தேடுதல்

IOM நிறுவனத்தின் 70வது ஆண்டு நிறைவு – திருத்தந்தை செய்தி

நமக்கு இடைஞ்சலாக இருப்பனவற்றை தூக்கியெறியும் கலாச்சாரத்தில் வளர்ந்துவிட்ட நாம், அதே கண்ணோட்டத்தோடு குடியேற்றத்தாராகளைக் காணாமல் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட் பெருந்தொற்று இவ்வுலகிற்கு அளித்துவரும் பல சவால்களையும் மீறி, ஐ.நா.வின், குடியேற்றத்தாரருக்குரிய பன்னாட்டு நிறுவனம் ஆற்றிவரும் பணிகளில் எழுபது ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது, குடியேற்றம் என்ற உலகளாவிய எதார்த்தத்திற்கு நாம் வழங்கக்கூடிய மாண்புமிக்க பதிலிறுப்பை உணர்த்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிறுவனத்திற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

ஐ.நா.அவையால், 1951ம் ஆண்டு, உருவாக்கப்பட்ட IOM எனப்படும் குடியேற்றத்தாரருக்குரிய பன்னாட்டு நிறுவனம், இவ்வாண்டு, தன் 70வது ஆண்டு நிறைவைச் சிறப்பிப்பதையொட்டி, இந்நிறுவனத்திற்கு, திருத்தந்தை அளித்துள்ள செய்தியை, திருப்பீடச்செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், ஒரு காணொளி வழியே, வாசித்தார்.

IOM நிறுவனத்தின் உறுப்பினராக, திருப்பீடம்

பத்து ஆண்டுகளுக்கு முன், IOM நிறுவனத்தின் நோக்கம், செயல்பாடுகள் ஆகியவற்றால் வெகுவாக கவரப்பட்டு, அப்போதையத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், இந்நிறுவனத்தின் ஓர் உறுப்பினராக, திருப்பீடத்தை இணைத்தார் என்பதை, தன் செய்தியின் துவக்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களை மையப்படுத்தி உருவாக்கப்படும் இயக்கங்களின் நன்னெறி கண்ணோட்டம், மக்களுக்காகப் பணியாற்றும் அமைப்புக்களோடு தன்னையே இணைத்துக்கொள்ளுதல், மதம், இனம் என்ற வேறு எந்த பாகுபாடும் இன்றி, மனிதர்கள் என்ற ஒரே குடும்பத்திற்குத் தேவையான உதவிகள் செய்தல் ஆகிய மூன்று கூறுகளின் அடிப்படையில், கத்தோலிக்கத் திருஅவை, IOM நிறுவனத்தின் ஓர் உறுப்பினராக இணைந்துள்ளது என்பதை, திருத்தந்தை இச்செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குடியேற்றம் என்பது, நம் அனைவரின் வரலாறு

குடியேற்றம் என்ற எதார்த்தம், குடியேற்றதாரரை மட்டும் சார்ந்தது அல்ல, மாறாக, அது, நம் அனைவரையும், நம் கடந்த காலம், நிகழ் காலம் எதிர் காலம் ஆகிய மூன்று காலங்களையும் இணைக்கும் வரலாற்றையும் சார்ந்தது என்று தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் சந்திக்கும் குடியேற்றதாரர்களை எண்ணிக்கைகளாகக் காணாமல், அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முகமும் அடையாளமும் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளவும், நமக்கு இடைஞ்சலாக இருப்பனவற்றை தூக்கியெறியும் கலாச்சாரத்தில் வளர்ந்துவிட்ட நாம் அதே கண்ணோட்டத்தோடு குடியேற்றத்தாராகளைக் காணாமல் இருக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று, திருத்தந்தை, தன் செய்தியில் அழைப்பு விடுத்துள்ளார்.

அடுத்தவரை நம்மைப்போல் நேசிக்க...

அடுத்தவரை நம்மைப்போல் நேசிக்கவேண்டும் என்றும், அடுத்தவர், நமக்கு செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பதை, நாம் அடுத்தவருக்குச் செய்யவேண்டும் என்றும், அனைத்து மதங்களும் கூறியுள்ளன என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த உன்னத கோட்பாடுகள் குடியேற்றதாரரை நாம் எவ்விதம் நடத்தவேண்டும் என்பதை சொல்லித்தருகின்றன என்று கூறினார்.

குடியேற்றதாரர்களுக்கு அரசுகள் என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி அடிக்கடி எழுப்பப்பட்டு, விவாதங்கள் நடைபெறுகின்றன என்று கூறியத் திருத்தந்தை, அதே வேளையில், குடியேற்றதாரர்கள், நமக்கும், நம் நாட்டுக்கும் என்ன செய்யக்கூடும் என்பதையும் சிந்திக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஒவ்வொரு நாட்டிலும் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் பணிகளில் குடியேற்றதாரர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்பதைக் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு நாடும், குறிப்பாக, இந்த கோவிட் பெருந்தொற்று காலத்தில், குடியேற்றதாரர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமல் போனது வேதனைக்குரியது என்று கூறினார்.

குற்றக்கும்பல்களின் பிடியில் சிக்கி...

தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறவேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்தப்படும் குடியேற்றத்தாரருக்கு அவர்கள் தஞ்சம் புகும் அரசுகள் சரியான வசதிகளை உருவாக்கத் தவறும்போது, இந்நிலையால் விரக்தியடையும் குடியேற்றதாரர்கள், குறிப்பாக, இளையோர், குற்றக்கும்பல்களின் பிடியில் சிக்கி துன்புறுகின்றனர் என்பதை, திருத்தந்தை, தன் செய்தியில் ஓர் எச்சரிக்கையாக விடுத்துள்ளார்.

குடிபெயர்ந்தோர் அனைவருமே மனிதர்கள் என்ற அடிப்படை காரணத்தினால், அவர்களை வரவேற்பது, அவர்களை காப்பது, அவர்களை ஏனைய மக்களோடு ஒருங்கிணைப்பது ஆகிய பணிகளில், கத்தோலிக்கத் திருஅவையும், அதைச் சார்ந்த அனைத்து நிறுவனங்களும் முழுமையாக ஈடுபடும் என்ற வாக்குறுதியை, தன் செய்தியின் இறுதியில் வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், IOM நிறுவனத்திற்கு தன் ஆசீரை வழங்குவதாகக் கூறி, இச்செய்தியை நிறைவுசெய்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2021, 14:47