திருத்தந்தை பிரான்சிஸ், தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன்  திருத்தந்தை பிரான்சிஸ், தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன்  

கொரிய தீபகற்பத்தில் ஒப்புரவுக்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகள்

வட கொரிய எல்லையில் உள்ள முள்வேலியின் கம்பிகளால் அமைக்கப்பட்ட சிலுவை ஒன்றை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார், தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

தென் கொரியக் குடியரசுத் தலைவர் மூன் ஜே-இன் (Moon Jae-in) அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அக்டோபர் 29, இவ்வெள்ளியன்று, திருப்பீடத்தில் தனித்தனியே சந்தித்துப் பேசினார்.

திருத்தந்தையை தனித்தனியே சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார், தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன்.

தென் கொரியக் கத்தோலிக்கத் திருஅவை, வட கொரியா மற்றும், தென் கொரியா ஆகிய இரு நாடுகளுக்கிடையே உரையாடலையும் ஒப்புரவையும் வளர்ப்பதில் இடைவிடாமல் முயற்சித்து வருவது குறித்தும், பொதுவான அர்ப்பணமும், நன்மனமுமே, ஒருமைப்பாடு மற்றும், உடன்பிறந்த உணர்வு வழியாக, கொரியத் தீபகற்பத்தில் அமைதி மற்றும் முன்னேற்றத்தை பேணி வளர்ப்பதற்கு வழியமைக்கும் என்பது குறித்தும், இச்சந்திப்புகளில் பேசப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

தென் கொரியாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், அந்நாட்டின் கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவற்றில் நிலவும் நிறைவானச் சூழல் குறித்தும், இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

கொரியத் தீபகற்ப பகுதியின் தற்போதைய நிலவரம், மனிதாபிமான விவகாரங்கள் உள்ளிட்ட, சில பொதுவான உலகளாவிய விவகாரங்களும் இச்சந்திப்புக்களில் பேசப்பட்டன.

தன் துணைவியாருடன் 25 நிமிடங்கள் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள், கொரியத் தீபகற்பத்தில், அமைதியை ஊக்குவிக்குப்பதற்கு உதவியாக, திருத்தந்தை, வடகொரியாவுக்குத் திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார் என்று செய்திகள் கூறுகின்றன.

உரோம் நகரில் அக்டோபர் 30 இச்சனிக்கிழமை, 31 ஞாயிறு ஆகிய இரு நாள்களில் நடைபெறும் G20 நாடுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு, கிளாஸ்கோ செல்வதற்காக வந்துள்ள பயணத்தில், தென் கொரிய அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள், திருத்தந்தையையும் சந்தித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2021, 16:07