ஓர் ஆயரின் வாழ்வு, மற்றவர்களுக்கு நெருக்கமாக இருப்பது

திருஅவையில், ஆயர்கள், இறை இரக்கத்தையும், கனிவையும், பிரதிபலிப்பதன் வழியாக, கடவுளுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஓர் ஆயரின் வாழ்வு என்பது, மற்றவர்களுக்கு சேவைபுரிவதும், மற்றவர்களுக்கு நெருக்கமாக இருப்பதுவுமாகும் என, அக்டோபர் 18, இஞ்ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், இரு அருள்பணியாளர்களை, ஆயர்களாகத் திருநிலைப்படுத்திய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை  பிரான்சிஸ்.

2007ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை இரு திருத்தந்தையர்களின் திருவழிபாட்டுச் சடங்குகளைத் தயாரிப்பதில் தலைமைப் பொறுப்பில் இருந்து, தற்போது இத்தாலியின் Tortona ஆயராக நியமிக்கப்பட்டுள்ள அருள்பணி குய்தோ மரீனி அவர்களையும், 2018ம் ஆண்டு முதல் திருப்பீடத்தின் அருள்பணியாளர் பேராயத்தில் பணிபுரிந்து, தற்போது, திருத்தந்தையால் அப்பேராயத்தின் செயலராக நியமிக்கப்பட்டுள்ள சிலே நாட்டு அருள்பணி Andrés Gabriel Ferrada Moreira அவர்களையும், ஆயர்களாக திருநிலைப்படுத்திய திருப்பலியில் இவ்வாறு மறையுரையாற்றினார் திருத்தந்தை.

திருஅவையில் ஓர் ஆயரின் பணி குறித்து தன் சிந்தனைகளை மறையுரையில் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, மக்களுக்கு மீட்பைக் கொணரும் நோக்கத்தில், உலகில் நற்செய்தியை அறிவிக்க இயேசுவால் அனுப்பப்பட்ட திருத்தூதர்கள், இயேசுவின் பணியை தலைமுறை தலைமுறையாக தொடர்வதற்கு உதவுவதாக, தங்கள் உடனுழைப்பாளர்களின் தலையில் கைகளை வைத்து, தூய ஆவியாரின் கொடைகளை வழங்கினர் என எடுத்துரைத்தார்.

வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நற்செய்தியை அறிவியுங்கள் என்ற அழைப்பை இரு புதிய ஆயர்களிடமும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தைக்கு நெருக்கமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

திருஅவையில் விசுவாசம், சேவை, மற்றும் பிறரன்பைக் கட்டிக்காப்பவர்களாகச் செயல்படும் ஆயர்கள், இறை இரக்கத்தையும் கனிவையும் பிரதிபலிப்பதன் வழியாக கடவுளுக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் எனவும் விண்ணப்பித்தார்.

ஓர் ஆயரின் முதல் கடமை, செபத்தின் வழியாக இறைவனுக்கு நெருக்கமாக இருப்பதாகும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்களின் இரண்டாவது பணி, ஏனைய ஆயர்களுடன் நெருக்கமாக இருப்பது என்றும், மூன்றாவதாக, தங்கள் அருள்பணியாளர்களை ஒரு தந்தையைப்போல் நடத்த வேண்டியது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மந்தைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும், ஏனெனில், அவர்களிலிருந்தே ஆயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் திருத்தந்தை நினைவூட்டினார்.

எப்போதும் நமக்கு நெருக்கமாக இருக்கும் இறைவனைப் பின்பற்றி, அனைவருக்கும் நெருக்கமாக இருந்து பணியாற்றும் பாதையில் புதிய ஆயர்கள் வளர்வதற்கு இறைவேண்டல் செய்து, தன் மறையுரையை நிறைவுசெய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 October 2021, 14:26