தேடுதல்

சைப்பிரசு குடிபெயர்ந்தோர் சந்திப்பில் திருத்தந்தையின் உரை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

டிசம்பர் 3, வெள்ளி மாலை, சைப்பிரசு நாட்டின், திருச்சிலுவை பங்கு ஆலயத்தில், குடிபெயர்ந்தோருடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட, கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டு நிகழ்வில் அவர் வழங்கிய உரையின் சுருக்கம்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, சைப்பிரசு நாட்டில் நான் மேற்கொண்ட பயணத்தை, உங்களுடன் மேற்கொள்ளும் இந்த சந்திப்புடன் நிறைவுசெய்வதில் மகிழ்கிறேன். தங்கள் சாட்சியங்களை வழங்கிய இளையோருக்கு சிறப்பான நன்றி. அவர்களது சாட்சியங்கள், ஒரு மாதத்திற்கு முன்னரே என்னை வந்துசேர்ந்தன. அவற்றை வாசித்தபோது, அங்கு கூறப்பட்டிருந்த உண்மை, என் உள்ளத்தை வெகுவாகத் தொட்டது. இயேசுவும், இத்தகைய உண்மைகளைக் கேட்டபோது, “தந்தையே, விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில் ஞானிகளுக்கும் அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிப்படுத்தினீர்" (மத். 11:25) என்று தன் தந்தையிடம் கூறினார். அதேவண்ணம், நானும், விண்ணகத் தந்தையைப் போற்றுகிறேன்.

உங்கள் சாட்சியங்களைக் கேட்கும்போது, இறைவார்த்தையின் வலிமையை உணரமுடிகிறது. இத்தீவுக்கு அருகே உள்ள எபேசு நகரில், பல நூற்றாண்டுகளுக்கு முன், திருத்தூதர் பவுல், "நீங்கள் அன்னியர் அல்ல; வேற்று நாட்டினரும் அல்ல. இறைமக்கள் சமுதாயத்தின் உடன் குடிமக்கள்; கடவுளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்" (எபேசியர் 2:19) என்று கூறினார். 'நீங்கள் அன்னியர் அல்ல, குடிமக்கள்' என்று புனித பவுல் கூறியது, இன்றைய திருஅவையின் வாக்காகவும் உள்ளது. இதுவே கடவுளின் கனவாகவும் உள்ளது. காங்கோ குடியரசிலிருந்து இங்கு குடியேறியிருக்கும் மரியாமி (Mariamie), உங்களைப்போலவே, கடவுளும், அமைதி நிறைந்த ஓர் உலகைப்பற்றி, அங்கு வாழ்வோர் அனைவரும் குழந்தைகள் என்பது பற்றி, கனவுகாண்கிறார்.

இந்தக் கூட்டத்தில், குடிபெயர்ந்தோராகிய நீங்கள் வழங்கிய சாட்சியங்கள், திருஅவைக்கு முன் வைக்கப்பட்டுள்ள ஒரு கண்ணாடிபோல் உள்ளன. இலங்கையிலிருந்து வந்திருக்கும் தாமரா (Thamara), 'நீங்கள் யார்?' என்று மக்கள் உங்களிடம் கேட்கும் கேள்விக்கு, உங்களால் சரியான பதில் சொல்லமுடியவில்லை என்று கூறியுள்ளீர்கள். இந்தக் கேள்வி, அனைவரும் எழுப்பும் கேள்விதான். பொதுவாக, இத்தகையக் கேள்வி, நீங்கள் எந்தக் குழுவை சார்ந்தவர்கள் என்பதை அறியவிழையும் கேள்வியாக அமைகிறது. பல்வேறு சுயநல சிந்தனைகள், இத்தகையப் பிரிவுகளை உருவாக்க விழைகின்றன. இதற்கு மாறாக, அன்பு, அனைவரையும் உள்ளடக்கும் பரந்துபட்ட உள்ளத்தை உருவாக்குகிறது.

குடிபெயர்ந்தோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்
குடிபெயர்ந்தோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

காமரூன் நாட்டிலிருந்து இங்கு குடியேறியிருக்கும் மக்கோலின்ஸ் (Maccolins), வெறுப்பின் விளைவாக நீங்கள் காயப்பட்டிருப்பதைக் குறித்து பேசினீர்கள். வெறுப்பு ஒரு நஞ்சு என்றும், அது எவ்வாறு நம் உள்ளங்களை நீண்டகாலத்திற்கு காயப்படுத்துகிறது என்றும், நீங்கள் கூறிய சொற்கள், உண்மையிலேயே மிகவும் சக்தி வாய்ந்த சொற்கள்.

ஈராக் நாட்டிலிருந்து வந்திருக்கும் ரோஸ் (Rozh), உங்களை ஒரு பயணி என்று கூறினீர்கள். நாம் அனைவருமே ஒரு குடும்பமாக இவ்வுலகில் பயணம் செய்பவர்கள் என்பதை நீங்கள் நினைவுபடுத்தினீர்கள். இந்தப் பயணத்தில் ஏற்றத்தாழ்வுகளையும், மூடிய மனங்களையும், முற்சார்பு எண்ணங்களையும் சந்திக்கிறோம். இதனால், நம் பயணப்பாதையில் சுவர்கள் எழுப்பப்படுகின்றன. இத்தகைய சுவர்களை கிறிஸ்து தகர்த்தெறிந்து நம்மை ஒன்றுபடுத்தியுள்ளார் (காண்க. எபேசியர் 2:14). இந்த இயேசுவை, நம் சகோதரர்கள், சகோதரிகள், குறிப்பாக, குடிபெயர்ந்தோரில் காண்பது முக்கியம்.

இவ்வாறு பல வழிகளில், கடவுள், உங்கள் கனவுகள் வழியே எங்களிடம் பேசுகிறார். பல வேளைகளில், கனவுகாண்பதை விடுத்து, உறக்கத்தில் ஆழ்ந்துவிட விழைகிறோம். அக்கறையற்ற இவ்வுலகில், நாம் நம் பார்வைகளைத் திருப்பிக்கொள்ளும் பழக்கத்தை வளர்த்துள்ளோம். பிளவுபட்டிருக்கும் இவ்வுலகைப்பற்றி திருப்தியடையாமல், நம் கனவுகளை நனவாக்கும் பயணத்தில் ஈடுபட, கடவுள் நம்மை அழைக்கிறார்.

வேதனை தரும் பிளவுகளால் துன்புறும் உங்கள் தீவு நாட்டில், ஒருங்கிணைப்பை உருவாக்க உழைப்பவர்களுக்கு நான் நன்றிகூறுகிறேன். இத்தீவில் உள்ள தலைவர்கள், இந்த நாட்டை ஒன்றுபட்ட, விடுதலையடைந்த நாடாக மாற்ற முயன்றுவருவதை நான் பார்த்தேன்.

குடிபெயர்ந்தோராகிய உங்களைக் காணும்போது, உங்களுக்குச் செவிமடுக்கும்போது, உங்கள் வேதனைகளை நான் உணர்கிறேன். நீங்கள் இங்கு வந்து சேர்ந்துள்ள இவ்வேளையில், உங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் இன்னும் வேற்று நாடுகளுக்கு பயணங்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த நாட்டைச் சுற்றியுள்ள மத்தியத்தரைக் கடலில் எத்தனைபேர் தங்கள் பயணங்களின்போது, உயிரிழந்துள்ளனர்? மத்தியத்தரைக் கடல், பெரியதொரு கல்லறை நிலமாக மாறியுள்ளது.

உங்களைக் காணும்போது, மனித வர்த்தகத்திற்கு உள்ளான உங்கள் சகோதரர்கள் சகோதரிகளைக் காண்கிறேன். உங்களைக் காணும்போது, பல குடியேற்றதாரர்கள், அவர்கள் குடியேறிய நாடுகளிலிருந்து தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டு, அங்கு வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ளதை காண்கிறேன். கடந்த நூற்றாண்டில், நாத்சி வதைமுகாம்களைப்பற்றி கேள்விப்பட்டபோது, 'இது எப்படி நிகழமுடியும்?' என்ற கேள்வியை எழுப்பினோம். இன்றைய உலகில், அதேவண்ணம், வதை முகாம்கள் உள்ளதை கண்டுவருகிறோம். இந்த வதைமுகாம்களைப் பற்றி கேள்விப்படும்போதும், அவற்றைக் காணும்போதும், 'பாவம், அந்த மக்கள்' என்றுமட்டும் எண்ணி நிறுத்திக்கொள்கிறோம். நமது சகோதரர்கள், சகோதரிகள் அடைந்துவரும் துன்பங்களைக் கண்டு, மௌனம் காக்கமுடியாது. இந்த மௌனத்தால், குடிபெயந்தோரின் சித்ரவதைகள் இன்னும் கூடியவண்ணம் உள்ளன.

இதுவே, வளர்ந்துவிட்டதாகக் கருதப்படும் மேற்கத்திய கலாச்சாரத்தின் கதை. இத்தகைய ஒரு நிலையிலிருந்து விடுபடவும், வேதனையுறுவோருக்காக வேண்டிக்கொள்ளவும் நாம் முயல்வோம்.

உண்மைகளை உள்ளது உள்ளபடியே சொல்லிவிட்டேன். அக்கறையற்ற கலாச்சாரத்தின் விளைவாக, நாம் நம் பார்வைகளை திருப்பிக்கொள்ளவோ, மௌனம் காக்கவோ இயலாது.

உங்கள் அனைவரையும் இறைவன் ஆசீர்வதிப்பாராக! நன்றி!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 December 2021, 11:38