தேடுதல்

அமல அன்னை மரியாவுக்கு திருத்தந்தையின் வணக்கம்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 8 இப்புதனன்று சிறப்பிக்கப்பட்ட அமல அன்னை மரியா பெருவிழாவன்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரிலும், மற்றும், உலகெங்கிலும் வாழும் மக்களின் நலனுக்காக அன்னை மரியாவிடம் உருக்கமாக மன்றாடினார்.

இப்புதன், உரோம் நேரம் காலை 6.15 மணிக்கு, வத்திக்கானிலிருந்து, உரோம் மாநகரில் அமைந்துள்ள இஸ்பானிய வளாகம் சென்று, அவ்விடத்தில், உயர்ந்ததொரு தூணின் உச்சியில் நிறுவப்பட்டுள்ள அன்னை மரியா திருவுருவத்திற்குமுன் வேண்டுதல்களை எழுப்பியபின், உரோம் மேரி மேஜர், அன்னை மரியா பெருங்கோவில் சென்றார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை, தனிப்பட்ட முறையில் நிறைவேற்றிய இந்நிகழ்வு குறித்து செய்தியாளர்களிடம் அறிவித்த, திருப்பீடத் தகவல் தொடர்பு மையத்தின் இயக்குனர், மத்தேயோ ப்ரூனி அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலையில், இஸ்பானிய வளாகம் சென்று, அன்னை மரியாவின் திருவடிகளில் வெள்ளை ரோஜா மலர்க்கொத்தை அர்ப்பணித்து செபித்தார் என்று கூறினார்.

உரோம் மாநகரிலும், உலகமனைத்திலும், நோய் மற்றும், மனச்சோர்வால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவரையும், அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து, அந்த அன்னை, அனைவரையும் தன்  பாசத்துக்குரிய பராமரிப்பில் வைத்துக் காப்பாற்றுமாறு திருத்தந்தை மன்றாடினார் என்றும், ப்ரூனி அவர்கள் கூறினார்.

அத்துடன், உலகை அச்சுறுத்தி வரும் பல்வேறு இயற்கைப் பேரிடர்களிலிருந்தும், ஒரு சில பகுதிகளில் நிலவும் மோதல்களிலிருந்தும் மக்களைக் காக்கவும், குடிபெயரும் மக்களைத் தடுக்க சுவர்கள் எழுப்ப விழைவோரின் மனங்களை இறைவன் மாற்றவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டினார்.

இஸ்பானிய வளாகத்திலிருபந்து, மேரி மேஜர் பெருங்கோவில் சென்ற திருத்தந்தை, அப்பெருங்கோவிலில் வணங்கப்பட்டுவரும், Salus Popoli Romani, அதாவது, உரோம் மக்களின் பாதுகாவலரான அன்னை மரியாவின் திருப்படத்தின் முன்பாக, திருத்தந்தை செபித்தார் என்றும், திருப்பீட தகவல் தொடர்பு மையம் அறிவித்துள்ளது.

கத்தோலிக்கத் திருஅவையில் முதன்முறையாக, அன்னா மரியா யூபிலி ஆண்டு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு, 1953ம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி, திருத்தந்தை 12ம் பயஸ் அவர்கள், உரோம் மாநகரின் இஸ்பானிய வளாகத்திற்குச் சென்று அன்னை மரியாவிடம் செபித்தார்.

அதுமுதல், ஒவ்வோர் ஆண்டும், அமல அன்னை மரியாவின் பெருவிழாவன்று, திருத்தந்தையர் அங்கு சென்று செபிக்கும் வழக்கம் இருந்துவந்தது. தற்போதைய கோவிட்-19 பெருந்தொற்றினால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் காரணமாக, இவ்வாண்டும், சென்ற ஆண்டும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களின் பங்கேற்பு ஏதுமின்றி, அன்னை மரியாவுக்கு தனிப்பட்ட முறையில் தன் வணக்கத்தை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2021, 14:55