சுலோவாக்கியாவின் ரோமா நாடோடி இன குடும்பம் ஒன்றுடன் திருத்தந்தை சுலோவாக்கியாவின் ரோமா நாடோடி இன குடும்பம் ஒன்றுடன் திருத்தந்தை  

Lunik IXல் திருத்தந்தை, ரோமா இன மக்கள் சந்திப்பு

ரோமா இனத்தின் சிறார், ஆரம்பக் கல்வியைக்கூட முடிப்பதில்லை. விரைவிலேயே பெற்றோராகி விடுகின்றனர். இம்மக்களின் கலாச்சார வாழ்வுமுறையால், இவர்கள் அதிகம் புறக்கணிக்கப்படுகின்றனர்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

செப்டம்பர் 14, இச்செவ்வாய் மாலை 3.45 மணிக்கு, Košice நகரின் 22 மாவட்டங்களில் ஒன்றாகிய Lunik IX பகுதிக்குக் காரில் சென்றார் திருத்தந்தை. இப்பகுதியில், சுலோவாக்கியா நாட்டின் ரோமா நாடோடி இனத்தவர் அதிகமாக வாழ்கின்றனர். தற்போது Lunikல், ஏறத்தாழ 4,300 ரோமா இனத்தவர் வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் போதுமான எரிவாயு, மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளின்றி ஏழ்மை நிலையில் உள்ளனர். ரோமா இனச் சிறார் மற்றும், இளையோர் மத்தியில், சலேசிய சபையினரோடு இணைந்து பணியாற்றும் Alexandra Voláková என்ற தன்னார்வலர், அம்மக்கள் மத்தியில் தான் ஆற்றும் பணிகள் பற்றி வத்திக்கான் செய்திகளிடம் விவரித்துள்ளார். இந்த இனத்தின் சிறார், ஆரம்பக் கல்வியைக்கூட முடிப்பதில்லை. விரைவிலேயே பெற்றோராகி விடுகின்றனர். சிறுமிகள் தங்களின் எதிர்காலம் குறித்து அதிகம் கவலைப்படுகின்றனர். இம்மக்களின் கலாச்சார வாழ்வுமுறையால் இவர்கள் அதிகம் புறக்கணிக்கப்படுகின்றனர். வேலைவாயப்புகள் கிடையாது. திருத்தந்தையைச் சந்திப்பதற்கு இவர்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருந்தனர். இவ்வாறு Alexandra அவர்கள் கூறியுள்ளார்

இச்செவ்வாய் உள்ளூர் நேரம் மாலை 4 மணிக்கு, இந்திய இலங்கை நேரம், இரவு 7.30 மணிக்கு ரோமா இன மக்களைச் சந்தித்தார், திருத்தந்தை. அம்மக்களுக்கென்று சலேசிய சபையினர் பணியாற்றும் மையத்தில், அம்மைய இயக்குனர், இரு ரோமா இனச் சிறார் திருத்தந்தையை வரவேற்றனர். இச்சந்திப்பில் முதலில், அம்மைய இயக்குனர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர் ரோமா இனத்தவர் ஒருவரும், தொழில்துறையில் இணைக்கப்பட்ட ரோமா இன ஒரு குடும்பமும் தங்கள் சாட்சியங்களை வழங்கினர். அதற்குப்பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். அதிகாரம், பணம், அக்கறையற்ற நிலை என்பவைகளில் நாம், கடவுளின் திருப்பெயரை தவறாகப் பயன்படுத்துகிறோம். கடவுளின் திருப்பெயர் அவமதிப்புக்கு உள்ளாக்கப்படாமல் இருப்பதற்கு நாம், ஒருவருக்கொருவர் உதவுவோம் என்று திருத்தந்தை கூறினார். இச்சந்திப்பிற்குப்பின்னர், Košice நகரில் Lokomotiva அரங்கில் இளையோரைச் சந்திப்பது, பின்னர் பிராத்திஸ்லாவா செல்வது ஆகிய இரண்டும், இத்திருத்தூதுப் பயணத்தின் 3ம் நாள் பயணத்திட்டத்தில் உள்ளன.

அருள்பணி Jaroslav Lajčiak, திருத்தூதுப் பயணம் பற்றி..

Košice உயர்மறைமாவட்டத்தின் குருகுல முதல்வர் அருள்பணி Jaroslav Lajčiak அவர்கள், திருத்தந்தையின் இப்பயணம் பற்றியும், சுலோவாக்கியா கத்தோலிக்கர் பற்றியும், தன் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். திருத்தந்தை துவக்கிவைத்த Byzantine வழிபாட்டு முறை, திருஅவை இரு நுரையீரல்களால் சுவாசிக்கிறது என்பதையும், திருஅவையின் ஒன்றிப்பையும் காட்டுகிறது. சுலோவாக்கியா, கத்தோலிக்க விழுமியங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள ஒரு சமுதாயம் வாழ்கின்ற நாடாகும். 2011ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, சுலோவாக்கியாவில், 65.8 விழுக்காட்டினர் கத்தோலிக்கர் உள்ளனர். இவர்களில் 62 விழுக்காட்டினர் ரோமன் கத்தோலிக்கர். 3.8 விழுக்காட்டினர், கிரேக்க கத்தோலிக்கர். அந்நாட்டின் 53,97,036 மக்கள் தொகையில், ஏறத்தாழ 2,06,871 பேர், Byzantine வழிபாட்டுமுறையைப் பின்பற்றும், சுலோவாக்-கிரேக்க கத்தோலிக்கத் திருஅவையைச் சார்ந்தவர்கள். சுலோவாக்கியா மக்களை கிறிஸ்தவ விசுவாசத்தில் ஆழப்படுத்தவும், அவர்களுக்கு நம்பிக்கையளிக்கவும், நாட்டை ஆசீர்வதிக்கவும் திருத்தந்தை, எம் நாட்டிற்கு வந்துள்ளார். இவ்வாறு அருள்பணி Jaroslav அவர்கள் கூறியுள்ளார்.

செப்டம்பர் 15, இப்புதன், துயருறும் அன்னை மரியா திருநாள். சுலோவாக்கியா நாட்டின் Sastin நகரில், ஏழு துயரங்களின் துயருறும் அன்னை மரியா தேசிய திருத்தலம் அமைந்துள்ளது. இப்புதனன்று Sastin நகர் சென்று, அன்னை மரியா விழாவைச் சிறப்பிப்பதோடு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தை நிறைவு செய்கிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

14 September 2021, 15:10