தேடுதல்

திருஅவைக்குள் மூடுதல் மனப்பான்மை இன்றி விழிப்புடன் செயல்பட...

கடவுளின் பெயரால் நன்மை செய்பவர்கள், அதன் வழியாக கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதில் பங்களிப்பதால், அவர்களைத் தடுக்கவேண்டாம் என இயேசு கேட்டுக்கொண்டார்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -  வத்திக்கான் செய்திகள்

கடவுளின் பெயரால் பேய் ஒட்டிய  மனிதரைக் குறித்து இயேசுவுக்கும், திருத்தொண்டர் யோவானுக்கும் இடையே இடம்பெற்ற உரையாடலை எடுத்துரைக்கும் ஞாயிறு நற்செய்தி குறித்து, நண்பகல் மூவேளை செப உரையில், தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 26, ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளுக்கு அந்நாளின் நற்செய்தி வாசகத்தை மையப்படுத்தி, மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடவுளின் பெயரால் நன்மை செய்பவர்கள், அதன் வழியாக கடவுளின் திட்டத்தை நிறைவேற்றுவதில் பங்களிப்பதால் (மாற் 9: 38-41), அவர்களைத் தடுக்கவேண்டாம் என இயேசு கேட்டுக்கொண்டதை நினைவூட்டினார்.

மக்களை, நல்லவர்கள், தீயவர்கள், என்று பிரிப்பதற்கு பதிலாக, தீமைகளுக்கு அடிபணியாமலும், மற்றவர்களுக்கு இடையூறாக இல்லாமலும் செயல்பட உதவும் வகையில், நம் இதயங்களைக் கண்காணிக்க நாம் அழைக்கப்படுகிறோம் (மாற் 9: 42-45, 47-48) எனவும் விண்ணப்பித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம்மைச் சாராதவர்கள் என்பதால், நன்மைச் செய்பவர்களையும் விலக்கிவைப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார்.

இறையரசிற்காக உழைக்க தங்களுக்கு மட்டுமே உரிமையுள்ளது எனவும், தாங்களே இறைவனின் சலுகை பெற்றவர்கள் எனவும் எண்ணிக்கொண்டு, பிறரை, தங்களைச் சாராதவர்கள் என, திருத்தொண்டர்கள் எண்ணியதுபோல், வரலாற்றிலும், இத்தகையை மூடுதல் மனப்பான்மை, கொடுங்கோலாட்சிக்கும், வன்முறைகள் பெருகுவதற்கும் இட்டுச் சென்றுள்ளதை சுட்டிக்காட்டினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவைக்குள்ளும் இந்த மூடுதல் மனப்பான்மை குறித்து நாம் விழிப்புடன் செயல்படவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சாத்தானை துரத்தியவர்களைக்கூட தங்களிடமிருந்து விலக்கிவைக்க, சாத்தான் தந்த சோதனைகளுக்கு உட்பட்ட திருத்தொண்டர்கள்போல், மற்றவர்களை விலக்கிவைக்கவும், விசுவாசிகள் என்பதில் நமக்கிருக்கும் தனியுரிமையை வலியுறுத்தி ஒதுங்கியிருக்கவும் உள்ள சோதனைகளை வெற்றிகொள்ள இறைவனை வேண்டுவோம் என விண்ணப்பித்தார்.

நல்லவர்களாக எண்ணிக்கொண்டு, நம்மையே நாம் மூடிக்கொண்டு வாழும் சமுதாயமாக இல்லாமல், தூய ஆவியார் நம்மில் விரும்புவதுபோல், வெளிப்படைத்தன்மையுடைய வரவேற்புடன் கூடிய சமூகங்களாக இல்லாமல் இருந்தால், கிறிஸ்தவ சமுதாயங்கள் பிரிவினையின் இடங்களாக மாறுவதற்கு வழிவகுத்துவிடும் என்ற எச்சரிக்கையையும் விடுத்தார் திருத்தந்தை.

நற்செய்திக்கு முரணானது நம்மில் உள்ளதா என்பதைக் குறித்து ஆழமாக சிந்திக்கும் நாம், நம்மைப்பற்றி விழிப்புடன் இருக்கவும், மற்றவர்களை வரவேற்கும் மனநிலையை வளர்க்கவும் உதவுமாறு, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டுவோம் என, தன் மூவேளை செப உரையை நிறைவு செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 September 2021, 13:27

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >