தேடுதல்

நோயுற்றோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் நோயுற்றோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தை - பேணிக்காக்கும் கலாச்சாரத்தை வளர்க்கவேண்டும்

மனிதர்களை பேணிக்காக்கும் கலாச்சாரத்தை, குறிப்பாக, விளிம்புகளில் வாழ்வோரை பேணிக்காக்கும் கலாச்சாரத்தை, நாம் மீண்டும் கண்டுகொள்வதன் வழியே, உண்மையான மாற்றங்களை இவ்வுலகில் உருவாக்கமுடியும் – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இத்தாலி நாட்டில் தனிமை என்ற இருளில் துன்புறுவோருக்கு உதவிகள் செய்துவரும் OSA எனப்படும் இத்தாலிய சமுதாய மற்றும் தொழில் கூட்டுறவுச் சங்கத்தின் பணிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாராட்டியுள்ளார்.

OSA அமைப்பைச் சார்ந்த பிரதிநிதிக்கு, திருத்தந்தை வழங்கிய ஒரு நேர்காணலில், இவ்வமைப்பினர், மருத்துவ மனைகளிலும், இல்லங்களிலும் ஆற்றிவரும் பணிகளைப் பாராட்டியதோடு, இவ்வுலகில் பேணிக்காக்கும் கலாச்சாரத்தை எவ்வாறு வளர்ப்பது என்பது குறித்து தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ளார்.

கனிவுள்ள மனம் என்பது, வெறும் கருத்தளவு சிந்தனை அல்ல, மாறாக, அது, மக்களின் துயரங்களில் பங்கேற்று, அவர்களுடன் நம் அருகாமையை வெளிப்படுத்தும் செயல்பாடு என்றும், இந்த அருகாமை, அவர்களது வாழ்வில் நாம் பங்கேற்பது, அவர்கள் துயர்களைத் துடைப்பது என்ற பல வடிவங்களில் வெளிப்படுகிறது என்றும், திருத்தந்தை, இந்தப் பேட்டியில் எடுத்துரைத்தார்.

கனிவு கலாச்சாரத்தை வளர்ப்பதன் ஒரு முக்கிய அம்சமாக, குழந்தைகள், வயதில் முதிர்ந்தவர்களோடு பழகுவதற்கு வாய்ப்புக்களை உருவாக்குவது அவசியம் என்பதையும், இந்தக் கலாச்சாரம் மனிதத்தை இவ்வுலகில் வாழவைக்கும் என்பதையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

மனிதர்களை பேணிக்காக்கும் கலாச்சாரத்தை, குறிப்பாக, விளிம்புகளில் வாழ்வோரை பேணிக்காக்கும் கலாச்சாரத்தை, நாம் மீண்டும் கண்டுகொள்வதன் வழியே, உண்மையான மாற்றங்களை இவ்வுலகில் உருவாக்கமுடியும் என்றும், இந்த சமுதாயம், பண்புள்ள ஒரு சமுதாயமாக மாறும் என்றும், திருத்தந்தை தன் பேட்டியில் சுட்டிக்காட்டினார்.

இப்பேட்டியில், மருத்துவமனைகள் குறித்து ஒரு கேள்வி கேட்கப்பட்டபோது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான், சில மாதங்களுக்கு முன், மருத்துவமனையில் இருந்த நேரத்தை நினைவுகூர்ந்து, தன்னைப் பராமரித்தவர்களுக்கு நன்றி கூறிய அதேவேளை, பொதுவாக மருத்துவத் துறையில், இன்னும் மனிதநேயத்துடன் கூடிய பராமரிப்பு கலாச்சாரம் வளரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிலுவையைச் சுமந்து சென்ற இயேசுவுக்கு உதவிகள் செய்த சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோனைப் பற்றி தன் பேட்டியில் நினைவுகூர்ந்த திருத்தந்தை, சீமோனைப்போல, OSA அமைப்பினர், துன்புறுவோரின் சிலுவைகளைச் சுமப்பதில் உதவியாக உள்ளனர் என்று கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 December 2021, 15:14