தேடுதல்

ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் மறைக்கல்வி பணிக்குழுக்களுக்கு திருத்தந்தை உரையாற்றுகிறார் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் மறைக்கல்வி பணிக்குழுக்களுக்கு திருத்தந்தை உரையாற்றுகிறார் 

வேதியர்கள், திருநற்கருணையை பிரதிபலிக்கும் நற்செய்தி அறிவிப்பாளர்

மறைக்கல்வி ஆசிரியர்கள், நகருக்குள் சென்று, தங்களின் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுள்ள மக்களைச் சந்தித்து, உயிர்த்த இயேசு, ஒருபோதும் கைவிடுவதில்லை என்ற நம்பிக்கையை அவர்களில் ஊட்டவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருநற்கருணைப் பேருண்மையில் வேரூன்றி, மறைக்கல்வி அறிவிக்கப்படும்போது, அது நற்செய்தி அறிவிப்புப்பணியில் மிகுந்த பலன்களை அளிக்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 17, இவ்வெள்ளியன்று, வத்திக்கானில் தன்னை சந்திக்க வந்திருந்த, ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் மறைக்கல்வி பணிக்குழுக்களுக்குப் பொறுப்பானவர்களிடம் கூறினார்.

"புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணிக்கு, மறைக்கல்வி, மற்றும், மறைக்கல்வி ஆசிரியர்கள் (வேதியர்கள்)" என்ற தலைப்பில், புதிய வழி நற்செய்தி அறிவிப்புப் பணி திருப்பீட அவை நடத்தும் கூட்டத்தில் கலந்துகொள்ளும், இவர்களுக்கு உரையாற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறினார்.

அண்மை நாள்களில் பூடபெஸ்டில் நடைபெற்ற உலக திருநற்கருணை மாநாடு பற்றி குறிப்பிட்ட திருத்தந்தை, மறைக்கல்வி அறிவிப்பதற்கு சிறந்த இடம், திருநற்கருணை கொண்டாட்டம் என்பதை நாம் மறக்கக்கூடாது எனவும், கடவுள், நம் வாழ்வில் பிரசன்னமாய் இருக்கிறார் என்பதை, இக்கொண்டாட்டத்திலேயே, பல்வேறு வழிகளில் கண்டுணர்கிறோம் எனவும் கூறினார். 

“பாஸ்கா விருந்துண்ண நாங்கள் எங்கே ஏற்பாடு செய்ய வேண்டும் என நீர் விரும்புகிறீர்?” (மத்.26,17) என்று, சீடர்கள் இயேசுவிடம் கேட்டபோது, “நீங்கள் புறப்பட்டு நகருக்குள் செல்லுங்கள்" (மத்.26:18) என அவர் கூறியதைக் குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசுவின் இத்திருச்சொற்களை, மறைக்கல்வி ஆசிரியர்களாகிய வேதியர்கள், மீண்டும் மீண்டும் வாசித்து தியானிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

“வேதியர் பணி” என்ற ஓர் அமைப்பை தான் உருவாக்கியிருப்பது பற்றியும்,  வேதியர்கள், மறைப்பணிச் சீடர்களாக மாறுவதற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்றும், கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நகருக்குள் சென்று, தங்களின் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுள்ள மக்களை வேதியர்கள் சந்திக்கவேண்டும் என்றும், கேட்டுக்கொண்டார்.

மக்களின் அன்றாட வாழ்விலும், பணியிலும் அவர்களைச் சந்திக்கும் வேதியர்கள்,  உயிர்த்த இயேசு உங்களை அன்புகூர்கிறார், உங்களை அவர் ஒருபோதும் கைவிடுவதில்லை என்ற நம்பிக்கையை, அவர்களில் ஏற்படுத்தவேண்டும் எனவும், இவ்வாறு அறிவிப்பதில் ஒருபோதும் சோர்வடையக்கூடாது என்றும், திருத்தந்தை கூறினார்.

ஐரோப்பாவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான வேதியர்களுக்கு தன் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்து, கிறிஸ்தவ வாழ்வில் நுழைவதற்குத் தங்களை தயாரித்துவரும் சிறார், மற்றும், வளர்இளம்பருவத்தினருக்கு, தன் சிறப்பு ஆசீரையும் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

17 September 2021, 15:05