சகிப்புத்தன்மை சகிப்புத்தன்மை 

உலக சகிப்புத்தன்மை நாள், நவம்பர் 16

பல்வேறு மதங்களுக்கிடையே நட்புறவு, அமைதி மற்றும், நல்லிணக்கத்தை உருவாக்குவதே, அவற்றுக்கிடையே உரையாடல் இடம்பெறுவதன் நோக்கம் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

பல்வேறு மதங்களுக்கிடையே நட்புறவு, அமைதி மற்றும், நல்லிணக்கத்தை உருவாக்குவதும், உண்மை மற்றும், அன்புணர்வில், ஆன்மீக மற்றும், அறநெறி விழுமியங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்துகொள்வதுமே, அவற்றுக்கிடையே  இடம்பெறும் உரையாடலின் நோக்கமாக இருக்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாயன்று கூறியுள்ளார்.

நவம்பர் 16, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக சகிப்புத்தன்மை நாளை மையப்படுத்தி, உலக சகிப்புத்தன்மை நாள் (#DayForTolerance) என்ற ஹாஷ்டாக்குடன் தன் டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றைப் பதிவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு மதங்களுக்கு இடையே உரையாடல் இடம்பெறுவதன் நோக்கம் பற்றி எடுத்துரைத்துள்ளார்.

பல்வேறு மதங்களின் உறுப்பினர்களுக்கு இடையே உரையாடல் இடம்பெறுவது, நன்மதிப்புக்காக அல்லது, சகிப்புத்தன்மைக்காக அல்ல, மாறாக, அவர்களுக்கிடையே நல்லுறவுகளை உருவாக்குவதற்காகவே என்றும், திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடையே சகிப்பற்றதன்மையின் பயங்கரமான விளைவுகளை எடுத்துரைக்கவும், கலாச்சாரங்கள், மற்றும், மக்கள் மத்தியில் புரிந்துகொள்தலை ஊக்குவித்து, சகிப்புத்தன்மையை வளர்க்கவுமென, 1996ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பொது அவை, உலக சகிப்புத்தன்மை நாளை உருவாக்கியது. 1995ம் ஆண்டில் ஐ.நா. நிறுவனம் சிறப்பித்த உலக சகிப்புத்தன்மை ஆண்டின் தொடர்ச்சியாக, இந்த உலக நாள் ஏற்படுத்தப்பட்டது.

ஐ.நா. நிறுவனம் சிறப்பித்த உலக சகிப்புத்தன்மை ஆண்டு மற்றும், மகாத்மா காந்தி பிறந்ததன் 125ம் ஆண்டு நிறைவு, ஆகிய இரு நிகழ்வுகளையொட்டி, 1995ம் ஆண்டில் ஐ.நா.வின் யுனெஸ்கோ நிறுவனம், சகிப்புத்தன்மை மற்றும், அகிம்சையை ஊக்குவிப்பதற்காக, Madanjeet Singh விருது ஒன்றையும் உருவாக்கியது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 November 2021, 15:32