தேடுதல்

Passionist சபையைத் தொடங்கிய சிலுவையின் புனித பவுல் Passionist சபையைத் தொடங்கிய சிலுவையின் புனித பவுல்  

இறை இரக்கம், மனிதர் அனைவரையும் அணைத்துக்கொள்கின்றது

Passionists சபை துவக்கப்பட்டதன் 3வது நூற்றாண்டை முன்னிட்டு, உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் “பன்மைத்தன்மைகொண்ட உலகில் திருச்சிலுவையின் ஞானம்” என்ற தலைப்பில் 4 நாள் பன்னாட்டு இறையியல் மாநாடு நடைபெற்று வருகிறது

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

கடவுளின் இரக்கம், மனித சமுதாயம் முழுவதையும் அணைத்துக்கொள்கின்றது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருச்சிலுவை பற்றி நடைபெறும், பன்னாட்டு இறையியல் மாநாட்டிற்கு அனுப்பிய செய்தியில் கூறியுள்ளார்.

Passionists என பொதுவாக அழைக்கப்படும், இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகள் துறவு சபை துவக்கப்பட்டதன் 300வது ஆண்டை முன்னிட்டு, அச்சபையினரின் முயற்சியால், செப்டம்பர் 21, இச்செவ்வாயன்று உரோம் இலாத்தரன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் துவங்கியுள்ள நான்கு நாள் பன்னாட்டு இறையியல் மாநாட்டிற்கு அனுப்பியுள்ள செய்தியில், திருத்தந்தை, இவ்வாறு கூறியுள்ளார்.

“பன்மைத்தன்மைகொண்ட உலகில் திருச்சிலுவையின் ஞானம்” என்ற தலைப்பில் நடைபெறும் இம்மாநாடு, இக்காலத்தில் எதிர்கொள்ளப்படும் சவால்களை, சிலுவையின் ஞானத்தின் ஒளியில் புரிந்துகொள்வதற்கு உதவும் என்ற தன் நம்பிக்கையைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

சிலுவையின் புனித பவுல் அவர்கள், பாஸ்கா பேருண்மை, கிறிஸ்தவ வாழ்வின் மையமாகவும், Passionist துறவு குழுமத்தின் தனிவரமாகவும் இருக்கவேண்டும் என்ற ஆவலில் Passionists சபையை ஆரம்பித்தார் என்றும், இம்மாநாடு, அவரது ஆவலோடு ஒத்திருக்கின்றது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.

திருச்சிலுவையில் நம் கண்களைப் பதித்து இயேசுவைத் தியானிக்கும்போது, மனித வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திலும் இறை இரக்கம் நிறைந்திருப்பதையும், மனிதர் கடும் துயரை எதிர்கொள்ளும்வேளையிலும், இறையன்பு அவரைச் சென்றடைவதையும்  உணரமுடியும் எனவும் திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.    

எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் வாழ்கின்ற மக்களுக்கு, குறிப்பாக, மனித சமுதாயம் கடுமையான துயரங்களை எதிர்கொள்ளும் இக்காலத்தில், அனைத்து மக்களுக்கும், இயேசுவின் திருச்சிலுவை, மீட்பளிக்கும் ஊற்றாக உள்ளது என்று, திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.     

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியை, Passionists துறவு சபையின் தலைவர் அருள்பணி Joachim REGO அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 September 2021, 15:24