Lampedusa தீவில் புலம்பெயர்ந்தோரைச் சந்திக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்i Lampedusa தீவில் புலம்பெயர்ந்தோரைச் சந்திக்கின்றார் திருத்தந்தை பிரான்சிஸ்i 

அனைவரும் “நாம்” என்ற உணர்வில் வாழ…

இந்த சோதனை காலத்திற்குப்பின், “மற்றவர்” என்ற எண்ணம், நம்மில் ஒருபோதும் இருக்கக்கூடாது, மாறாக, “நாம்” என்ற எண்ணமே மேலோங்கி இருக்கவேண்டும் -திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இந்த பெருந்தொற்று சோதனைக் காலத்திற்குப்பின் “மற்றவர்” என்ற எண்ணத்திலிருந்து “நாம்” என்ற உணர்வில் வாழ்வதற்கு எல்லாம்வல்ல இறைவனை மன்றாடுவோம் என்று,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் கூறியுள்ளார்.

செப்டம்பர் 26, இஞ்ஞாயிறன்று 107வது புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்ந்தோர்  உலக நாள் கடைப்பிடிக்கப்படுவதை மையப்படுத்தி செப்டம்பர் 25, இச்சனிக்கிழமையன்று தன் டுவிட்டர் செய்தியில் எழுதியுள்ள திருத்தந்தை, நாம் எல்லாரும் சகோதரர் சகோதரிகள், இந்த சோதனை காலத்திற்குப்பின், “மற்றவர்” என்ற எண்ணம், நம்மில் ஒருபோதும் இருக்கக்கூடாது, மாறாக, பன்மையில் வளமையுள்ள, “நாம்” என்ற மிகப்பெரும் எண்ணமே மேலோங்கி இருக்கவேண்டும் என்பதற்கு கடவுளிடம் மன்றாடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

முதுபெரும்தந்தை Raphaël Bedros

மேலும், செப்டம்பர் 24, இவ்வெள்ளி காலையில், அர்மேனியத் திருஅவையின் புதிய முதுபெரும்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிலிசியாவின் Raphaël Bedros XXI Minassian அவர்களை சந்தித்து கலந்துரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரது புதிய நியமனத்தை ஏற்றுக்கொள்ளும் மடல் ஒன்றையும் அவருக்கு அளித்தார்.

செப்டம்பர் 23, இவ்வியாழனன்று தேர்ந்தெடுக்கப்பட்ட முதுபெரும்தந்தை Raphaël Bedros அவர்கள் திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்டதுபோல், திருத்தந்தையும் “Ecclesiastica Communio” (ecclesiastical communion) என்ற ஒப்புதலையும், அந்த மடல் வழியாக அளித்துள்ளார்.

அர்மேனியக் கத்தோலிக்கர் வாழ்கின்ற லெபனோன் மற்றும், சிரியாவில் மக்கள் எதிர்கொள்ளும் துன்பங்களை தன் மடலில் நினைவுகூர்ந்துள்ள திருத்தந்தை, நன்மனம் கொண்ட அனைவரும், குறிப்பாக, கிறிஸ்தவர்கள், தங்களுக்கிடையே வேறுபாடுகள் மற்றும், தனிமையை விலக்கி, அனைவரும் உடன்பிறந்த உணர்வுடன் வாழுமாறு அழைப்புவிடுத்தார்.

அர்மேனியத் திருஅவை, முதலில் லெபனோன் நாட்டிலும், பின்னர் உரோம் நகரிலும் பேரவையை நடத்தி, புதிய முதுபெரும்தந்தையைத் தேர்ந்தெடுத்துள்ளது. திருப்பீடத்தோடு முழு ஒன்றிப்பில் செயல்படும் 22 கீழை வழிபாட்டுமுறை திருஅவைகளில், அர்மேனியக் கத்தோலிக்கத் திருஅவையும் ஒன்றாகும். இத்திருஅவை தன் 1,700 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாற்றில் அதிகத் துன்பங்களை அடைந்துள்ளது. இத்திருஅவையின் தலைமையகம், லெபனோன் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 September 2021, 14:49