தேடுதல்

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பேரணி காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பேரணி  

பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, நம்மால் ஏதாவது செய்யமுடியும்

உலகின் வெப்பநிலையை 1.5 செல்சியுஸ் டிகிரிக்குக் கொண்டுவருவதற்கு, COP26 கிளாஸ்கோ மாநாட்டிற்குமுன் நாடுகள் தங்களின் திட்டங்களை சமர்ப்பிக்குமாறும் விண்ணப்பம் - ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

நம் பிரச்சனைகளைக் களைவதற்கு, நம்மால் ஏதாவது செய்யமுடியும் என்று, படைப்பின் காலத்தை மையப்படுத்தி, செப்டம்பர் 18, இச்சனிக்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“எல்லாவற்றிற்கும் எப்போதும் ஒரு வழி உள்ளது, நம் நடவடிக்கைகளை எப்போதும் நம்மால் வழிநடத்த முடியும், நம் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எப்போதும் ஏதாவது நம்மால் செய்ய இயலும் என்பதை உணர்ந்துள்ளோம் என்று நம்புகிறேன்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியில் பதிவாகியுள்ளன.

இம்மாதம் முதல் தேதியிலிருந்து, அக்டோபர் 4ம் தேதி வரை சிறப்பிக்கப்பட்டுவரும் படைப்பின் காலத்தையொட்டி, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், செய்திகளை வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிளாஸ்கோ நகரில், வருகிற அக்டோபர் 31ம் தேதியிலிருந்து, நவம்பர் 12ம் தேதிவரை நடைபெறவிருக்கும், காலநிலை மாற்றம் குறித்த உலகத் தலைவர்களின் 26வது உச்சி மாநாட்டையொட்டி, திருத்தந்தையும், ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். 

காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கு, 191 நாடுகளில், தேசிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் பற்றி, செப்டம்பர் 17, இவ்வெள்ளியன்று கருத்து தெரிவித்த கூட்டேரஸ் அவர்கள், பணக்கார நாடுகள், பசுமைஇல்ல வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த இப்போதே தங்களை அர்ப்பணிக்கவில்லையெனில், இந்த நூற்றாண்டு முடிவதற்குள், இந்த உலகத்தின் வெப்பநிலை 2.7 செல்சியுஸ் டிகிரியாக உயரும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதில் 113 நாடுகள், 2030ம் ஆண்டுக்குள், பசுமைஇல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை 12 விழுக்காடாகக் குறைப்பதற்கு எடுத்துள்ள தீர்மானத்தையும் வரவேற்றுள்ளார், கூட்டேரஸ்.

உலகின் வெப்பநிலையை 1.5 செல்சியுஸ் டிகிரிக்குக் கொண்டுவருவதற்கு, நாடுகள் தங்களின் திட்டங்களை, COP26 கிளாஸ்கோ மாநாட்டிற்குமுன் சமர்ப்பிக்குமாறும், கூட்டேரஸ் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். (UN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 September 2021, 15:18