ஹங்கேரி ஆயர்கள், கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் சந்திப்பு ஹங்கேரி ஆயர்கள், கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் சந்திப்பு 

ஹங்கேரி ஆயர்கள், கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் சந்திப்பு

ஹங்கேரி நாட்டு 12 கிறிஸ்தவ சபைகளின் பெயரில் திருத்தந்தையை வரவேற்பதாக தன் உரையைத் தொடங்கிய ஆயர் Steinbach அவர்கள், ஹங்கேரியில் உலக திருநற்கருணை மாநாடு நடப்பது, கிறிஸ்தவர்களாகிய எமக்கு ஓர் ஆசீர்வாதமாக உள்ளது என்று கூறினார்.

மேரி தெரேசா: வத்திக்கான்

ஹங்கேரி நாட்டின் அரசுத்தலைவர் János Áder, பிரதமர் Viktor Orbán, உதவிப் பிரதமர் Zsolt Semjén ஆகியோரோடு திருத்தந்தை நடத்திய கலந்துரையாடல், உள்ளூர் நேரம் இஞ்ஞாயிறு காலை 9.25 மணிக்கு நிறைவுற்றது. பின்னர், நுண்  கலைகள் அருங்காட்சியகத்திலுள்ள எழுச்சி என்ற அறையில், அந்நாட்டு ஆயர்களைச் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஹங்கேரி நாட்டு ஆயர்களைச் சந்தித்தபின்னர், அதே அருங்காட்சியகத்தில், அந்நாட்டின் இவாஞ்சலிக்கல் லூத்தரன் சபை, சீர்திருத்த சபை, கால்வனிஸ்ட் சபை உட்பட, 12 கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகள், யூதமதப் பிரதிநிதிகள் என, ஏறக்குறைய ஐம்பது பேரைச் சந்தித்து உரையாற்றினார், திருத்தந்தை பிரான்சிஸ். நான் 15 வயது நிரம்பியவர் அல்ல, எனவே அமர்ந்துகொண்டு உரையாற்றுகிறேன், மன்னிக்கவும் என்று சொல்லி, திருத்தந்தை உரையைத் துவக்கினார். திருத்தந்தை உரையாற்றுவதற்கு முன்பாக, ஹங்கேரி நாட்டு கிறிஸ்தவ சபைகள் அவையின் தலைவரான, கால்வனிஸ்ட் சபை ஆயர் József Steinbach அவர்களும், அந்நாட்டு யூதமதக் குழுமத்தின் தலைவர் ரபி Róbert Fröhlich அவர்களும், திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினர். ஹங்கேரி நாட்டு 12 கிறிஸ்தவ சபைகளின் பெயரில் திருத்தந்தையை வரவேற்பதாக தன் உரையைத் தொடங்கிய ஆயர் Steinbach அவர்கள், ஹங்கேரியில் உலக திருநற்கருணை மாநாடு நடப்பது, கிறிஸ்தவர்களாகிய எமக்கு ஓர் ஆசீர்வாதமாக உள்ளது என்றார். திருநற்கருணையின் மேன்மை பற்றி எடுத்துரைத்த ஆயர் Steinbach அவர்கள், ஆண்டவர் அன்பின் இக்கொடை. நாம் ஒருவர் ஒருவரை அன்புகூரவும், கடவுளின் படைப்பையும், நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியையும் பாதுகாப்பதற்கு நாம் ஒன்றிணைந்து செபித்து, செயல்படவும் உதவுகிறது என்றுரைத்து, திருத்தந்தைக்காகவும், கிறிஸ்தவர்களின் பொதுவான சான்று வாழ்வுக்காகவும், ஹங்கேரி கிறிஸ்தவ சபைகள் செபிப்பதாக உறுதி கூறினார்.  ஹங்கேரி நாட்டு கிறிஸ்தவ சபையினர், மற்றும், யூதமதப் பிரதிநிதிகளோடு நடத்திய சந்திப்பை நிறைவுசெய்து, பூடபெஸ்ட் தியாகிகள் வளாகத்தில், 52வது உலக திருநற்கருணை மாநாட்டுத் திருப்பலியை நிறைவேற்றத் தயாரானார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2021, 14:52