Prešov நகரில் Byzantine வழிபாட்டுமுறை திருவழிபாடு Prešov நகரில் Byzantine வழிபாட்டுமுறை திருவழிபாடு 

Prešov நகரில் Byzantine வழிபாட்டுமுறை திருவழிபாடு

2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சுலோவாக்கியாவில், 65.8 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் உள்ளனர். இவர்களில் 62 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்கர். 3.8 விழுக்காட்டினர், Byzantine வழிபாட்டுமுறை கிரேக்க கத்தோலிக்கர்.

மேரி தெரேசா: வத்திக்கான்

செப்டம்பர் 14, இச்செவ்வாய் காலை 8.10 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிராத்திஸ்லாவாவிலிருந்து Kosice நகருக்கு, 50 நிமிட விமானப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். சுலோவாக்கியா நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான Kosice, ஹங்கேரி நாட்டுக்கு 20 கிலோ மீட்டர் தூரத்தில், Metalliferi மலைத்தொடருக்கு அருகில், Hornád ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது, கிழக்கு சுலோவாக்கியாவின் பொருளாதார, மற்றும் கலாச்சார மையமுமாகும். இந்நகரின் விமானத்தளத்தில், அந்நகரின் பேராயர் Bernard Bober, நகர மேயர், மற்றும், உள்ளூர் அதிகாரிகள் திருத்தந்தையை வரவேற்றனர். அவர்களோடு சிறிதுநேரம் உரையாடியபின்னர், அந்நகரிலிருந்து, 47 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Prešov நகருக்கு, காரில் பயணம் மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். சுலோவாக்கியாவின் மூன்றாவது பெரிய Prešov நகரத்தின் Mestska' விளையாட்டு மைதானத்தில் புனித கிறிஸ்சோஸ்தம் யோவான் அவர்களின் Byzantine வழிபாட்டுமுறை திருவழிபாட்டைத் துவக்கி வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ். Byzantine வழிபாட்டுமுறை கத்தோலிக்கரின் பேராயராகிய Ján Babjak அவர்கள் தலைமையில், எண்ணற்ற கிரேக்க மற்றும், இலத்தீன் வழிபாட்டுமுறை அருள்பணியாளர்கள் இணைந்து இவ்வழிபாட்டை நிறைவேற்றினர்.

Byzantine வழிபாட்டுமுறை திருவழிபாடு
Byzantine வழிபாட்டுமுறை திருவழிபாடு

செப்டம்பர் 14, இச்செவ்வாய், திருச்சிலுவை உயர்த்தப்பட்ட திருநாள். இலட்சக்கணக்கான விசுவாசிகள் கலந்துகொண்ட இந்த விழா வழிபாட்டில், திருத்தந்தையும் திருச்சிலுவையை மையப்படுத்தி மறையுரையாற்றினார். சிலுவை ஒரு நூல் என்று, ஒரு சில புனிதர்கள் கூறியுள்ளனர். புதிய நூலை வாங்கி, அதன் வெளிப்புறத்தை மட்டும் பார்த்துவிட்டு, அதை அலமாரியில் வைத்துவிடக்கூடாது. அதைத் திறந்து படிக்கவேண்டும். அதேவண்ணம், சிலுவையை ஓர் அடையாளமாக நம் வீடுகளிலோ, கழுத்திலோ, வாகனத்திலோ, மாட்டிவைத்தால் மட்டும் போதாது. அந்த சிலுவையையும், அதில் அறையப்பட்டவரின் அன்பையும் ஆழமாக உணரவேண்டும். சிலுவையை, வணக்கத்திற்குரிய ஒரு பொருளாக மட்டும் மாற்றிவிடுவதோ, அல்லது, நம் மதம், மற்றும், சமுதாய நிலையின் அரசியல் அடையாளமாக மாற்றிவிடுவதோ கூடாது என்று திருத்தந்தை தன் மறையுரையில் கூறினார். ஏறத்தாழ 2 மணி நேரம் நடைபெற்ற இவ்வழிபாட்டின் இறுதியில், திருத்தந்தை, திருப்பலி மேடைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த, பெரிய அன்னை மரியா படத்தின் முன்பாக நின்று செபித்தார். அனைவரையும் ஆசீர்வதித்து, அங்கிருந்து காரில் Košice நகருக்குப் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். தன்னாட்சி அரசைக்கொண்ட அந்நகரின் புனித சார்லஸ் பொரோமேயோ அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரிக்குச் சென்று மதிய உணவருந்தினார், திருத்தந்தை. அக்கல்லூரிக்கு புனித யோசேப்பு திருவுருவம் ஒன்றையும் அவர் பரிசாக வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2021, 14:32