தேடுதல்

மறைக்கல்வியுரை: நேர்மையான ஒரு வாழ்வை பேணிக்காக்க அழைப்பு

டிசம்பர் 01, புதன் மறைக்கல்வியுரையில், திருமண ஒப்பந்தம் ஆன தம்பதியர், காதல் வயப்பட்டதிலிருந்து உருவாகும் ஈர்ப்பையும் கடந்து, சோதனை காலத்தில் நிலைத்து நிற்கவல்ல முதிர்ச்சியடைந்த அன்பில் வளர திருத்தந்தை அழைப்புவிடுத்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருஅவையில், 2020ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியிலிருந்து சிறப்பிக்கப்பட்டுவந்த புனித யோசேப்பு ஆண்டு, இம்மாதம் 8ம் தேதி, அதாவது வருகிற புதன்கிழமையன்று (டிச.08,2020 - டிச.08,2021) நிறைவடைகிறது. இந்த யோசேப்பு ஆண்டை முன்னிட்டு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித யோசேப்பு பற்றி துவக்கியுள்ள புதிய பகுதியில், புனித யோசேப்பு, நம் காலத்திற்கு முன்மாதிரிகை, அவர் அர்த்தமுள்ள மனித உறவுகளுக்கு முன்மாதிரிகை ஆகிய தலைப்புக்களில், கடந்த இரு புதன் மறைக்கல்வியுரைகளில் தன் எண்ணங்களை எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, டிசம்பர் 01, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 9.15 மணிக்கு, வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் மண்டபத்தை நிறைத்திருந்த பல நாடுகளின் திருப்பயணிகளுக்கு, வழங்கிய மறைக்கல்வியுரையில், புனித யோசேப்பு, நேர்மையாளர், மற்றும், மரியாவுக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் என்பது பற்றி விளக்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புதன் மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, புனித யோசேப்பு என்ற மனிதரைப் பற்றி சிந்தித்துவரும் நாம், அவர் எந்த அளவுக்கு “நேர்மையாளராய்” இருந்தார் என்பது பற்றியும், அவர் “மரியாவுக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர்” என்பது பற்றியும் இன்று சிந்திப்போம். இவ்வாறு சிந்திப்பது, திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் தம்பதியருக்கும், புதுமணத் தம்பதியருக்கும் ஒரு செய்தியை வழங்கும். திருஅவையால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்படாத நற்செய்தி நூல்களில் புனித யோசேப்போடு தொடர்புள்ள பல நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவை புனித யோசேப்பு பற்றிய கலைகள், மற்றும், பக்திமுயற்சிகளில் நல்தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன. நற்செய்தியாளர் மத்தேயு, யோசேப்பை, ஒரு நேர்மையாளர் என்று கூறி, அதற்கு விளக்கம் அளிக்கிறார். “இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும்முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார்” (மத்.1,18-19). மரியாவிடம் யோசேப்பு நடந்துகொண்டமுறையைப் புரிந்துகொள்வதற்கு, இஸ்ரயேலின் பழங்கால திருமண பழக்கவழக்கங்கள் பற்றி நினைவுகூர்வது உதவியாக இருக்கும். நிச்சயதார்த்தம் எனப்படும் திருமண ஒப்பந்தம், இஸ்ரயேலின் திருமண நிகழ்வில் அவசியமான ஒன்றாகும். ஒரு பெண் மண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாலும், தன் பெற்றோருடனே வாழ்வார், மற்றும், மண ஒப்பந்தம் ஆனவருடைய மனைவி எனவும் கருதப்படுவார். யோசேப்பு, இஸ்ரயேலின் பிரமாணிக்கமுள்ள மகனாக, திருமணம் பற்றி சட்டம் கூறும் அனைத்திற்கும் மனமுவந்து தன்னை உட்படுத்தினார். மரியா ஏற்கனவே கருவுற்றிருப்பதை அறிந்த யோசேப்பு, மரியா மீது கொண்டிருந்த அன்பு மற்றும் அக்கறையால், அவரை பொதுப்படையாக இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல், மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அச்சூழலில் ஆண்டவரின் தூதர் யோசேப்புக்குக் கனவில் தோன்றிக் கூறியதிலிருந்து, “மரியா கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். ஆகவே, மரியாவைத் அவர் திருமணம் செய்துகொள்வது சரியானதே என்பதைத் தெரிந்துகொண்டார். இறைவனின் நீதி மற்றும், அந்நீதி வலியுறுத்தும் உண்மையான கோரிக்கைகள் ஆகியவற்றை, அவர் இறைபராமரிப்பின் உதவியால் மிக ஆழமாகப் புரிந்துகொண்டார். யோசேப்பும் மரியாவும், கடவுளின் மீட்புத்திட்டத்திற்குத் திறந்தமனதாய் இருந்தது, அவர்களுக்கு இடையே நிலவிய அன்பை, கற்பு, பிரமாணிக்கம், நன்மதிப்பு மற்றும், தாழ்ச்சி ஆகிய புண்ணியங்களில் முதிர்ச்சி அடைந்தவர்களாக வெளிப்படுத்தியது. உண்மையிலேயே, இந்தப் புண்ணியங்கள், நம் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, நம் அன்பு நீடித்து நிலைத்துநிற்க வழிகாட்டுகின்றன. இந்த ஓர் உணர்வில், திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கும் இளையோருக்கு மட்டுமல்லாமல், நம் அனைவருக்கும், வாழ்வின் தவிர்க்கமுடியாத சவால்கள் மத்தியில் வாழ்கின்றவர்களுக்கும் யோசேப்பும் மரியாவும், எடுத்துக்காட்டுகளாய் இருக்கின்றனர். கடவுளின் நீதி மற்றும், நம் வாழ்வில் அவரது அக்கறையுடன்கூடிய பராமரிப்பு ஆகியவற்றில் நம்பிக்கை வைப்பதிலிருந்து கிடைக்கும் உண்மையான மகிழ்ச்சி மற்றும் சுதந்திரத்தைக் கண்டுணர அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.

புதன் மறைக்கல்வியுரை 011221
புதன் மறைக்கல்வியுரை 011221

இவ்வாறு, புனித யோசேப்புபற்றிய இப்புதன் மறைக்கல்வியுரையை ஆற்றிய  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றும் புனித யோசேப்பிடம் செபித்து இவ்வுரையை நிறைவுசெய்வோம் என்று கூறினார். பின்னர், டிசம்பர் முதல் தேதி கடைப்பிடிக்கப்படும் உலக எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு நாளை நினைவுபடுத்தி, அந்நோயாளிகளுக்காகவும், தான் மேற்கொள்ளவிருக்கும் சைப்ரஸ் மற்றும் கிரேக்க நாடுகளின் திருத்தூதுப் பயணத்திற்காகவும் செபியுங்கள் என்று கூறி, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

புனித யோசேப்புவிடம் இறைவேண்டல்

  • புனித யோசேப்பே,
  • விடுதலை உணர்வோடு மரியாவை அன்புகூர்ந்தவரே,
  • எதார்த்தத்திற்கு வழிவிட உங்களது கற்பனைகளைக் கைநெகிழ்ந்தவரே,
  • கடவுளால் வியப்படைய எங்களை அனுமதிக்கவும், உண்மையான மகிழ்ச்சியை மறைத்திருக்கும் மறைபொருளாக, வாழ்வை ஏற்றுக்கொள்ளவும் உதவியருளும்.
  • இரக்கமும் மன்னிப்பும் மட்டுமே அன்பை இயலக்கூடியதாக்குகிறது என்பதை
  • மண ஒப்பந்தம் ஆகியிருக்கும் அனைத்து கிறிஸ்தவர்களும் உணர்ந்திருக்கச் செய்தருளும். ஆமென்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 December 2021, 14:36