திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 85வது பிறந்தநாள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 85வது பிறந்தநாள்  

நூறாண்டு காலம் வாழ்க, திருத்தந்தை பிரான்சிஸ்

1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அர்ஜென்டீனா நாட்டுத் தலைநகர் புவனோஸ் அய்ரசில் பிறந்த திருத்தந்தை பிரான்சிஸ், டிசம்பர் 17, இவ்வெள்ளியன்று தன் 85வது பிறந்த நாளைச் சிறப்பித்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

“வாழ்க்கை ஒவ்வொன்றும், நம்பிக்கைகொள்ள, எதிர்நோக்க மற்றும், அன்புகூருவதற்குள்ள காலம்” என்று, டிசம்பர் 17, இவ்வெள்ளியன்று தன் 85வது பிறந்தநாளைச் சிறப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

1936ம் ஆண்டு டிசம்பர் 17ம் தேதி அர்ஜென்டீனா நாட்டுத் தலைநகர் புவனோஸ் அய்ரசில் பிறந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இம்மாதம் 13ம் தேதி தனது அருள்பணித்துவ திருநிலைப்பாட்டின் 52வது ஆண்டு நிறைவையும் சிறப்பித்தார். இத்திருத்தந்தைக்கு உலகெங்கிலுமிருந்து, திருஅவைத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் உட்பட பல்வேறு அமைப்பினரும் மக்களும், நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

“காரிருளில் நடந்துவந்த மக்கள், பேரொளியைக் கண்டார்கள்; சாவின் நிழல் சூழ்ந்துள்ள நாட்டில் குடியிருப்போர்மேல் சுடர் ஒளி உதித்துள்ளது” (எசா.9,2) என்ற இறைவாக்கினர் எசாயாவின் வார்த்தைகளோடு தங்களின் நல்வாழ்த்துச் செய்தியைத் துவக்கியுள்ள இத்தாலிய ஆயர் பேரவை, மனுஉரு எடுத்த இறைவார்த்தை, தூய ஆவியார், ஒளி, நம்பிக்கை, மகிழ்வு ஆகிய சொற்கள், திருத்தந்தையின் தலைமைப் பணியைக் கோடிட்டு காட்டுவன என்று குறிப்பிட்டுள்ளனர்.

சைப்பிரசிலிருந்து இத்தாலி வந்துள்ள புலம்பெயர்ந்தோர்

மேலும், அண்மையில் தான் திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட சைப்பிரசு தீவிலிருந்து இத்தாலிக்கு அழைத்துவரப்பட்டுள்ள 12 புலம்பெயர்ந்தோரை, இவ்வெள்ளியன்று சந்தித்துப் பேசினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கர்தினால்கள் சந்திப்பு

இன்னும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களும், நம்பிக்கைக்கோட்பாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் லூயிஸ் பிரான்சிஸ்கோ லதாரியா ஃபெரர் அவர்களும், கீழை வழிபாட்டுமுறை பேராயத்தின் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரி அவர்களும், டிசம்பர் 17, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்துப் பேசினர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 December 2021, 12:43