தேடுதல்

கோவிட்-19 சூழலில் பிலிப்பீன்ஸ் மருத்துவமனை கோவிட்-19 சூழலில் பிலிப்பீன்ஸ் மருத்துவமனை 

தானத்தின் வழியாக, வாழ்வு கலாச்சாரத்தை வலுப்படுத்துகிறோம்

எலும்பு மஜ்ஜை தானத்தை ஊக்குவிக்கும் உலகளாவிய அறக்கட்டளையின் முயற்சியால், 2014ம் ஆண்டு, செப்டம்பரில் எலும்பு மஜ்ஜை தானம் செய்வோர் உலக நாள் உருவாக்கப்பட்டது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நோயுற்ற மனிதர்களைக் காப்பாற்றுவதற்குத் தேவையான தானங்களை வழங்குவதன் வழியாக, உதவுதல், மற்றும், வாழ்வுக் கலாச்சாரம் வலுவடைய உதவுகிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 18, இச்சனிக்கிழமையன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 18, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட, எலும்பு மஜ்ஜை தானம் செய்வோர் உலக நாளை (World Marrow Donor Day) மையப்படுத்தி, தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை, நமது தானத்தின் வழியாக, மற்றவரது நோயும், துன்பமும் நீங்கி, அவர்களது வாழ்வு நலம்பெற உதவுகிறோம் என்றும், உதவி, கொடுத்தல், நம்பிக்கை, மற்றும், வாழ்வு ஆகிய கலாச்சாரத்தை வலுப்படுத்த உதவுகிறோம் என்றும் கூறியுள்ளார்.

வாழ்வு புனிதமானது என்ற புரிதலை உறுதிசெய்வதற்கு, ஒருமைப்பாடு மற்றும், மனத்தாராளமிக்க அன்பின் இத்தகைய தெளிவான அடையாளங்கள் சமுதாயத்திற்குத் தேவைப்படுகின்றன என்றும், திருத்தந்தை, அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.  

எலும்பு மஜ்ஜை தானத்தை ஊக்குவிக்கும் உலகளாவிய அறக்கட்டளையின் முயற்சியால், 2014ம் ஆண்டு, செப்டம்பரில் எலும்பு மஜ்ஜை தானம் செய்வோர் உலக நாள் உருவாக்கப்பட்டது. அன்றிலிருந்து, இந்த உலக நாள், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் மாதம் மூன்றாவது சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வு, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது.

‘எலும்பு மஜ்ஜை தானம்’ அல்லது 'ஸ்டெம்செல் உயிரணுக்கள் தானம்', Leukemia, Lymphoma, சிறார் புற்றுநோய் போன்ற உயிரை அச்சுறுத்தும் சில நோய்களுக்குத் தேவைப்படுகிறது. கோவை மாசிலாமணி என்ற தாயின் குழந்தை, தலசீமியா எனப்படும் அரிய வகை ஹீமோகுளோபின் நோயால் பாதிக்கப்பட்டிருக்க, அக்குழந்தைக்கு இரத்த மாற்று அறுவை சிகிச்சைத் தேவைப்பட்டுள்ளது. எனவே மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், அந்த தாய் ஆற்றிய எலும்பு மஜ்ஜை தானத்தால், அவரது குழந்தையும், மற்றொரு குழந்தையும் காப்பாற்றப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன. இந்த தானத்தில், இடுப்பு பெல்விக் எலும்பில் ஊசி செலுத்தி அதன் மூலம் மஜ்ஜை சிறிதளவு எடுக்கப்படுகிறது.

கண்தானம், இரத்த தானம், உடல் உறுப்பு தானம், தாய்ப்பால் தானம் போன்ற பல தானங்களையடுத்து, கடந்த பல ஆண்டுகளாக, எலும்பு மஜ்ஜை தானமும் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2021, 15:11