தேடுதல்

அரசுத்தலைவர் Nikos Anastasiadīsன் வரவேற்புரை அரசுத்தலைவர் Nikos Anastasiadīsன் வரவேற்புரை 

நிகோசியா அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை

சைப்பிரசு தீவு நாடு, அதன் புவியியல் அமைப்பால் மேற்குக்கும், கிழக்குக்கும் இடையே முக்கியமான பங்கை ஆற்றி வருகிறது, மற்ற மக்களை வரவேற்பது, மற்றும், அமைதியான நல்லிணக்கத்திற்கும் இந்நாடு ஆதரவு அளிக்கின்றது

மேரி தெரேசா: வத்திக்கான்

டிசம்பர் 2, இவ்வியாழன் மாலையில், சைப்பிரசு குடியரசின் நிகோசியாவில் அரசுத்தலைவரின் மாளிகைக்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அம்மாளிகையின் முகப்பிலேயே, சைப்பிரசு குடியரசின் அரசுத்தலைவர் Nikos Anastasiadīs அவர்கள் திருத்தந்தையை வரவேற்றார். அவ்விடத்தில் திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்மாளிகையில் வைக்கப்பட்டுள்ள சைப்பிரசின் முதல் அரசுத்தலைவராகப் பணியாற்றிய பேராயர் 3ம் Makarios அவர்களின் உருவத்திற்கு முன்பாக, திருத்தந்தை மலர் வளையத்தை வைத்தார். பின்னர் அவர் அம்மாளிகையில், அரசுத்தலைவரை தனியே சந்தித்துப் பேசினார். சைப்பிரசில் நற்செய்தி பணியாற்றிய திருத்தூதர்கள் பவுல் மற்றும், பர்னபா உருவங்களைப் பதித்துள்ள வண்ண நினைவுப் பரிசு ஒன்றையும், அரசுத்தலைவருக்குப் பரிசளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். அதற்குப் பின்னர் அம்மாளிகையிலுள்ள, கொண்டாட்டம் எனப்படும் அறையில் தனக்காகக் காத்திருந்த, அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள், பொதுமக்கள் பிரதிநிதிகள், பல மதங்களின் பிரிதிநிதிகள் என ஏறத்தாழ 125 பேரைச் சந்திப்பதற்காக,  அரசுத்தலைவருடன் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்நிகழ்வில் முதலில் அரசுத்தலைவர் Nikos Anastasiadīs அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார்.

அரசுத்தலைவர் Nikos Anastasiadīsன் வரவேற்பு

திருத்தந்தையே தங்களின் வருகைக்கு நன்றி. இத்தீவு நாடு, அதன் புவியியல் அமைப்பால் மேற்குக்கும், கிழக்குக்கும் இடையே முக்கியமான பங்கை ஆற்றி வருகிறது, மற்ற மக்களை வரவேற்பது, மற்றும், அமைதியான நல்லிணக்கத்திற்கு ஆதரவு அளிக்கும் அதேவேளை, மக்களை வரவேற்பதில் நீண்டகால வரலாற்றையும் இந்நாடு கொண்டிருக்கிறது. உலகெங்கும் அமைதி மற்றும், உரையாடலை ஊக்குவிப்பதில், திருப்பீடத்தின் பணிகளுக்கு ஆதரவளிக்க தங்கள் நாடு தயாராக உள்ளது. இந்நாடு, பல புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோரை வரவேற்றுள்ளது. அதோடு, திருத்தந்தையே, தாங்கள் சைப்பிரசிலிருந்து ஐம்பது புலம்பெயர்ந்தோரை இத்தாலிக்கு அழைத்துச் சென்றுள்ளீர்கள். அதற்கு நன்றி. மேலும், திருத்தந்தையே, இப்பயணம் வரலாற்று சிறப்புமிக்கது. சைப்பிரசு பிரிக்கப்பட்டுள்ளதால், தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டுவருகிறோம். இவ்வாறு அரசுத்தலைவர் Nikos Anastasiadīs அவர்கள் திருத்தந்தையிடம் கூறினார். 2013ம் ஆண்டிலிருந்து அரசுத்தலைவராகப் பணியாற்றிவரும் Anastasiadīs அவர்களின் வரவேற்புரைக்குப்பின், திருத்தந்தையும் உரையாற்றினார். இந்நிகழ்வை நிறைவுசெய்து நிகோசியாவிலுள்ள திருப்பீட தூதரகம் சென்று, இரவு உணவருந்தி உறங்கச் சென்றார் திருத்தந்தை. 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாளில், ஐரோப்பாவில் ஒப்புரவு நிலவவும், புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படவும் அழைப்புவிடுத்து அந்நாளின் பயண நிகழ்வுகளை நிறைவுக்குக் கொணர்ந்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சைப்பிரசு அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை
சைப்பிரசு அரசுத்தலைவர் மாளிகையில் திருத்தந்தை

ஐரோப்பாக் கண்டத்தின் கடைசியில் அமைந்துள்ள சைப்பிரசு தீவு, 1974ம் ஆண்டிலிருந்து இரு அரசுகளால் ஆளப்பட்டு வருகிறது. வடபகுதியின் மூன்றில் ஒரு பகுதி, துருக்கி அரசால் அங்கீகரிக்கப்பட்ட துருக்கி சைப்பிரசு இன அரசாலும், தெற்கின் மூன்றில் இரண்டு பகுதி, உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட, கிரேக்க சைப்பிரசு அரசாலும் ஆளப்பட்டு வருகிறது. இவற்றின் எல்லைகள், கம்பிவலைகளால் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த தீவில்தான், புலம்பெயர்ந்தோர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

03 December 2021, 14:51