நவம்பர் 12, அசிசி நகரில் வறியோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் நவம்பர் 12, அசிசி நகரில் வறியோரைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் 

திருத்தந்தையின் காணொளி - வறியோர், திருஅவையின் புதையல்

திருத்தந்தை : நமக்குள் இருக்கும் வெறுமையை நிரப்ப நமக்கும் இறையன்பின் தேவை உள்ளதால், நாமும் ஒருவகையில் வறியோரே

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

நவம்பர் 14ம் தேதி ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட உலக வறியோர் நாள் நிகழ்ச்சிகளையொட்டி உலகின் அனைத்து வறியோருக்கும் என காணொளிச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

"Fratello", அதாவது சகோதரர் என்ற பெயருடன் உலகின் வறியோருக்கு உதவி வரும் அமைப்பு, திருத்தந்தையின் அழைப்பின்பேரில் உலகின் வறியோர் அனைவரையும் இணைத்து அரை மணி நேர இறைவேண்டலுக்கு ஏற்பாடுச் செய்துள்ளதை ஒட்டி, திருத்தந்தையின் இந்த செய்தியும் வெளியிடப்பட்டுள்ளது.

வறியோர் எவ்வாறு திருஅவையில் பெரிய புதையலாக உள்ளனர் என்பதை, தன் காணொளிச் செய்தியில் கோடிட்டுக் காட்டும் திருத்தந்தை, "Fratello" அமைப்பினர், உலகம் முழுவதும் ஏற்று நடத்தும் பிறரன்பு பணிகளில் தானும் நெருக்கமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

சிறைகளில் துயரங்களை அனுபவிப்போர்,  குடிசைக்குடியிருப்புகளில் வாழ்வோர், போர்ச் சூழல்களில் வாழ்வோர், கைவிடப்பட்டோர், தனிமையில் இருப்போர் ஆகியோர், ஒவ்வொரு நாளும், எதை உண்பது, எங்கு படுத்துறங்குவது, என அல்லாடிக்கொண்டிருப்பது, மிகுந்த மன வேதனை தருவதாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பிறரன்பு பணிகளில் ஈடுபடுவோர், இறையன்பு எனும் நற்செய்தியை, வறியோர், சின்னஞ்சிறியோர், நோயுற்றோர், வாழ்வில் காயமுற்றோர் என அனைவரிடமும் பகிர்வதுடன், நமக்குள் இருக்கும் வெறுமையை நிரப்ப நமக்கும் இறையன்பின் தேவை உள்ளதால், நாமும் ஒருவகையில் வறியோரே என்பதை உணர்ந்தும் வாழ்வோம் என அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை.

மிகச் சிறியோராகிய இவர்களுக்கு நீங்கள் செய்தது எல்லாம், எனக்கே செய்தீர்கள், எனவும், என் பெயரால் சிறியோரை, வறியோரை வரவேற்கும்போது,என்னையே வரவேற்கிறீர்கள் எனவும், இயேசு கூறிய வார்த்தைகள், நற்செய்தி கூறும் ஒருமைப்பாட்டிற்கான அழைப்பு எனக் கூறும் திருத்தந்தை, இதனாலேயே வறியோரை, திருஅவையின் பெரும் புதையல் என்கிறோம் என காணொளிச் செய்தியில் உரைத்துள்ளார்.

வறியோரை காயப்படுத்திய, புறக்கணித்த, அவமானப்படுத்திய கிறிஸ்தவர்களின் பெயரால் தான் அவர்களிடம் மன்னிப்பைக் கோருவதாக, அந்த காணொளிச் செய்தியின் இறுதியில் கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வறியோர் என்றும் இறைவனின் இல்லமாகவும், திருஅவையின் புதையலாகவும் உள்ளார்கள் என தெரிவித்துள்ளார்.

கோவில்களின் வாசலுக்கு உரியவர்கள் அல்ல வறியோர், மாறாக, அவர்கள், திருஅவையின் இதயத்திற்கு உரியவர்கள், அவர்களிடையே புனிதர்கள் மறைந்திருக்கிறார்கள் என மேலும் கூறுகிறது திருத்தந்தையின் செய்தி.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

15 November 2021, 10:59