அமைதிக்காக தலைவர்கள்  அமைப்பினர் சந்திப்பு அமைதிக்காக தலைவர்கள் அமைப்பினர் சந்திப்பு 

அமைதிக்குரிய அர்ப்பணம், இக்காலத்திற்கு அதிகம் தேவை

உலகில் அமைதியைக் கட்டியெழுப்பும் பணியில், எவரும் ஒதுக்கப்படாமல், எல்லாரையும் கைவினைஞர்களாக ஈடுபடுத்துவது அவசியம் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

இன்றைய உலகம், எண்ணற்ற அரசியல், மற்றும், சுற்றுச்சூழல் தொடர்புடைய நெருக்கடிகளை எதிர்கொள்ளும்வேளை, அமைதியை ஏற்படுத்துவதற்குரிய அர்ப்பணம், எக்காலத்தையும்விட இக்காலத்தில் அதிகம் தேவைப்படுகின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  அமைதிக்காகப் பணியாற்றும், உலகளாவிய அமைப்பு ஒன்றிடம் கூறினார்.

செப்டம்பர் 4, இச்சனிக்கிழமை காலையில், திருப்பீடத்தில், தன்னை சந்திக்க வந்திருந்த, “அமைதிக்காக தலைவர்கள் (Leaders pour la Paix)” என்ற உலகளாவிய அமைப்பின் 16 பிரதிநிதிகளுக்கு உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்று அனைவரிலும், குறிப்பாக, ஏழைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்களை எடுத்துரைத்தார்.

இன்றையச் சமுதாயத்தில் நிலவும் முக்கிய பிரச்சனைகளைக் களைவதற்கு, ஆட்சியாளர்களுக்கும், குடிமக்களுக்கும் உதவவேண்டிய சவாலை, இந்த அமைப்பினர்  எதிர்கொள்கின்றனர் என்றும், பிரச்சனைகளின் அடிப்படை காரணங்கள் பற்றிய தெளிவை உருவாக்குவதன் வழியாக, சமுதாய, மற்றும், அரசியல் வாழ்வில் முக்கிய பங்காற்ற முடியும் என்றும், திருத்தந்தை கூறினார்.

இந்த அமைப்பினருக்கு மிகவும் விருப்பமான, அமைதி பற்றிக் கற்றுக்கொடுப்பதற்கு இதுவும் ஒரு வழி என்றுரைத்த திருத்தந்தை, பெருந்தொற்று காலத்தில் இடம்பெற்ற நீண்டகால தனிமை, மற்றும், சமூகப் பதட்டநிலை பற்றியும், அக்காலம் முடிவுற்றபின்னர், மேற்கொள்ளப்படவேண்டிய அரசியல் செயல்திட்டங்கள் பற்றியும் குறிப்பிட்டார்.

பெருந்தொற்று முடிவுற்ற காலம், சிறந்த அரசியலை ஊக்குவிப்பதற்கு நல்லதொரு வாய்ப்பாக அமையும் எனவும், சிறந்த அரசியல் இன்றி, உலகம் என்ற குழுமத்தில், மக்களும், நாடுகளும், சமுதாய நட்புறவில் வாழத்தூண்டும், உடன்பிறப்பு உணர்வை எட்ட இயலாது எனவும், திருத்தந்தை கூறினார்.  

உலகில் அமைதியைக் கட்டியெழுப்பும் பணியில், எவரும் ஒதுக்கப்படாமல், எல்லாரையும் கைவினைஞர்களாக ஈடுபடுத்துவது அவசியம் என்பதை வலியுறுத்திக் கூறிய திருத்தந்தை, இப்பணி, கலாச்சாரம், மற்றும், நிறுவனம் ஆகிய இரு நிலைகளில் இடம்பெறவேண்டும் என்று கூறினார்.

மனிதரின், குறிப்பாக, புண்பட்டும், புறக்கணிக்கப்பட்டும் இருக்கும் மனிதரின் மாண்பு மற்றும், அவர்களின் வரலாற்றை மதிக்கும் கலாச்சாரமும், நம் சகோதரர், சகோதரிகளுக்குச் செவிமடுத்து, அவர்களை வரவேற்கும், மற்றும், அவர்களில் நம்பிக்கையை ஏற்படுத்தும், சந்திப்புக் கலாச்சாரமும் ஊக்குவிக்கப்படவேண்டும் என்றும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

நிறுவனங்களைப் பொருத்தவரை, உரையாடலும், பல்முனை ஒத்துழைப்பும் பேணி வளர்க்கப்படவேண்டும் என்றும், இவையனைத்துமே, துன்புறும் மக்களுக்கு உதவுகின்ற, செயல்களில் வெளிப்படவேண்டும் என்றும் பரிந்துரைத்த திருத்தந்தை, இந்த அமைப்பினரின் பணிக்கு நன்றி தெரிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தினார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 September 2021, 13:25