புனித வின்சென்ட் தெ பவுல் புனித வின்சென்ட் தெ பவுல்  

ஏழைகளின் மனித மற்றும், ஆன்மீக வளர்ச்சியில் உடனிருங்கள்

கடவுள் உங்களிடம் அர்ப்பணித்துள்ள ஏழைகளுக்கு, மாமியார்களாக இல்லாமல், அன்னையராகவும், சகோதரிகளாவும் இருங்கள் – பிறரன்பு மகள்கள் சபை அருள்சகோதரிகளிடம் திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

முரண்பாடுகள், மற்றும், பல்வேறு வகையான புறக்கணிப்புக்களால் நிறைந்துள்ள இன்றைய உலகில், ஒவ்வொரு மனிதருக்கும் மாண்புள்ள ஒரு வாழ்வை உறுதிசெய்யும் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கு உழைக்குமாறு, பிறரன்பு அருள்சகோதரிகள் சபை ஒன்றிடம் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்ஸ் நாட்டு பாரிஸ் நகரில், புனித வின்சென்ட் தெ பவுல் அவர்கள் துவக்கிய பிறரன்பின் மகள்கள் என்ற அருள்சகோதரிகள் சபையினர் மேற்கொண்டுவரும் பொதுப்பேரவையை முன்னிட்டு அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், இவ்வாறு அழைப்புவிடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வன்முறை, பாகுபாடுகள், உரிமை மீறல்கள் போன்றவற்றிற்குப் பலியாவோரை, புன்னகையோடும், அர்ப்பணத்தோடும் பராமரித்துவரும் இச்சகோதரிகளைப் பாராட்டியுள்ள அதேவேளை, நம் பொதுவான இல்லத்தைப் பாதுகாக்கவும், கிறிஸ்தவ நம்பிக்கை மற்றும், கிறிஸ்தவ விழுமியங்களை, புதிய தலைமுறைகளுக்கு வழங்கவும், ஒருவர் ஒருவர் மீது அக்கறை காட்டவும், அவர்களுக்குக் கற்றுக்கொடுக்குமாறு   கேட்டுக்கொண்டார், திருத்தந்தை.

கடவுள் உங்களிடம் தமது அன்புக்குரிய ஏழைகளை அர்ப்பணித்துள்ளார் என்றும், நீங்கள் அவர்களுக்கு, மாமியார்களாக இல்லாமல், அன்னையராகவும், சகோதரிகளாவும் இருங்கள் என்று பிறரன்பு சபைச் சகோதரிகளிடம் கூறியத் திருத்தந்தை, அவர்கள், தங்களது அழைப்பின் அழகை நோக்கவும், புனித வின்சென்ட் தெ பவுலின் எண்ணப்படி வாழவும் வேண்டும் என்று அச்சகோதரிகளிடம் கூறியுள்ளார்.

திறக்கப்படு என்ற இயேசுவின் இறைவார்த்தையின் அடிப்படையில் இப்பொதுப் பேரவையை அவர்கள் நடத்துவது குறித்து தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, உலகெங்கும் பெரிய நிறுவனங்கள், மருத்துவமனைகள், கருணை இல்லங்கள் மற்றும், பள்ளிகளில் உள்ள ஏழைகளுக்கு உதவுவது மட்டுமன்றி, அவர்கள் வாழ்கின்ற இடங்களுக்குச் சென்று அவர்களைச் சந்தித்து, அவரகளின் மனித மற்றும், ஆன்மீக வளர்ச்சியில் உடன்பயணிக்குமாறும் கூறியுள்ளார்.

இறுதியில் அச்சகோதரிகளுக்கு தன் நல்வாழ்த்தையும் செபங்களையும் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக மறக்காமல் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

புனித வின்சென்ட் தெ பவுலின் பிறரன்புத் தோழமை எனப்படும், புனித வின்சென்ட் தெ பவுலின் பிறரன்பு மகள்கள் சபை, பாரிசில், ஏழைகள் மற்றும், புறக்கணிக்கப்பட்டோருக்குப் பணியாற்றுவதற்கென்று, 1633ம் ஆண்டு, அப்புனிதர் மற்றும், புனித  Louise de Marillac ஆகிய இருவரால் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2021, 14:57