தேடுதல்

சைபீரியா சுரங்க விபத்து - மீட்புப்பணிகளில் ஈடுபட்டோர் சைபீரியா சுரங்க விபத்து - மீட்புப்பணிகளில் ஈடுபட்டோர் 

சைபீரியா சுரங்க விபத்து குறித்து அனுதாபம்

சைபீரியாவில் இடம்பெற்ற துயர்நிறை சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கு திருத்தந்தையின் செப உறுதி

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

சுரங்கத்தொழிலாளர்கள், மற்றும், அவர்களை மீட்கச்சென்றவர்கள் என, 51 பேரை பலிவாங்கியுள்ள இரஷ்ய சுரங்க விபத்து குறித்து, தன் ஆழ்ந்த இரங்கலையும், அருகாமையையும் வெளியிட்டு, அந்நாட்டிற்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் பெயரால் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களால், இரஷ்ய கூட்டமைப்பின் தலைவர், விளாடிமிர் புட்டின் அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இரங்கல் தந்தியில், சைபீரியாவில் இடம்பெற்ற துயர்நிறை சுரங்க வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள், மற்றும், அவர்களின் உறவினர்களுக்கு, செப உறுதியை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்து தொடர்புடைய மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவரோடும் தன் ஒருமைப்பாட்டை அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறையமைதியும் வல்லமையும் அவர்கள்மீது பொழியப்படுமாறு இறைவேண்டல் செய்வதாகவும் கூறியுள்ளார்.

இரஷ்யாவின் சைபீரியாவிலுள்ள Kemerovo பகுதி Listvyazhnaya நிலக்கரிச் சுரங்கத்தில், நவம்பர் 25, கடந்த வியாழனன்று, மீத்தேன் வாயு வெடிவிபத்தில், 46 சுரங்கத்தொழிலாளர்கள், 5 மீட்புப்பணியாளர்கள் என, 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 60 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

2010ம் ஆண்டிற்குப்பின், இரஷ்யாவில் இடம்பெற்றுள்ள இம்மிகக் கொடிய விபத்தின்போது, Listvyazhnaya நிலக்கரிச் சுரங்கத்தில், 285 பேர் பணியாற்றிக்கொண்டிருந்தனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2021, 14:49