Fratelli tutti கால்பந்தாட்டக் குழு Fratelli tutti கால்பந்தாட்டக் குழு  

ரோமா, Fratelli tutti கால்பந்தாட்டக் குழுக்கள் சந்திப்பு

'ஒதுக்கப்படுதலுக்கு எதிராக ஓர் உதை' என்ற பெயரில் நிகழும் கால்பந்து விளையாட்டு, உரோம் நகரில் வாழும் Roma நாடோடி இனத்தவர், சமுதாயத்தில் ஒருங்கிணைக்கப்படும் முயற்சிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட ஒரு சூழலை எதிர்கொள்ளும் மக்களுக்கு, விளையாட்டு நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்திருப்பது, அமைதியான நல்லிணக்கமே, ஒருங்கிணைந்த வாழ்வுக்கு வழி என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 20, இச்சனிக்கிழமையன்று, இரு விளையாட்டு குழுக்களிடம் கூறினார்.

உரோம் நகரின் "Lazio" விளையாட்டு கழகத்தின் பயிற்சி மையத்தில், நவம்பர் 21, இஞ்ஞாயிறன்று, கால்பந்து விளையாட்டை மேற்கொள்ளவுள்ள, Roma என்றழைக்கப்படும் நாடோடி இனத்தவரின் உலகளாவிய அமைப்பைச் சேர்ந்தவர்களால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கால்பந்தாட்டக் குழு, திருத்தந்தையின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள Fratelli tutti கால்பந்தாட்டக் குழு ஆகிய இரு குழுக்களின் விளையாட்டு வீரர்களிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்குழுக்கள் விளையாடவிருப்பது குறித்து தான் பெரிதும் மகிழ்வதாகக் குறிப்பிட்டார்.

திருப்பீடத்தின் கிளமெந்தினா அறையில் தன்னை சந்திக்க வந்திருந்த இந்த 70 விளையாட்டு வீரர்களுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தையின் மெய்காப்பாளர்களான சுவிஸ் வீரர்கள், திருப்பீடத் தலைமையகத்தில் பணியாற்றும் அருள்பணியாளர்கள், வத்திக்கானில் பணியாற்றுவோர் மற்றும் அவர்களது பிள்ளைகள் ஆகிய சிலரும், ரோமா இனத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்களோடு விளையாடவுள்ளனர் என்று கூறினார்.

மேலும், மனவளர்ச்சி குன்றிய சில இளம் கால்பந்து வீரர்கள், மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் அமைப்பின் ஓர் உறுப்பினர், லெஸ்போஸ் தீவில் கிரேக்க புலம்பெயர்ந்தோர்  மையத்திலிருந்து இத்தாலிக்கு வந்துள்ள புலம்பெயர்ந்தோர் மூவர் ஆகியோர், இந்த விளையாட்டின் ஓடுதளத்தில், அனைவரும் உடன்பிறந்தோர் என்று பொருள்படும் 'Fratelli tutti' என்று எழுதப்பட்ட சட்டைகளை அணிந்துகொண்டு இருப்பார்கள் என்பதையும் திருத்தந்தை குறிப்பிட்டார்.

ரோமா இனத்தவரை, திருத்தந்தையின் விளையாட்டுக் குழுவின் ஒரு பகுதியாக  இணைத்திருப்பதன் வழியே, சமுதாயத்தில் அனைவரும் இணைக்கப்படுதல் என்பது, எளிமையானது மற்றும், சாதாரணமானது என்று, விளையாட்டு உலகிற்கு உணர்த்திய கலாச்சாரத் திருப்பீட அவைக்கும், உரோம் மறைமாவட்டத்திற்கும், தன் நன்றியையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

ரோமா, Fratelli tutti கால்பந்தாட்டக் குழுக்கள் சந்திப்பு
ரோமா, Fratelli tutti கால்பந்தாட்டக் குழுக்கள் சந்திப்பு

இவ்வாண்டு செப்டம்பர் 14ம் தேதி, சுலோவாக்கியா நாட்டின் Košice நகரில், ரோமா இன சமுதாயத்தைச் சந்தித்தபோது தான் கூறியதை நினைவுபடுத்திய திருத்தந்தை, அவ்வினத்தவரின் வரலாறு, உண்மைநிலை, அச்சங்கள் மற்றும் நம்பிக்கைகளை நன்கு அறிந்திருக்கின்றேன் என்றும், இதனாலேயே, 'ஒதுக்கப்படுதலுக்கு எதிராக ஓர் உதை' ("A kick against exclusion”) என்ற பெயரில் நிகழும் இந்த கால்பந்து விளையாட்டு திட்டத்தை தான் மிகுந்த பாசத்தோடு ஊக்குவித்தேன் என்றும் கூறினார்.

சந்திப்பு மற்றும், சமத்துவத்தின் இடமாகவும், நட்புறவுப் பாலங்கள் வழியாக, சமுதாயத்தைக் கட்டியெழுப்பக்கூடிய இடமாகவும் விளையாட்டு உள்ளது என்றும், அமைதியான நல்லிணக்க வாழ்வுக்கு ஒருங்கிணைதல் முக்கியம் என்றும், இதற்கு அடிப்படையாகத் தேவைப்படுவது, சிறாருக்குக் கல்வி என்றும், ரோமா இனத்தவரிடம் திருத்தந்தை கூறினார்.

'ஒதுக்கப்படுதலுக்கு எதிராக ஓர் உதை' ("A kick against exclusion”) என்ற பெயரில் நிகழும் இந்த கால்பந்து விளையாட்டு, உரோம் நகரில் ஒதுக்கப்பட்டவர்களாய் வாழும் Roma நாடோடி இனத்தவர், உரோம் நகரச் சமுதாயத்தில் ஒருங்கிணைக்கப்படும் முயற்சிகளுக்குத் தேவையான நிதியைத் திரட்டும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 November 2021, 14:48