தேடுதல்

2021.12.04 Papa Francesco al palazzo presidenziale di Atene 2021.12.04 Papa Francesco al palazzo presidenziale di Atene 

கிரேக்க அரசுத்தலைவர் Katerina அவர்களின் வரவேற்புரை

கிரேக்க நாட்டு அரசுத்தலைவர் Katerina அவர்கள், 300க்கு 261 வாக்குகள் பெற்று, 2020ம் ஆண்டு சனவரி 20ம் தேதி தலைமைப் பணியை ஏற்றார். கிரேக்க நாட்டு வரலாற்றில் பெண் ஒருவர் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதுவே முதன் முறையாகும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

கிரேக்க நாட்டிற்கு இரண்டாவது முறையாக திருத்தந்தை வருகை தந்திருப்பது, அதிலும், ஒட்டமான்களுக்கு எதிராக கிரேக்கப் புரட்சி துவங்கியதன் 200வது ஆண்டு நிறைவின் காலக்கட்டத்தில் வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. மேற்கத்திய கலாச்சாரத்திற்கும், கிறிஸ்தவத்திற்கும் கிரேக்க நாடு ஆற்றியுள்ள முக்கிய பங்கை திருத்தந்தை அங்கீகரித்திருப்பது, எம் மக்களுக்கு மகிழ்ச்சி தருகிறது. திருத்தூதர்களின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி திருத்தந்தை வழங்கிவரும் நம்பிக்கை மற்றும் உடன்பிறப்பு உணர்வின் ஆணித்தரமான செய்தி, கிறிஸ்தவத்தின் வேர்களைக் குறிப்பதாக உள்ளது.  புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் நெருக்கடிகளைக் களைவதற்கும், லெஸ்போஸ் தீவுக்கு, திருத்தந்தை சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்ததும், அவர்களுக்கு ஆதரவாக உலகளாவிய சமுதாயத்தின் நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுத்து வருவதும் பாராட்டத்தக்கது. கிரேக்க நாடும், மனித வர்த்தகத்திற்கு எதிராக உழைத்து வருகின்றது. கிறிஸ்தவ சமுதாயம் ஆபத்துக்கள், அடக்குமுறைகள் மற்றும் பாகுபாடுகளை எதிர்கொள்ளும் பகுதிகளில் அவர்களைப் பாதுகாப்பதற்கு திருப்பீடத்தோடு சேர்ந்து பணியாற்ற கிரேக்க நாடு ஆவல்கொள்கிறது. இதில் வத்திக்கான் ஏற்கனவே முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. உலகில் பன்மைத்தன்மை மற்றும், சகிப்புத்தன்மையைக் காப்பதற்கு, கிறிஸ்தவ சமுதாயங்களுக்கு மத சுதந்திரமும், கலாச்சார நினைவுச்சின்னங்களும் பாதுகாக்கப்படுவது முக்கியம். இவ்வேளையில், துருக்கியின் Hagia Sophia, கிறிஸ்தவ ஒன்றிப்பின் அடையாளமாகவும், மற்றும், உலக பாரம்பரியச் சொத்தின் நினைவுச்சின்னமாகவும் இருக்கவேண்டும் என்று தாங்கள் வலியுறுத்தி வருவதை இங்கு என்னால் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மேலும், தங்களுக்கு நல்ல உடல்நலம், நீண்ட ஆயுள் இருக்குமாறு கிரேக்க மக்களின் சார்பாக வாழ்த்துகிறேன். இவ்வாறு கிரேக்க நாட்டு அரசுத்தலைவர் கத்தரீனா அவர்கள் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2021, 15:08