தேடுதல்

நிகோசியா அன்னை மரியா பேராலயத்தில் திருத்தந்தை நிகோசியா அன்னை மரியா பேராலயத்தில் திருத்தந்தை 

நிகோசியா அன்னை மரியா பேராலயத்தில் திருத்தந்தை

ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களும் சந்திக்கும் புவியியல் அமைப்பைக் கொண்ட சைப்பிரசு, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும், பல்வேறு மத மரபுகளைக் கொண்டிருக்கிறது

மேரி தெரேசா: வத்திக்கான்

மத்தியதரைக் கடலின் மத்தியில் ஒரு முத்தாக சுடர்விட்டுக்கொண்டிருக்கும் சைப்பிரசு தீவு, அக்கடலில் அமைந்துள்ள இத்தாலியின் சிசிலி, சர்தேஞ்ஞா ஆகிய இரு தீவுகளுக்கு அடுத்து மூன்றாவது பெரிய தீவாகும். திருத்தூதர் புனித பவுலின் நற்செய்தி அறிவிப்புத் திருத்தூது பயணங்களில் பேருதவியாக இருந்த பர்னபா, சைப்பிரசு குடிமகன் மற்றும், இவர், சைப்பிரசு திருஅவையை நிறுவியவர் என்றும் மரபுவழியாகச் சொல்லப்படுகிறது. இவ்வளவு சிறப்புமிக்க சைப்பிரசு தீவு நாட்டில், டிசம்பர் 2, இவ்வியாழன் மாலை மூன்று மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தைத் துவக்கினார். இப்பயணத்தின் முதல் நிகழ்வாக, சைப்பிரசு நாட்டின் தலைநகர் நிகோசியாவில், அருளின் நமதன்னை மாரனைட் வழிபாட்டுமுறை கத்தோலிக்க பேராலயத்தில், அந்நாட்டின் அருள்பணியாளர்கள், இருபால் துறவியர், வேதியர்கள், திருஅவை பக்த சபையினர் போன்ற அனைவரையும் சந்தித்தார். திருவழிபாடாக நடைபெற்ற இந்நிகழ்வில், அந்தியோக்கியாவின் மாரனைட் முதுபெரும் தந்தை Bechara Boutros Rai அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். மேலும் இந்நிகழ்வில், Perpetua Nyein Loo, ANTONIA PIRIPITSI ஆகிய இரு அருள்சகோதரிகள் தங்களின் மறைப்பணி அனுபவங்களை திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர்.

அருள்சகோதரி Perpetuaன் சான்று

ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய மூன்று கண்டங்களும் சந்திக்கும் புவியியல் அமைப்பைக் கொண்ட சைப்பிரசு, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும், பல்வேறு மத மரபுகளைக் கொண்டிருக்கிறது. இத்தீவு நாட்டில், தேவையில் இருப்போர், கடினமான சூழல்களை எதிர்கொள்ளும் புலம்பெயர்ந்தோர், வயது முதிர்ந்தோர் போன்றோருக்கு, குறிப்பாக, அவர்களின் அடிப்படை மனித உரிமைகளையும், மனித மாண்பையும் பாதுகாப்பதற்காகவே நான்கு பெண் துறவு சபையினர் பணியாற்றி வருகின்றோம். எவ்வளவு இடர்கள் நேரிடினும், இறைபராமரிப்பில் நம்பிக்கை வைத்து பணிகளைத் தொடர்ந்து ஆற்றுகின்றோம். இவ்வாறு அருள்சகோதரி Perpetua அவர்கள் திருத்தந்தையிடம் கூறினார். அதன்பின்னர், பர்னபாவும், சவுலும் சைப்பிரசில் ஆற்றிய திருத்தூதுப் பணிகள் பற்றிய பகுதி (தி.பணி 13,1-4) முதலில் வாசிக்கப்பட்டது. அதற்குப்பின் திருத்தந்தை தன் மறையுரையை ஆற்றினார். அருளின் நமதன்னை பேராலயத்திற்கு, 2010ம் ஆண்டில், அப்போதைய திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் சென்றபோது, அவ்வாலயத்திற்கு சென்ற முதல் திருத்தந்தை என்பது கவனிக்கத்தக்கது. இப்பேராலயத்தில், இவ்வியாழன் மாலையில்  நடைபெற்ற இந்நிகழ்வுக்குப் பின்னர், அங்கிருந்து 2.8 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, நிகோசியா நகரிலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்குச் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நிகோசியா அன்னை மரியா பேராலயத்தில் திருத்தந்தை
நிகோசியா அன்னை மரியா பேராலயத்தில் திருத்தந்தை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2021, 15:10