திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு திருத்தந்தை பிரான்சிஸ், முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு  

முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயுவுக்கு திருத்தந்தை வாழ்த்து

முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், கீழை ஆர்த்தடாக்ஸ் சபையின் கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தையாக, 1991ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

அக்டோபர் 22, இவ்வெள்ளியன்று, கான்ஸ்தாந்திநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருஅவையின் தலைமைப்பணியில் முப்பது ஆண்டுகளை நிறைவுசெய்துள்ள முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நல்வாழ்த்து மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக தங்களது வாழ்விலும், பணியிலும் ஆண்டவர் பொழிந்துள்ள அளப்பரிய ஆசீர்வாதங்களுக்கு, தங்களோடு சேர்ந்து, நானும் நன்றி கூறுகிறேன் என்று குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லா நலன்களையும் நல்கும் கடவுள், தங்களுக்கு நற்சுகத்தையும், ஆன்மீக மகிழ்வையும், தங்களின் மிகப்பெரிய பணிகள் அனைத்திலும் அருளை நிரம்பப் பொழியவும் வேண்டும் என்று செபிப்பதாகக் கூறியுள்ளார்.

உடன்பிறந்த நட்புணர்வு

2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில், தான் கத்தோலிக்கத் திருஅவையின்  தலைமைப்பணிக்குத் திருப்பொழிவுசெய்யப்பட்ட நிகழ்வில், முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் கலந்துகொண்டதையும், தங்கள் இருவருக்கும் இடையே நிலவும் ஆழமான பிணைப்பு, உடன்பிறந்த நட்புணர்வாக மாறியுள்ளதையும், திருத்தந்தை தன் மடலில் நினைவுகூர்ந்துள்ளார்.

உரோம் நகரில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வுகளில் முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் கலந்துகொண்டபோது, இன்றைய மனிதக் குடும்பம் முழுவதும் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் மத்தியில், நமது பொதுவான மேய்ப்புப்பணி கடமை பற்றி தான் பகிர்ந்துகொண்டதையும், அம்மடலில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதசமுதாயத்தின் வருங்காலத்திற்கு அர்ப்பணம்

படைப்பைப் பாதுகாக்கவும், மனித சமுதாயத்திற்குத் தேவைப்படும் ஆன்மீகப் புதுப்பித்தலுக்கும் முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தன் ஆதரவைத் தெரிவித்துள்ள திருத்தந்தை, பெருந்தொற்று உருவாக்கியுள்ள பல்வேறு நெருக்கடிகள் பற்றியும், அச்சூழலில் ஆன்மீக மனமாற்றம் தேவை என்பது பற்றியும் எடுத்துரைத்து வருவது பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார்.

பிறரன்பு, மற்றும் உண்மையில் இடம்பெறும் கலந்துரையாடலே, கிறிஸ்தவ சபைகளுக்கிடையே மீண்டும் ஒப்புரவு ஏற்படவும், முழு ஒன்றிப்பை மீண்டும் உருவாக்கவும் இயலக்கூடிய ஒரே பாதை என்று, முதலாம் பர்த்தலோமேயு அவர்கள் கூறியுள்ளதற்கு, திருத்தந்தை நன்றியைத் தெரிவித்துள்ளார்.

முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு

முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், கீழை ஆர்த்தடாக்ஸ் சபையின் கான்ஸ்தாந்திநோபிள் முதுபெரும்தந்தையாக, 1991ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி,  தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு நவம்பர் 2ம் தேதி, அவர், திருத்தூதர் அந்திரேயாவின் 270வது வழிவருபவராகத் திருப்பொழிவுசெய்யப்பட்டார். மத சுதந்திரம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் போன்றவை பாதுகாக்கப்படுவதற்காக உழைத்துவரும் முதுபெரும்தந்தை முதலாம் பர்த்தலோமேயு அவர்கள், “பசுமை முதுபெரும்தந்தை” எனவும் அழைக்கப்படுகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2021, 15:10