52வது உலக திருநற்கருணை மாநாட்டு நிறைவு திருப்பலி 52வது உலக திருநற்கருணை மாநாட்டு நிறைவு திருப்பலி 

52வது உலக திருநற்கருணை மாநாட்டு நிறைவு திருப்பலி

திருத்தந்தையை வரவேற்று உரையாற்றிய கர்தினால் பீட்டர் எர்டோ அவர்கள், பூடபெஸ்ட் பாலங்களின் நகரமாகும். பல்வேறு நாடுகளுக்கு இடையே பாலங்களை அமைப்பது, எங்களின் அழைப்பாக உணர்கிறோம் என்று கூறினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

செப்டம்பர் 12, இஞ்ஞாயிறு பகல் 11.30 மணிக்கு, பூடபெஸ்ட் நகரின் தியாகிகள் வளாகத்தில் 52வது உலக திருநற்கருணை மாநாட்டுத் திருப்பலியை நிறைவேற்றத் தயாரானார், திருத்தந்தை பிரான்சிஸ். அந்த வளாகத்தில் அமர்ந்திருந்த ஏறத்தாழ அத்தனை பேரும் வெண்மை நிறத்தில் உடைகளை அணிந்திருந்ததால், அந்த பிரமாண்ட வளாகமே வெண்மை நிறத்தில் காட்சியளித்தது. அந்த வளாகத்தில் திருத்தந்தை திறந்த காரில் நம்பிக்கையாளர் மத்தியில் வந்து, இலத்தீனில் திருப்பலியைத் துவக்கினார். எஸ்டர்காம்-பூடபெஸ்ட் பேராயர், கர்தினால் பீட்டர் எர்டோ அவர்கள், முதலில் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். பூடபெஸ்ட் பாலங்களின் நகரமாகும். பல்வேறு நாடுகளுக்கு இடையே பாலங்களை அமைப்பது, எங்களின் அழைப்பாக உணர்கிறோம். இத்திருப்பலியில், கிறிஸ்தவர் அல்லாதோரும், உலகம் பற்றிய மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்போரும் பங்குகொள்வது, காலத்தின் அறிகுறியாக உள்ளது. திருஅவை, நாடுகள் மத்தியில் கிறிஸ்துவின் தூதுவராகச் செயல்படுவதன் அடையாளமாகவும் இது உள்ளது என்று கர்தினால் எர்டோ அவர்கள், தன் வரவேற்புரையில் குறிப்பிட்டார். 52வது உலக திருநற்கருணை மாநாட்டு நிறைவு திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, உங்கள் வாழ்வில் கடவுளை மையத்தில் கொண்டிருங்கள், உடன்பிறந்த உணர்வை வளர்த்துக்கொள்ளுங்கள் என்று, அனைவரையும் கேட்டுக்கொண்டார்.

மறைப்பணியாளரின் திருச்சிலுவை

திருப்பலியின் இறுதியில், கர்தினால் எர்டோ அவர்கள், மறைப்பணியாளரின் திருச்சிலுவை ஒன்றை, திருத்தந்தைக்குப் பரிசாக வழங்கினார். இச்சிலுவை, தங்கள் பகுதியின் புனிதர்கள் மற்றும், மறைசாட்சிகளின் நினைவாக இருக்கட்டும் எனவும் கர்தினால் எர்டோ அவர்கள், திருத்தந்தையிடம் கூறினார். மேலும், உலக திருநற்கருணை மாநாடுகளின் பாப்பிறை அமைப்பின் தலைவரான, பேராயர் பியெரோ மரினி அவர்கள், திருத்தந்தைக்கு நன்றியுரையும் வழங்கினார். அதற்குப்பின், திருத்தந்தை, இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையாற்றினார். பின்னர், திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூடபெஸ்ட் தியாகிகள் வளாகத்தில் நிறைவேற்றிய திருப்பலியோடு 52வது உலக திருநற்கருணை மாநாடு நிறைவுக்கு வந்தது.

மறைப்பணியாளரின் சிலுவை
மறைப்பணியாளரின் சிலுவை

சுலோவாக்கியா நாட்டில் திருத்தந்தை

செப்டம்பர் 12, இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் பகல் 1.30 மணிக்கு, 52வது உலக திருநற்கருணை மாநாட்டை நிறைவுசெய்து, சுலோவாக்கியா நாட்டுக்குச் செல்வதற்காக,  பூடபெஸ்ட் பன்னாட்டு விமான நிலையம் சென்றார் திருத்தந்தை. அங்கு ஹங்கேரி நாட்டு உதவிப் பிரதமரும், மற்ற அரசுப் பிரதிநிதிகளும் திருத்தந்தைக்கு நன்றிசொல்லி, சுலோவாக்கியா நாட்டுக்கு வழியனுப்பி வைத்தனர். 50 நிமிடங்கள் விமானப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டுத் தலைநகர் பிராட்டிஸ்லாவா சென்றடைந்த திருத்தந்தைக்கு, விமானத்தளத்திலேயே அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நகரின் திருப்பீடத் தூதரகத்தில் கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து உரையாற்றுதல், இயேசு சபை குழுமத்தினரைச் சந்தித்தல் போன்ற நிகழ்ச்சிகளோடு, திருத்தந்தையின் 34வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகள் நிறைவுக்கு வருகின்றன. சுலோவாக்கியாவில் மூன்று நாள் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து, வருகிற புதன் மாலையில் வத்திக்கான் வந்துசேர்வார் திருத்தந்தை பிரான்சிஸ்.  

 

பூடபெஸ்ட் நகரம்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பூடபெஸ்ட்டில் நடைபெற்ற ஒரு வார 52வது உலக திருநற்கருணை மாநாட்டை நிறைவுசெய்வதற்காகவே அந்நகர் சென்றார். இந்த நகரத்தில் உலகின் நீளமான நதிகளில் ஒன்றான டான்யூப் பாய்கிறது. இந்நதியின் கிழக்குக் கரையில் பெஸ்ட்டும், மேற்குக் கரையில் புடாவும் அமைந்துள்ளன. டான்யூபு நதியின் கிழக்கில் உள்ள மார்கிட்டுப் பாலம், புடாவையும் பெஸ்ட்டையும் இணைக்கிறது. இந்நகர் ஓர் உலக பாரம்பரிய இடமும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தில் 9வது பெரிய நகரமான இங்கு ஹங்கேரியின் 33 விழுக்காட்டு மக்கள் வாழ்கின்றனர். 9ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஹங்கேரி இனத்தவர் இங்கு வரத்தொடங்கினர். ஆயினும், 1241-42ம் ஆண்டுகளில் மங்கோலியர்கள், இப்பகுதியை ஆக்ரமித்தனர். பின்னர் ஏறத்தாழ 150 ஆண்டுகள் ஒட்டமான்களால் ஆளப்பட்டது. 1696ம் ஆண்டில் புடா பகுதி கைப்பற்றப்பட்டு, பெஸ்ட்-புடா என்ற உலகளாவிய நகரமாக அது உருவானது. 1873ம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி, இவ்விரண்டும் இணைக்கப்பட்டு பூடபெஸ்ட் என்ற ஒரே நகரமாக மாறியது. இந்நகரம், ஹங்கேரியின் புதிய தலைநகரமாகவும், வர்த்தக நகரமாகவும் உள்ளது. இந்நகரில் “எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது” (தி.பா.87,7) என்ற தலைப்பில், 52வது உலக திருநற்கருணை மாநாடு, செப்டம்பர் 05, இஞ்ஞாயிறன்று துவங்கியது. இதற்குமுன், 1938ம் ஆண்டு, மே மாதம் 25 முதல் 30 வரை, 34வது உலக திருநற்கருணை மாநாடு பூடபெஸ்ட்டில் நடைபெற்றது. முதல் உலக திருநற்கருணை மாநாடு, 1881ம் ஆண்டு ஜூன் மாதம் 21ம் தேதி, பிரான்ஸ் நாட்டின் Lille நகரிலும், 38வது உலக திருநற்கருணை மாநாடு, 1964ம் ஆண்டு நவம்பர் 12 முதல் 15 வரை, பம்பாயிலும் நடைபெற்றன. இம்மாநாடு, அண்மை ஆண்டுகளில், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறப்பிக்கப்பட்டு வருகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2021, 14:39