தேடுதல்

புதன் மறைக்கல்வியுரை: இறைவேண்டல், நம்பிக்கையின் திருப்பயணம்

நாம் ஒன்றுசேர்ந்து பயணித்தால், உலகின் வருங்காலம் நம்பிக்கைக்குரியதாய் அமையும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான்

இத்தாலியில் கோவிட்-19 கட்டுப்பாட்டு விதிமுறைகள் சற்று தளர்த்தப்பட்டுள்ள சூழலில், உரோம் மாநகரில் சுற்றுலாப் பயணிகள், மற்றும், திருத்தலங்களைத் தரிசிக்கும் திருப்பயணிகள் ஆகியோரின் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. எனவே, செப்டம்பர் 22, இப்புதன் காலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் புதன் மறைக்கல்வியுரையைக் கேட்டு ஆசீர் பெறுவதற்கு, ஏராளமான மக்கள், வத்திக்கானின் திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தை நிறைத்திருந்தனர். இம்மக்களைச் சந்தித்து உரையாற்றுவதற்காக, இப்புதன் உள்ளூர் நேரம் காலை 9.15 மணியளவில் அந்த அரங்கத்திற்கு வந்தார், திருத்தந்தை பிரான்சிஸ். தந்தை, மகன், ஆவியாரின் பெயரால் ஆமென் என்று திருத்தந்தை இந்நிகழ்வைத் துவக்கி வைக்க, பவுலும் பர்னபாவும் அந்தியோக்கியா நகரில் நற்செய்தி அறிவித்தது பற்றிக் கூறும் திருத்தூதர் பணிகள் 13ம் பிரிவிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட்டது. பின்னர், திருத்தந்தையும், இம்மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை, ஹங்கேரியின் தலைநகர் பூடபெஸ்ட், மற்றும் சுலோவாக்கியா நாட்டிற்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் பற்றிய பசுமையான நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். 

பவுலும் பர்னபாவும் துணிவுடன், “கடவுளின் வார்த்தையை உங்களுக்குத் தான் முதலில் அறிவிக்க வேண்டியிருந்தது. ஆனால், நீங்கள் அதனை உதறித் தள்ளி நிலை வாழ்வுக்குத் தகுதியற்றவர்கள் என்று உங்களுக்கு நீங்களே தீர்ப்பளித்துக் கொண்டீர்கள். எனவே, நாங்கள் பிற இனத்தாரிடம் செல்லுகிறோம். ஏனென்றால், ‘உலகம் முழுவதும் என் மீட்பை அடைவதற்கு நான் உன்னை வேற்றினத்தார்க்கு ஒளியாக ஏற்படுத்துவேன்’ என்று ஆண்டவர் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்” என்று எடுத்துக் கூறினார்கள். இதைக் கேட்ட பிற இனத்தார் மகிழ்ச்சியடைந்தனர்; ஆண்டவரின் வார்த்தையைப் போற்றிப் புகழ்ந்தனர். நிலைவாழ்வுக்காகக் குறிக்கப்பட்டோர் அனைவரும் நம்பிக்கை கொண்டனர். அப்பகுதியெங்கும் ஆண்டவரின் வார்த்தை பரவியது. சீடர்களோ தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டு மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள்.  (தி.ப.13,46-49.52)

மறைக்கல்வியுரை

அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, பூடபெஸ்ட், மற்றும், சுலோவாக்கியாவிற்கு நான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம், சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு, அதாவது, கடந்த புதன்கிழமையன்று நிறைவடைந்தது. அந்த எனது திருத்தூதுப் பயணம், இறைவேண்டல், வேர்களுக்குச் செல்தல், நம்பிக்கை ஆகிய மூன்று அம்சங்களைக் கொண்டிருந்தது. அப்பயணம் பற்றி இப்போது பேச விழைகிறேன் என, தன் மறைக்கல்வியுரையை இத்தாலியத்தில் துவக்கினார் திருத்தந்தை பிரான்சிஸ். அந்த உரையின் சுருக்கம்...

இந்த திருத்தூதுப் பயணம், எல்லாவற்றிக்கும் மேலாக, இறைவேண்டலின் திருப்பயணமாக இருந்தது. காரணம், இப்பயணம், பூடபெஸ்ட்டில் உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை நிறைவேற்றியது, சுலோவாக்கியாவின் Šaštin துயருறும் அன்னை மரியா திருத்தலத்தில், அந்த அன்னையின் திருநாளைக் கொண்டாடியது ஆகிய இரு இறைவேண்டல் நிகழ்வுகளால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கடவுளின் பிரசன்னம் பற்றிய உணர்வு பலவீனமடைந்துவரும் ஐரோப்பாவிற்கு, இறைவேண்டல், சான்றுபகர்தல், ஒப்புரவு ஆகிய மூன்றும் முக்கியமானவை. சிரில் மற்றும், மெத்தோடியஸ் ஆகிய இரு புனிதர்களின் முயற்சிகளால் நற்செய்தி விதைக்கப்பட்ட அப்பகுதியில், கிறிஸ்தவ நம்பிக்கையும், கிறிஸ்தவ வாழ்வும் ஆழமாக வேரூன்றப்படவேண்டும் என்பதை, Prešov நகரில் நாங்கள் நிறைவேற்றிய திருவழிபாட்டில், நினைவுபடுத்தினோம். ஏனெனில் அப்பகுதியில் மக்கள் அடைந்த துன்பம் மற்றும், மறைசாட்சியத்தால், அவை, பலநேரங்களில் போலியாக வாழப்படுகின்றன. Košice நகரில் உயிர்த்துடிப்புடைய மற்றும், ஆர்வமிக்க இளையோரையும், பல இளம் குடும்பங்களையும் கண்டேன். பிறரன்புப் பணிகள், மற்றும், தேவையில் இருப்போருக்கு உதவும் எடுத்துக்காட்டான வாழ்வு வாழ்கின்ற பலரைக் கண்டேன். இவ்வாறு இந்த திருத்தூதுப் பயணம் முழுவதிலும், வருங்காலம் பற்றிய நம்பிக்கையின் அடையாளங்களைக் கண்டேன். மேலும், யூதமத சகோதர, சகோதரிகளையும், பிற மதங்களைப் பின்பற்றுவோரையும், ரோமா குழுமத்தையும் சந்தித்தேன். வருங்காலம் நோக்கிய பாதை, உடன்பிறந்த உணர்வில், அனைவரும் ஒன்றுசேர்ந்து பயணிக்கும் ஒன்றாக இருக்கவேண்டும் என்பதை, இச்சந்திப்புக்களில் வலியுறுத்திக் கூறினேன். எனது இந்த திருத்தூதுப் பயணம், இயலக்கூடியதாய் அமைவதற்கு பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகூறுகிறேன். இப்பயணத்தில் விதைக்கப்பட்ட விதைகள், நிறைபலன்களை அளிக்கவேண்டும் என்று, என்னோடு சேர்ந்து இறைவனை மன்றாடுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.  

புதன் மறைக்கல்வியுரை 220921
புதன் மறைக்கல்வியுரை 220921

இவ்வாறு, இம்மாதம் 15ம் தேதி தான் முடித்துள்ள 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப்பயணம் பற்றி, இப்புதன் மறைக்கல்வியுரையில் எடுத்துரைத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பின்னர் திருப்பயணிகள் அனைவரையும் வாழ்த்தி, தனது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 September 2021, 14:48