தேடுதல்

Giàvera விழாவை ஏற்பாடு செய்பவர்கள் சந்திப்பு Giàvera விழாவை ஏற்பாடு செய்பவர்கள் சந்திப்பு 

Giàvera விழா, வரவேற்பு கலாச்சாரத்தை பரப்ப உதவி

பல்வேறு மக்கள் மற்றும், பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே சந்திப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், வட இத்தாலியின் Giàvera del Montello எனும் நகரில், 1996ம் ஆண்டில் Giàvera விழா ஆரம்பிக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இத்தாலியின் Giàvera del Montello  நகரில், பல்வேறு கலாச்சாரங்களைச் சார்ந்த மக்கள்  சந்திப்பதற்கு விழா ஒன்றை ஒவ்வோர் ஆண்டும் ஏற்பாடு செய்து நடத்திவரும் அவ்விழாக் குழுவின் ஏறத்தாழ நூறு பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 27, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து அவர்கள், புலம்பெயர்ந்தோருக்கு ஆற்றிவரும் பணிகளை ஊக்குவித்தார்.

இந்த விழாவில் பங்குபெறும் புலம்பெயர்ந்தோர் கழகங்கள், மற்றும் குழுக்களின் பட்டியலை வாசித்தபோது உண்மையிலேயே வியப்படைந்தேன் என்றுரைத்த திருத்தந்தை, மிகவும் முக்கியம்வாய்ந்த இத்தகைய விழா, நல்லிணக்கத்தால் கிடைக்கும் அனுபவத்திலிருந்து பிறப்பதாகும் என்று கூறியுள்ளார்.

Giavera விழாக் கொண்டாட்ட ஏற்பாடு, ஏதோ ஒரு கருத்தியலின் அடிப்படையில் ஒரு நாளில் பிறந்ததல்ல, மாறாக, புலம்பெயர்ந்தவர்கள், பல ஆண்டுகளாக, நாள்களாக, மாதங்களாகப் பகிர்ந்துகொண்ட அவர்களின் கதைகள், பிரச்சனைகள், மரபுகள், கலாச்சாரங்கள், மதநம்பிக்கை மனித மாண்பு போன்றவற்றினின்று பிறந்ததாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.  

இக்காலத்தில் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை அச்சமூட்டும் வகையில் அதிகரித்து வருவதாலும், சிலநேரங்களில் அது சிக்கலான சூழலைக் கொண்டிருப்பதாலும், சமுதாயத்தில், வரவேற்பு கலாச்சாரத்தைப் பரப்புவதற்கு உதவவேண்டிய தேவை உள்ளது என்றுரைத்த திருத்தந்தை, புலம்பெயர்ந்தோர், மக்களாக கருதப்படாமல், எண்களாக நோக்கப்படும் நிலையை எதிர்கொள்கின்றனர் என்று கவலைதெரிவித்தார்.

புலம்பெயர்ந்தோரின் முகங்கள், கதைகள், பாடல்கள், செபங்கள், கலைகள் போன்றவை வைக்கப்படும் இடங்கள் அதிகமாக தேவைப்படுகின்றன என்றும், இந்த விழாக் குழுவினர், அரசியல் தளங்களில் பொறுப்பானவர்களுக்கு, புலம்பெயர்ந்தோரின் எதார்த்தநிலையை எடுத்துரைத்து, அவர்களுக்கு உதவுமாறு தூண்டவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். 

Giàvera விழா

பல்வேறு மக்கள் மற்றும், பல்வேறு கலாச்சாரங்களுக்கு இடையே சந்திப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில், வட இத்தாலியின் த்ரேவிசோ மற்றும், வெனெத்தோ மாநிலத்தில் அமைந்துள்ள Giàvera del Montello எனும் நகரில், 1996ம் ஆண்டில் Giàvera விழா முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாண்டு ஜூலையில், இதன் 26வது விழா கொண்டாடப்பட்டது. த்ரேவிசோ மறைமாவட்டத்தின் புலம்பெயர்ந்தோர் மேய்ப்புப்பணிக்குப் பொறுப்பான அருள்பணி Bruno Baratto அவர்களால் இவ்விழா உருவாக்கப்பட்டது. இவ்விழாவில், நாற்பதுக்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் கழகங்கள் கலந்துகொள்கின்றன.

டுவிட்டர் செய்தி

மேலும், நம்மைச் சுற்றியுள்ள ஒழுங்குமுறையற்ற சூழல்களுக்கு மத்தியில், அச்சமின்றி இருப்போம், ஏனெனில் ஆண்டவர் நம் நடுவே இருக்கிறார். நற்கனிகளைக் (யோவா.15:5) கொணர்வதற்காக, கடவுள் நம் மத்தியில் தொடர்ந்து அற்புதங்களை நடத்தி வருகிறார், இந்த உறுதியிலிருந்தே கிறிஸ்தவ மகிழ்ச்சி பிறக்கின்றது என்ற சொற்கள், நவம்பர் 27, இச்சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் பதிவாகியிருந்தன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 November 2021, 15:21