தேடுதல்

Theatine துறவு சபையினருடன் திருத்தந்தை Theatine துறவு சபையினருடன் திருத்தந்தை   (Vatican Media)

Theatine துறவு சபையினரை திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை

இன்றைய சவால்களைச் சமாளிக்க, புனிதர்கள் தங்கள் வாழ்வில் பயன்படுத்திய வழிமுறைகளை நாமும் கைகொள்ளவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஆன்மிக வாழ்விலும், உறுதியான பிறரன்பிலும் ஆழமாக வேரூன்றப்பட்ட மறைப்பணியை திருஅவைக்குள் எடுத்து நடத்தி வரும் Theatine துறவு சபைக்குத் தன் பாராட்டுகளை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

1524ம் ஆண்டு உருவாக்கப்பட்ட Theatine துறவு சபையின் 164வது  கூட்டத்தில் கலந்துகொண்டோரை, ஜனவரி 15, சனிக்கிழமையன்று, திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் அடிப்படை நோக்கமாக இருக்கும் மறைப்பணி ஆற்றலை, இத்துறவு சபையும் இந்நாட்களில் ஆழ்ந்து சிந்தித்து ஆய்வுசெய்ததுக் குறித்து தன் மகிழ்ச்சியை வெளியிட்டார்.

Theatine துறவு சபையை நிறுவியவர்களுள் ஒருவரான புனித கயத்தானோவின் (Gactano) வாழ்வு எடுத்துக்காட்டுகளையும் முன்வைத்து உரை வழங்கிய திருத்தந்தை, ஒரு கிறிஸ்தவனின் இவ்வுலக மறைப்பணிகளின் பாதை என்பது, புனிதத்துவத்திற்கான பாதையிலிருந்து தனித்து நிற்கமுடியாது என்பதையும் வலியுறுத்தினார்.

கிறிஸ்துவைப் பின்பற்றி நாம் செல்லும் வழியில் இன்றைய சவால்களைச் சமாளிக்க, புனிதர்கள் தங்கள் வாழ்வில் பயன்படுத்திய வழிமுறைகளை நாமும் கைகொள்ளவேண்டும், அதேவேளை, மறுமலர்ச்சி என்பது ஒவ்வொருவருக்குள்ளிருந்தும் துவங்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார் திருத்தந்தை..

திருப்பீட நிர்வாகப் பணியில் ஈடுபட்டிருக்கும்போதும், மக்களின் ஆன்மிக உருவாக்கங்களிலும், நோயாளிகளை மருத்துவமனைகளில் சென்று சந்திப்பதிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் புனித கயாத்தானோ உழைத்தது, அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டு என்பதையும் திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 January 2022, 16:10