கடந்த சில வாரங்களாக, புனித யோசேப்பு குறித்தே தன் புதன் மறைக்கல்வியுரைகளில் எண்ணங்களைப் பகிர்ந்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாரம், யோசேப்பு, இயேசுவின் வளர்ப்புத் தந்தை என்ற தலைப்பில் கருத்துக்களை வழங்கினார். முதலில், வானதூதர், யோசேப்பின் கனவில் தோன்றி, குழந்தையை ஏற்றுக்கொள்ளும்படியாகவும், அவர் தன் மக்களை பாவங்களிலிருந்து மீட்பார் என்பது குறித்தும் (மத் 1:20b-21) கூறிய, மத்தேயு நற்செய்தி முதல் பிரிவின் பகுதி வாசிக்கப்பட்டது. பின், திருத்தந்தையின் சிந்தனைப் பகிர்வு துவங்கியது.

அன்புச் சகோதரர் சகோதரிகளே, யோசேப்புக் குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில், இன்று கன்னி மரியாவின் வயிற்றில் பிறந்த இறைமகன் இயேசுவின் வளர்ப்புத் தந்தையாக விளங்கிய யோசேப்பின் மாண்பு குறித்து நோக்குவோம். மரியாவின் கணவரும், சட்டப்படி இயேசுவின் தந்தையுமாகிய புனித யோசேப்பு, ஒரு தந்தைக்குரிய அனைத்து உரிமைகளையும் கொண்டிருந்தார். அவ்வுரிமையானது, அக்குழந்தைக்குப் பெயர் சூட்டுவதையும் உள்ளடக்கியிருந்தது. ஆனால், அக்குழந்தைக்கு இயேசு என்று பெயரிடவேண்டும் என, வானதூதரால் அவர் பணிக்கப்பட்டார். இயேசு என்றால் இறைவன் நம்மை மீட்கிறார் என்று பொருள்.  இறைவிருப்பத்தை அவர் அமைதியுடனும் தாழ்மையுடனும் ஏற்றதும், குழந்தை இயேசுவை தந்தைக்குரிய பாசத்துடன் வழிநடத்தியதும், ‘பெற்றோர்’ என்பதன் முழு அர்த்தத்தை நமக்குக் கற்பிக்கிறது. ஒரு தந்தையாகவோ தாயாகவோ இருப்பது என்பது, ஓர் உடல் சார்ந்த தொடர்பு மட்டுமல்ல, மாறாக, மேலும் ஒரு குடும்ப வாழ்வுக் குறித்த ஆழமான அக்கறையை வெளிப்படுத்தி நிற்கிறது.

இந்தக் கண்ணோட்டத்தில், பெற்றோராக இருப்பதன் உயரிய வடிவம் என்பது, ஒரு வளர்ப்புப் பெற்றோராக, ஓர் அநாதை, அல்லது கைவிடப்பட்ட குழந்தையை வரவேற்று, குடும்பத்தின் ஓர் அங்கமாக மாற்றுவதாகும். புனித யோசேப்பின் பரிந்துரையின் வழியாக, குடும்பங்களின் தந்தையர்கள் தங்களின் உன்னத அழைப்பை ஏற்று பதில் மொழி வழங்குவதற்கான அருளைப் பெறவும், அன்பும் பாதுகாப்பும் நிறைந்த இல்லங்களுக்காக ஏங்கித் தவிக்கும் குழந்தைகள், தாராளமனதுடைய குடும்பங்களில் வரவேற்பையும் புகலிடத்தையும் கண்டுகொள்ளவும் செபிப்போம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வி உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 January 2022, 11:48

அண்மைய மறைக்கல்வியுரைகள்

அனைத்தையும் படிக்கவும் >