தேடுதல்

எரிமலை சாம்பலை அப்புறப்படுத்தும் தொழிலில் தன்னார்வத் தொண்டர்கள் எரிமலை சாம்பலை அப்புறப்படுத்தும் தொழிலில் தன்னார்வத் தொண்டர்கள் 

எரிமலை வெடிப்பில் உயிரிழந்தோருக்குத் திருத்தந்தையின் இரங்கல்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பால் பாதிக்கப்பட்டோருக்குத் திருத்தந்தையின் இறைவேண்டல்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான் செய்திகள்

அண்மையில் இந்தோனேசியாவில் செமேரு எரிமலை வெடித்துச் சிதறியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்து வேதனையடைந்த திருத்தந்தைப் பிரான்சிஸ் அவர்கள், தனது இதயப்பூர்வமான உடனிருப்பை, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரோடும் வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார்.

இந்தோனேசியாவுக்கான வத்திக்கானின் தூதர் பேராயர் Piero Pioppo அவர்களுக்கு திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் இச்செய்தியை அனுப்பியுள்ளார்.

இந்தப் பேரழிவினால் உயரிழத்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் வலிமையும் அமைதியும் நிறைத்த தனது தெய்வீக ஆசீரை திருத்தந்தைப் பிரான்சிஸ் அவர்கள் வழங்குவதாக, கர்தினால் பரோலின் அவர்கள் இச்செய்தியில் தெரிவித்துள்ளார். 

பாதிக்கப்பட்ட பகுதிகளை இச்செவ்வாயன்று பார்வையிட்ட இந்தோனேசியாவின் அரசுத்தலைவர் Joko Widodo அவர்கள், 34 உயிர்களைப்  பழிவாங்கிய இந்த ஜாவா தீவுச் சம்பவத்தால் மிகவும் சேதமடைந்த வீடுகள் அனைத்தையும் சரிசெய்து தருவதாக  உறுதியளித்துள்ளார்.

3,676 மீட்டர் உயரம் உள்ள இந்தச் செமெரோ மலையில், கடந்த சனிக்கிழமையன்று, ஏற்பட்ட எரிமலை வெடிப்பானது, வானம் முழுவதும் மேகமூட்டம் போன்ற கரும் புகையையும், அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் அனைத்திலும் ஆபத்தான பாய்பொருள் படிவுகளையும் நிரப்பியுள்ளது.

இந்நாட்டின் பேரிடர் தணிப்பு அமைப்பின் செய்தியின்படி இந்நிகழ்வால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாவும் 22 பேர் காணாமல் போயுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று தேடல் மற்றும் மீட்புப்பணி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்த போது, கடும் காற்றும்  மழையும் சில இடங்களில் இப்பாணிகளைத் தடைப்படச் செய்தன என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாயன்று மூன்று முறை வெடித்துச் சிதறிய செமேரு எரிமலை, தொடர்ந்து வெப்ப வாயுவையும், சாம்பலையும், பாறைத் துகள்களையும் வெளிப்படுத்தும் சாத்தியம் இருப்பதாக, எரிமலை மற்றும் புவியியல் ஆபத்து தணிப்பு அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இந்தோனேசியாவில் உள்ள 100க்கும் மேற்பட்ட எரிமலைகளில் செமேரு எரிமலையும்  ஒன்றாகும். இது "பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்" என்று அழைக்கப்படும் பல டெகோனிக் தகடுகளின் மேல் அதிக நில அதிர்வு செயல்பாடு உள்ள பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2021, 15:21