தேடுதல்

கிறிஸ்தவ ஒன்றிப்பு வார வழிபாடு (கோப்பு படம்) கிறிஸ்தவ ஒன்றிப்பு வார வழிபாடு (கோப்பு படம்)   (Vatican Media)

கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தில் ஒன்றிணைய அழைப்பு

முழு ஒன்றிப்பை நோக்கி திருப்பயணியாக நடைபோடும்போது, கிறிஸ்துவின் மீது நாம் பார்வையை பதிக்கும்வேளையில், நாமனைவரும் நம் நோக்கத்தில் நெருங்கிவருகிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் 

ஜனவரி மாதம் 18 முதல், 25 வரை திருஅவையில் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்திற்கு ஆதரவாக, விசுவாசிகள் அனைவரும் தங்கள் வாழ்க்கைப் போராட்டங்களையும், துயர்களையும் இறைவனிடம் காணிக்கையாக்குமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஜனவரி 16, ஞாயிற்றுக்கிழமை, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கியபின் இவ்வழைப்பை முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வெவ்வேறு பின்னணியையும், பாரம்பரியங்களையும் கிறிஸ்தவ சபைகள் கொண்டிருந்தாலும், முழு ஒன்றிப்பை நோக்கி திருப்பயணியாக நடைபோடும்போது, கிறிஸ்துவின் மீது நாம் பார்வையை பதிக்கும்வேளையில், நாமனைவரும் நம் நோக்கத்தில் நெருங்கிவருகிறோம் என்பதையும் மூவேளை செபவுரையின் இறுதியில் நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கிறிஸ்தவ ஒன்றிப்பிற்காக செபிப்பதோடு, நம் துயர்களையம், வாழ்க்கைப் போராட்டங்களையும் இதற்காக ஒப்படைப்போம் என்ற அழைப்பையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகம் முழுவதும் சிறப்பிக்கப்படும் கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தின் இறுதி நாளான ஜனவரி 25ம் தேதி, அதாவது, புனித பவுல் மனம் மாறிய திருவிழாவன்று, உரோம் நகரின் புனித பவுல் பெருங்கோவிலில் மாலை செபவழிபாடு நடத்தி, இவ்வாண்டின் ஒன்றிப்பு வாரத்தை நிறைவுக்குக் கொணர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.

"கிழக்கில் அவரது விண்மீன் எழக் கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்” என்ற வார்த்தைகளைக் கொண்டுள்ள இவ்வாண்டின் கிறிஸ்தவ ஒன்றிப்பு வார தலைப்பு, கிழக்கிலிருந்து மெசியாவை வணங்க வந்த ஞானிகளின் அனுபவத்தைக் குறித்து சிந்தித்து, இவ்வொன்றிப்பு வாரத்தின் வெற்றிக்காக உழைக்க அழைப்புவிடுக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 January 2022, 15:19