லெஸ்போஸ் தீவில் திருத்தந்தை பிராந்சிஸ் (கோப்புப்படம் 2016) லெஸ்போஸ் தீவில் திருத்தந்தை பிராந்சிஸ் (கோப்புப்படம் 2016) 

சைப்ரஸ், கிரேக்கம் நாடுகளுக்கு திருத்தூதுப்பயணம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதியன்று, கிரேக்க நாட்டின் மூன்றாவது பெரிய லெஸ்போஸ் தீவில் வாழ்கின்ற ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரைச் சந்தித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு டிசம்பர் மாதம் 2ம் தேதி முதல், 6ம் தேதி வரை, சைப்ரஸ் தீவு நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்வார் என்று, திருப்பீட தகவல் தொடர்பகத்தின் இயக்குனர் மத்தேயோ புரூனி அவர்கள் நவம்பர் 05, இவ்வெள்ளியன்று அறிவித்தார்.

வருகிற டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை, சைப்ரஸ் தீவு நாட்டின் தலைநகரான நிக்கோசியாவிலும், 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை, கிரேக்க நாட்டின் தலைநகரான ஏத்தென்ஸ் மற்றும், அந்நாட்டின் லெஸ்போஸ் தீவிலும், திருத்தந்தை, திருத்தூதுப் பயணங்களை மேற்கொள்வார் என்று, புரூனி அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்தப் பயணத்தின் மற்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் கூறியுள்ள புரூனி அவர்கள், சைப்ரஸ் தீவு நாடு, மற்றும், கிரேக்க நாட்டின் அரசு அதிகாரிகள் மற்றும், தல ஆயர் பேரவைகளின் அழைப்பின்பேரில் அந்நாடுகளுக்கு, திருத்தந்தை செல்கிறார் என்றும் கூறியுள்ளார்.

லெஸ்போஸ் தீவு

கிரேக்க நாட்டின் மூன்றாவது பெரிய தீவாகிய லெஸ்போஸ் (Lesbos), வடகிழக்கு ஏஜியன் கடலில் அமைந்துள்ளது. புலம்பெயர்ந்தோர் ஆயிரக்கணக்கில் வந்து சேர்ந்துள்ள லெஸ்போஸ் தீவுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2016ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சைப்ரஸ் தீவு நாடு

மத்தியதரைக் கடலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மூன்றாவது பெரிய தீவான சைப்ரஸ் நாட்டில், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களே அதிகம் உள்ளனர். இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்கர் ஏறத்தாழ 2,400 பேர் உள்ளனர். இந்நாட்டிற்கு 2010ம் ஆண்டில் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் திருத்தூதுப்பயணம் மேற்கொண்டார்.   

முதல் நூற்றாண்டில் புனித பவுல் இத்தீவுக்குச் சென்றார், அங்கு உரோமன் ஆளுநர் செர்ஜியுஸ் பவுலோஸ் அவர்களை கிறிஸ்தவத்திற்கு மனம் திருப்பினார்.

இயேசு உயிர்ப்பித்த இலாசர், அடக்குமுறைக்கு அஞ்சி சைப்ரஸ் தீவுக்கு வந்தார் என்றும், திருத்தூதர்கள் பவுல் மற்றும் பர்னபாசால் Kition ஆயராக, அவர் திருநிலைப்படுத்தப்பட்டார் எனவும், அவரின் கல்லறை அத்தீவின் Larkakaவில் உள்ளது எனவும் சொல்லப்படுகிறது.

கிரேக்கம்

ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் ஆப்ரிக்காவை இணைக்கும் பாதையில் அமைந்துள்ள கிரேக்க நாடு, மேற்கத்திய கலாச்சாரத்தின் தொட்டில் எனவும் அழைக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 November 2021, 15:24