52வது திருநற்கருணை மாநாட்டிற்கான தயாரிப்புகள் இடம்பெற்றபோது... 52வது திருநற்கருணை மாநாட்டிற்கான தயாரிப்புகள் இடம்பெற்றபோது... 

வரும் வார திருத்தூதுப் பயணத்திற்கு செபிக்க திருத்தந்தை அழைப்பு

ஹங்கேரியில் 52வது நற்கருணை மாநாட்டு நிறைவுடன் துவங்கும் திருப்பயணம், ஸ்லோவாக்கியாவில் 15ம் தேதி அந்நாட்டின் பாதுகாவலரான, துயருறும் அன்னை மரியாவின் திருவிழாக் கொண்டாட்டங்களுடன் நிறைவுக்கு வரும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா நாடுகளில், செப்டம்பர் 12ம் தேதி ஞாயிறு முதல், 15ம் தேதி வரை திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அப்பயணம் வெற்றியடைய விசுவாசிகளின் செபத்திற்கு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 5, இஞ்ஞாயிறு முதல், ஹங்கேரியில் இடம்பெற்றுவரும் 52வது திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை, வருகிற ஞாயிறன்று நிறைவேற்றச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்றே ஸ்லோவாக்கியா நாட்டிற்குச் சென்று அந்நாட்டில் தன் மூன்று நாள் பயணத்தைத் துவக்குவார்.

ஹங்கேரியில் 52வது நற்கருணை மாநாட்டை நிறைவுச் செய்வதுடன் துவங்கும் தன் திருப்பயணம், ஸ்லோவாக்கியாவில் 15ம் தேதி அந்நாட்டின் பாதுகாவலரான, துயருறும் அன்னை மரியாவின் திருவிழாக் கொண்டாட்டங்களுடன் நிறைவுக்கு வரும் என்பதை, தன் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் எடுத்துரைத்தார்.

'இயேசுவை நோக்கியப் பாதையில் அன்னை மரியாவோடும் யோசேப்போடும் இணைந்து' என்ற தலைப்பில் இடம்பெறும் இந்த திருத்தூதுப்பயணத்தில், அனைத்துலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலி, கிரேக்க கத்தோலிக்க மறைசாட்சிகளின் நினைவு வழிபாடு, ரோமா என்ற நாடோடி இனத்தலைவர்களுடன் சந்திப்பு போன்றவை முக்கிய இடம் வகிக்க உள்ளன.

செப்டம்பர்  4ம் தேதி சனிக்கிழமையன்று  அர்ஜென்டினா நாட்டில் பிரான்சிஸ்கன் துறவி Mamerto Esquiú அவர்கள் அருளாளராக அறிவிக்கப்பட்டதையும், திருஅவையில் அன்னை தெரேசாவின் திருவிழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பிக்கப்பட்டதையும்  தன் மூவேளை செபஉரையின்போது நினைவூட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 September 2021, 15:11