தேடுதல்

ஆப்கான் புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை ஆப்கான் புலம்பெயர்ந்தோருடன் திருத்தந்தை  

ஆப்கான் புலம்பெயர்ந்தோருக்கு ஆறுதல் தந்த திருத்தந்தை

புலம்பெயர்ந்த மக்கள் பணிகளில் அமர்த்தப்படவும், அவர்களின் குழந்தைகள் கல்வி பெறவும், தொடர்ந்து உதவிவருகிறது, Meet Human என்ற கத்தோலிக்க அமைப்பு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஆப்கான் தலைநகரை தாலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து அங்கிருந்து வெளியேறிய மக்களுள் ஏறக்குறைய 15 பேரை சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கைது செய்யயப்படுவோம் என்ற அச்சத்தின் காரணமாக நான்கு பகலும் இரவும் அறைக்குளேயே அடைபட்டு கிடந்த மூன்று குடும்பங்கள், இத்தாலிக்குத் தப்பிவந்து பெர்கமோ பகுதியில் அடைக்கலம் தேடியதைத் தொடர்ந்து, அம்முன்று குடும்பங்களின் ஏழு குழந்தைகளையும் அவர்களின் பெற்றோரையும், செப்டம்பர் 22, இப்புதன் காலை மறைக்கல்வி உரைக்குமுன், சாந்தா மார்த்தா இல்லத்தில் சந்தித்து, அவர்களின் துயர்களுக்கு செவிமடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறுவனாக இருந்தபோதே ஆப்கானிலிருந்து தப்பிவந்து  இத்தாலியில் வாழ்ந்துவரும் எழுத்தாளர் Alì Ehsani அவர்கள், 'Meet Human' என்ற மனிதாபிமான அமைப்பின் உதவியுடன் தப்பிவந்த ஆப்கான் புலம்பெயர்ந்தோருக்கு புகலிடங்களை அமைத்துக் கொடுப்பதில் ஈடுபட்டுள்ளார்.

57 வயது நிரம்பிய Pary Gul என்பவரின் கணவரை துப்பாக்கியால் சுட்டு, தாலிபான்கள் கைது செய்து கொண்டுச் சென்றதைத் தொடர்ந்து, கிறிஸ்தவ மதத்தினரான தாங்களும் கொல்லப்படுவோம் என்ற அச்சத்துடன் அவரும் அவரின் மூன்று மகள்களும் ஒரு மகனும் நான்கு நாட்கள் அறைக்குள் மறைந்திருந்தபின் இரகசியமாக வெளியேறி இத்தாலிக்குள் குடிபுகுந்துள்ளனர்.

மேலும் இரு குடும்பங்களின் 5 குழந்தைகளுடன் திருத்தந்தையை புதன்கிழமைக் காலையில் திருத்தந்தையை சந்தித்த Pary Gul குடும்பத்தைச் சார்ந்தோர், தாலிபான்களால் கைது செய்யப்பட்ட தங்கள் குடும்பத் தலைவர் குறித்து இதுவரை எச்செய்தியும் இல்லை என்ற ஆழ்ந்த கவலையையும் திருத்தந்தையிடம் வெளிப்படுத்தினர்.

மனிதாபிமான உதவிகளை ஆற்றிவரும் Meet Human அமைப்பு, புலம்பெயர்ந்த மக்கள் மற்றவர்களிடையே உறவுகளை உருவாக்கவும், அவர்கள் பணிகளில் அமர்த்தப்படவும், அவர்களின் குழந்தைகள் கல்வி பெறவும், அவ்விதம் தங்கள் புது வாழ்வைத் துவங்கவும் தொடர்ந்து உதவிவருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 September 2021, 13:57