தேடுதல்

நிகோசியா சிறையின் இயக்குனர் Anna Aristotelous சந்திப்பு நிகோசியா சிறையின் இயக்குனர் Anna Aristotelous சந்திப்பு 

திருத்தந்தை, நிகோசியா சிறையின் இயக்குனர் சந்திப்பு

நம் வாழ்வை பலநேரங்களில் இருளில் ஆழ்த்தும் நிலையிலிருந்து விடுபடுவதற்கு, நாம் முதலில் இயேசுவிடம் செல்லவேண்டும், மற்றவரின் வேதனைகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும், மகிழ்ச்சியின் நற்செய்தியை அறிவிக்கவேண்டும்

மேரி தெரேசா: வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், டிசம்பர் 2, இவ்வியாழனன்று துவக்கிய அவரது 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள, சைப்பிரசு தீவு நாட்டிற்கு, முதலில் சென்று, அந்நாட்டு தலைநகர் நிகோசியாவில் மாரனைட் வழிபாட்டுமுறை அருளின் நமதன்னை கத்தோலிக்க ஆலயத்தில் அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், வேதியர், பக்த சபையினர் என அனைவரோடும் வழிபாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் சைப்பிரசு குடியரசுத் தலைவர் Nikos Anastasiadīs அவர்களைச் சந்தித்து, அந்நாட்டு அரசு, தூதரக மற்றும், பொது மக்கள் பிரதிநிதிகளுக்கு உரையாற்றினார். டிசம்பர் 3, இவ்வெள்ளி காலையில், சைப்பிரசு ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும்தந்தை 2ம் கிறிஸ்சோஸ்தோமோஸ் அவர்களை மரியாதையின் நிமித்தம் தனியே சந்தித்தபின்னர், திருத்தூதர் புனித யோவான் ஆர்த்தடாக்ஸ் சபையின் பேராலயத்தில், அச்சபையின் பேரவை பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றினார். நிகோசியா திருப்பீட தூதரகத்தில் சைப்பிரசின் யூதமத ரபி Arie Zeev Raskin அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்து அந்நாட்டின் யூத சமுதாயத்தின் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார். டிசம்பர் 03, இவ்வெள்ளி காலையில், நிகோசியா நகரின் GSP திறந்தவெளி அரங்கத்தில், புனித பிரான்சிஸ் சவேரியார் விழாத் திருப்பலியை நிறைவேற்றிய திருத்தந்தை, நம் வாழ்வை பலநேரங்களில் இருளில் ஆழ்த்தும் நிலையிலிருந்து விடுபடுவதற்கு, நாம் முதலில் இயேசுவிடம் செல்லவேண்டும், தன்னலத்தைத் துறந்து, உடன்பிறப்பு உணர்வைப் புதுப்பித்து, மற்றவரின் வேதனைகளைப் பகிர்ந்துகொள்ளவேண்டும், மகிழ்ச்சியின் நற்செய்தியை அறிவிக்கவேண்டும் என்று கூறினார். இத்திருப்பலியின் இறுதியில், நிகோசியா சிறையின் இயக்குனர் Anna Aristotelous அவர்களைச் சந்தித்துப் பேசினார் திருத்தந்தை பிரான்சிஸ். இது பயணத்திட்டத்தில் இடம்பெறாத ஒரு நிகழ்வாகும். ஏறத்தாழ ஏழு ஆண்டுகளுக்குமுன்னர், இப்பொறுப்பை ஏற்றதிலிருந்து,  சைப்பிரசின் சிறை அமைப்பில் உண்மையான சீர்திருத்தவாதியாகச் செயல்பட்டுவரும் அன்னா அவர்கள், கைதிகளில், மனிதர் என்ற உணர்வை உருவாக்கி, அவர்களின் மனித மாண்பை வளர்த்து வருகிறார். இதனால், சிறையில் தற்கொலைகளும், கைதிகள் தப்பித்துச் செல்வதும் இடம்பெறுவதில்லை. மேலும், கைதிகளுக்கு, பல்வேறு பலனுள்ள பயிற்சிகளும் கொடுக்கப்படுகின்றன. பல்வேறு கலாச்சார நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. அவர்களுக்கு சைப்பிரசு இறையியல் பள்ளியின் உதவியோடு, இறையியல் கல்வி வழங்கப்படுகின்றது.  இதுவரை முப்பது கைதிகள் பட்டப்படிப்பை முடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2021, 14:08