தேடுதல்

திருத்தந்தை பிரான்சிஸ் திருத்தந்தை பிரான்சிஸ்  

சமுதாயத்தில் எவரும் தனிமையை உணராமல் இருப்பதற்கு...

உலக அளவில், நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில், 2019ம் ஆண்டில் WHO நிறுவனம், உலக நோயாளிகள் பாதுகாப்பு நாளை உருவாக்கியது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஒரு சமுதாயம், தன்னில் மிகவும் நலிவடைந்த, மற்றும், துன்புறும் உறுப்பினர்களை, உடன்பிறந்த அன்புணர்வில், எவ்வளவு அக்கறையுடன் பராமரிக்கின்றதோ, அந்த அளவுக்கு, அச்சமுதாயம், மனிதமுள்ளதாக கருதப்படும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 17, இவ்வெள்ளியன்று, தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தியில் கூறியுள்ளார்.

நம் சமுதாயத்தில் எவரும் தனிமையை அல்லது, கைவிடப்பட்ட நிலையை உணராமல் இருப்பதற்காக, நாம் எல்லாரும் இந்த இலக்கை எட்டுவதற்கு, முயற்சிகளை மேற்கொள்வோம் என்றும், திருத்தந்தை அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 17, இவ்வெள்ளியன்று, உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்பட்டதைமுன்னிட்டு, உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் என்ற ஹாஷ்டாக்குடன் (#PatientSafetyDay), தன் டுவிட்டர் செய்தியில், இவ்வாறு எழுதியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக அளவில், நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது,  அவர்களின் பாதுகாப்புக்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தூண்டுவது, நோயாளிகள் எதிர்கொள்ளும் இன்னல்களைக் குறைப்பது போன்ற காரணங்களுக்காக, 2019ம் ஆண்டு, மே மாதம் நடைபெற்ற, WHO எனப்படும், உலக நலவாழ்வு நிறுவனத்தின் 72வது  பேரவையில், உலக நோயாளிகள் பாதுகாப்பு நாள் உருவாக்கப்பட்டது.

"பாதுகாப்பான மகப்பேறு மற்றும், புதிதாகப் பிறந்த குழந்தையின் பராமரிப்பு" என்ற கருப்பொருளோடு, இவ்வாண்டு உலக நோயாளிகள் பாதுகாப்பு நாளைக் கடைப்பிடித்த WHO நிறுவனம், "பாதுகாப்பான மற்றும், மதிப்புமிக்க பிரசவத்திற்கு இப்போதே செயல்படுங்கள்" என்று, அனைத்து மருத்துவ கூட்டமைப்புகளையும் வலியுறுத்தியுள்ளது.

WHO நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, கர்ப்பம் மற்றும் பிரசவத்துடன் தொடர்புடைய பிரச்சனைகளால், உலகில் ஒவ்வொரு நாளும் 810 பெண்கள் உயிரிழக்கின்றனர். அதோடு ஒவ்வொரு நாளும், ஏறத்தாழ 6,700 குழந்தைகள் இறக்கின்றனர். இவ்வெண்ணிக்கை, ஐந்து வயதிற்குட்பட்ட மொத்த குழந்தைகளின் இறப்பில், 47 விழுக்காடாகும். மேலும், ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ இருபது இலட்சம் குழந்தைகள், பிரசவத்தின்போது இறந்தே பிறக்கின்றன. தக்க மருத்துவப் பாதுகாப்பு அளிக்கப்பட்டால், இவ்விறப்புக்கள் தடுத்துநிறுத்தக்கூடியவையே என்றும், WHO நிறுவனம் கூறியுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2021, 15:13