தேடுதல்

சுலோவாக்கியா நாட்டிலிருந்து திரும்பிவந்த விமானப்பயணத்தில் திருத்தந்தை சுலோவாக்கியா நாட்டிலிருந்து திரும்பிவந்த விமானப்பயணத்தில் திருத்தந்தை 

சுலோவாக்கியாவிலிருந்து திரும்பிய விமானத்தில் திருத்தந்தை

கருக்கலைப்பு ஒரு கொலை என்ற கருத்தையும், திருஅவை, கருணை உள்ளத்தோடு தன் மேய்ப்புப்பணியை ஆற்றவேண்டுமே தவிர, அரசியல் வழிகளைப் பின்பற்றக்கூடாது என்ற கருத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கருக்கலைப்பு ஒரு கொலை என்ற கருத்தையும், எந்த ஒரு சிக்கலானச் சூழலிலும் திருஅவை, கருணை உள்ளத்தோடு தன் மேய்ப்புப்பணியை ஆற்றவேண்டுமே தவிர, அரசியல் வழிகளைப் பின்பற்றக்கூடாது என்ற கருத்தையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சுலோவாக்கியா நாட்டிலிருந்து திரும்பிவந்த விமானப்பயணத்தில் கூறினார்.

செய்தியாளர்களுடன் சந்திப்பு

செப்டம்பர் 12 கடந்த ஞாயிறு முதல், 15 இப்புதன் முடிய, ஹங்கேரி நாட்டின் பூடபெஸ்ட் நகரிலும், சுலோவாக்கியா நாட்டிலும் திருத்தந்தை மேற்கொண்ட 34வது திருத்தூதுப்பயணத்தின் இறுதியில், உரோம் நகருக்கு திரும்பிவந்த விமானப் பயணத்தில், ஒவ்வொரு பயணத்தின் இறுதியிலும் செய்வதுபோல், செய்தியாளர்களைச் சந்தித்து உரையாடினார்.

ஏறத்தாழ 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த கலந்துரையாடலில், ஹங்கேரி நாட்டின் அரசு அதிகாரிகளுடன் உரையாடல் நடத்தியது, யூத வெறுப்புணர்வு, தடுப்பூசியை பற்றிய கருத்து வேறுபாடுகள், மற்றும் கருக்கலைப்பை ஆதரிக்கும் அரசியல்வாதிகளுக்கு திருநற்கருணையத் தடுப்பது போன்ற பல்வேறு கருத்துக்களில், திருத்தந்தை, தன் கருத்துக்களைப் பதிவுசெய்தார்.

ஹங்கேரி நாட்டுக்கு திரும்பிச் செல்லும் ஆவல்

ஹங்கேரி நாட்டில் பூடபெஸ்ட் நகரில், ஒரு திருப்பலியை மட்டும் நிகழ்த்திவிட்டு, அந்நாட்டின் பிறபகுதிகளுக்கு திருத்தந்தை செல்லாதது குறித்து கேள்வி எழுந்தபோது, சுலோவாக்கியா நாட்டின் திருத்தூதுப் பயணம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பதையும், அவ்வேளையில், திருநற்கருணை உலக மாநாடு இடம்பெற்றதால், அந்த வாய்ப்பை இழந்துவிடாமல் இருக்க, தான் பூடபெஸ்ட் சென்றதாகவும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், விரைவில், அதாவது, அடுத்த ஆண்டு, அல்லது, அதற்கடுத்த ஆண்டு, ஹங்கேரி நாட்டுக்குச் செல்லும் தன் ஆவலை, அந்நாட்டு அரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.

தடுப்பூசி மருந்தைப்பற்றிய விவாதம்

கோவிட் பெருந்தொற்றைத் தடுப்பதற்கு தரப்படும் ஊசிமருந்தைப் பெறுவதில் உருவாகியுள்ள கருத்து வேறுபாடுகளைக் குறித்து எழுந்த கேள்விக்குப் பதில் அளித்த திருத்தந்தை, நம் குழந்தைப் பருவம் முதல், அம்மை, போலியோ என்ற நோய்களுக்கு எதிராக தடுப்பூசிகளைப் பெற்றுவருகிறோம் என்பதைச் சுட்டிக்காட்டி, ஒவ்வொரு தடுப்பூசியும் அறிமுகமான வேளையில், அதற்கு எதிரான கருத்துக்கள் எழுந்தன என்பதையும் குறிப்பிட்டார்.

பெருந்தொற்றை தடுப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள மருந்துகளைக் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகியிருப்பது, மக்களின் தயக்கத்திற்கு காரணம் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கர்தினால்கள் நடுவிலும் இந்த தடுப்பூசியைப் பெறுவதற்கு எதிர்ப்புகள் இருந்தன என்பதையும் குறிப்பிட்டபின், தற்போது, வத்திக்கானில், ஒரு சிறு குழுவினரைத்தவிர அனைவரும் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் என்று கூறினார்.

கருக்கலைப்பு ஒரு கொலை

இதையடுத்து, கருக்கலைப்பைக் குறித்தும், அதனை ஆதரிப்போருக்கு திருநற்கருணை வழங்கப்படலாமா கூடாதா என்பது குறித்தும் எழுந்த கேள்விக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடுதல் நேரம் ஒதுக்கி தன் பதிலை வழங்கினார்.

முதலில் திருநற்கருணையை யாருக்கும் மறுக்கலாமா என்ற கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, தன்னுடைய அருள்பணித்துவ வாழ்வில் இதுவரை தான் யாருக்கும் திருநற்கருணையை மறுத்தது இல்லை என்பதை திட்டவட்டமாகக் கூறியதோடு, மேய்ப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், அந்தந்த சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்பதே நல்லது என்பதையும் எடுத்துரைத்தார்.

அடுத்து, கருக்கலைப்பு பற்றி பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொரு கருவும் மனித உயிர். எனவே, அதை அழிப்பது, கொலைக்குச் சமம் என்று திட்டவட்டமாகக் கூறியதோடு, ஒரு பிரச்சனையைத் தீர்க்க மனித உயிரைப் பறிப்பது ஒருபோதும் அந்தப் பிரச்சனையைத் தீர்க்கப்போவதில்லை என்பதையும் எடுத்துரைத்தார்.

விலக்கிவைக்கப்பட்டவர்களுக்கு நற்கருணை

பல்வேறு காரணங்களுக்காக திருஅவையிலிருந்து விலக்கிவைக்கப்பட்டவர்களுக்கு நற்கருணை வழங்குவதுபற்றி பேசிய திருத்தந்தை, இதை, ஓர் இறையியல் பிரச்சனையாகக் காண்பதற்கு பதிலாக, மேய்ப்புப்பணி சார்ந்த ஒரு பிரச்சனையாகக் காண்பதையே இறைவன் விரும்புவார் என்று கூறினார்.

தவறான கொள்கைகள் பரவிய வேளைகளில், அதை பரப்பியவர்கள் திருஅவையிலிருந்து புறம் தள்ளப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இந்தப் பிரச்சனைகளில் அரசியல் நுழைந்தபோது, அவை பெரும் மோதல்களாக உருவாகி, பலர் இறைவனைவிட்டு விலகி செல்ல வழிவகுத்தது என்பதையும், விவிலியம் கூறும் இறைவன் மக்களுக்கு எப்போதும் நெருங்கியிருப்பவர் என்பதையும் வலியுறுத்திக் கூறினார்.

திருவிருந்தை நாடிவரும் ஒருவரை, மீண்டும் இறைவனுக்கு நெருக்கமாகக் கொணர்வது மட்டுமே, ஒரு மேய்ப்பரின் தலையாயக் கடமை என்றும், அதை அவர் எவ்வாறு ஆற்றுகிறார் என்பது, அவரவரைப் பொருத்தது என்றும் திருத்தந்தை தெளிவுபடுத்தினார்.

இத்தருணத்தில், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடல் வெளியான வேளையில், குறிப்பாக, பிரிந்து வாழும் தம்பதியரை, திருஅவை எவ்வாறு நெருங்கி அவர்களை வழிநடத்தவேண்டும் என்று கூறப்பட்டிருந்த கருத்துக்களுக்கு எழுந்த எதிர்ப்பைக் குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த கலந்துரையாடலில் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

16 September 2021, 14:36