திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் - கோப்புப் படம் திருத்தந்தை பிரான்சிஸ் உரை வழங்குதல் - கோப்புப் படம் 

நீதி - அமைதி பணிக்குழுக்களுக்கு திருத்தந்தையின் செய்தி

மறைமாவட்டங்களில் செயலாற்றும் நீதி மற்றும் அமைதி பணிக்குழுக்கள், சமுதாய அக்கறை கொண்ட இயக்கங்களுடனும், ஏனைய மத அமைப்புக்களுடனும் இணைந்து, தங்கள் பணியை தொடருமாறு திருத்தந்தை அழைப்பு

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மனித சமுதாயத்தின் பொருளாதாரத் துறையிலும், அரசியல் துறையிலும் நிலவும் முரண்பாடுகளை, கோவிட்-19 பெருந்தொற்று வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது என்றும், இந்த முரண்பாடுகளை சரிசெய்வது திருஅவையின் கடமை என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இணையம் வழியே வெளியிட்ட ஒரு செய்தியில் கூறியுள்ளார்.

உலகின் பல மறைமாவட்டங்களில் உருவாக்கப்பட்டுள்ள நீதி மற்றும் அமைதி பணிக்குழுக்களுக்கென, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை, நவம்பர் 17, 18 ஆகிய இரு நாள்கள், ஏற்பாடு செய்துள்ள இணையவழி கருத்தரங்கிற்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள செய்தியில், உண்மையான மனித முன்னேற்றத்தை வலியுறுத்திப் பேசியுள்ளார்.

1967ம் ஆண்டு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், நீதி மற்றும் அமைதி திருப்பீட அவையை உருவாக்கிய வேளையில், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம் என்பது, அமைதியின் ஒரு புதிய பெயர் என்று குறிப்பிட்டதை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செயதியில் நினைவுகூர்ந்துள்ளார்.

முழு மனித மாண்பும், மனித உரிமைகளும் நிலைநாட்டப்படுவது, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தின் ஒரு முக்கிய அம்சமாக திகழவேண்டும் என்றும், வறியோரும், மற்றவர்களால் ஒதுக்கப்பட்டோரும், இப்பணியின் இலக்குமக்களாக தெரிவு செய்யப்படவேண்டும் என்றும் திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்திக் கூறினார்.

மறைமாவட்டங்களில் அமைந்துள்ள நீதி மற்றும் அமைதி பணிக்குழுக்கள், Laudato si’ மற்றும் Fratelli tutti ஆகிய இரு திருமடல்களை, ஆழ்ந்து நோக்கவும், அவற்றில் கூறப்பட்டுள்ள கருத்துக்களை அவரவர் நாட்டின் சூழலுக்கு ஏற்ப கலாச்சார மயமாக்கவும் உள்ள தேவைகளைக் குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் எடுத்துரைத்தார்.

ஒருங்கிணைந்த மனித முன்னேற்றமும், அமைதி மற்றும் நீதி ஆகிய விழுமியங்களும், நம் பொதுவான இல்லமான பூமியைக் காப்பதன் வழியாகவும், உடன்பிறந்த நிலை மற்றும் சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதன் வழியாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்று, திருத்தந்தை, தன் செய்தியின் வழியே அழைப்பு விடுத்தார்.    

மறைமாவட்டங்களில் செயலாற்றும் நீதி மற்றும் அமைதி பணிக்குழுக்கள், சமுதாய அக்கறை கொண்ட இயக்கங்களுடனும், ஏனைய மத அமைப்புக்களுடனும் இணைந்து, தங்கள் பணியை தொடருமாறு கூறி, திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்தார்.

1967ம் ஆண்டு, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களால், நீதி மற்றும் அமைதி திருப்பீட அவை உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, 2017ம் ஆண்டு, இந்த அவை, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத் திருப்பீட அவை என்ற புதிய பெயருடன் இயங்கத் துவங்கியது என்பதும், இந்த அவையின் முதல் தலைவராக கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 November 2021, 13:26