தேடுதல்

ஆழ்மனதின் கேட்கும் குறைபாட்டை குணப்படுத்த இறைவனை வேண்டுவோம்

திருத்தந்தை : மற்றவர்களுக்கு செவிமடுத்து, அவர்களின் வாழ்வு நம்மைத் தொடுவதற்கு நாம் அனுமதித்தால், நம் விசுவாசம் வளர்வதற்கு அது உதவுகிறது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிறருக்கு செவிமடுக்கும் வகையில், நம் ஆழ்மனதின் கேட்கும்திறனில் நிலவும் குறைபாட்டை, குணப்படுத்துமாறு இறைவனை நோக்கி வேண்டுவோம் என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

காது கேளாதவரும், திக்கிப்பேசுபவருமான ஒருவரை இயேசு குணப்படுத்தியப் புதுமையை எடுத்துரைக்கும் ஞாயிறு நற்செய்தியை மையப்படுத்தி, செப்டம்பர் 5, ஞாயிறன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செபவுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளியை இயேசு குணப்படுத்திய முறை நமக்கும் பாடம் கற்பிப்பதாக உள்ளது என விளக்கினார்.

காது கேளாதவரும் திக்கிப்பேசுபவருமாக இருந்தவரை தனியே அழைத்து,  தம் விரல்களை அவர் காதுகளில் இட்டு, உமிழ்நீரால் அவர் நாவைத் தொட்டு, பிறகு, வானத்தை அண்ணாந்து பார்த்து, பெருமூச்சு விட்டு, அவரை நோக்கி “எப்பத்தா” அதாவது “திறக்கப்படு” என இயேசு செய்வதை பார்க்கும்போது,  காதுகள் இருந்தும் செவிமடுக்க இயலாமல் இருக்கும் நம் நிலையை சுட்டிக்காட்டுவதுபோல் உள்ளது என எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆழ்மனதில் கேட்கும் திறனற்று இருக்கும் ஒவ்வொருவரின் இதயத்தையும் இயேசு குணப்படுத்துவதன் வழியாக செவிமடுக்கத் துவங்குகின்றோம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடல் சார்ந்த செவித்திறன் குறைபாட்டைவிட, ஆழ்மனதில் நிலவும் கேட்கும் திறன் குறைபாடு மோசமானது, ஏனெனில், இறைவனுக்கும் நம் உடன் வாழ் மக்களுக்கும் நாம் நம்மை மூடியவர்களாகச் செயல்பட அது நம்மை இட்டுச்செல்லும் ஆபத்து உள்ளது என எடுத்துரைத்தார்.

மற்றவர்களுக்கு செவிமடுத்து, அவர்களின் வாழ்வு நம்மைத் தொடுவதற்கு நாம் அனுமதித்தால், நாம் வாழ்வதற்கு கற்றுக்கொள்வதுடன், நம் விசுவாசம் வளர்வதற்கும் அது உதவுகிறது, என மேலும் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மற்றவர்களுக்கு செவிமடுத்து அவர்களுடன் நம் வாழ்வை பகிர்ந்துகொள்ள முன்வருகின்றோமா என்ற கேள்வியை முன்வைத்த திருத்தந்தை, உரையாடல் என்பது பெரும்பாலும் நாம் பேசுவதிலிருந்து அல்ல, மாறாக மௌனமாக செவிமடுப்பதிலிருந்தே துவங்குகின்றது, என்பதையும் சுட்டிக்காட்டினார்.

நம் ஆன்மீக நலனுக்குரிய இரகசியம், நற்செய்திக்கு செவிமடுப்பதில் அடங்கியுள்ளது, ஏனெனில், வார்த்தையாம் இயேசுவின் செய்தி நமக்குள் மீண்டும் மீண்டும் ஒலிக்க அது உதவுகிறது என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதலில் இறைவனுக்கு செவிமடுக்கத் துவங்குவதாக நம் வாழ்வு இருக்கட்டும் என எடுத்துரைத்தார்.

அவசர முடிவுகள், பொறுமையின்மை என்பவைகளிலிருந்து, நம் இதயத்தை விடுவித்து, திறந்துவிடுமாறு இறைவனை நோக்கி செபிக்கும்போது, “எப்பத்தா”, அதாவது “திறக்கப்படு” என இயேசு உரைக்கும் வார்த்தைகள் நமக்கும் தரப்படுகின்றன, என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இயேசுவுக்கும் நம் சகோதரர் சகோதரிகளுக்கும் நாம் செவிமடுக்கும் வகையில், நம் உள்ளத்தைத் திறந்துவைக்க, அன்னை மரியா நமக்கு உதவுவாராக என வேண்டி, தன் மூவேளை செப உரையை நிறைவுசெய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

05 September 2021, 13:39

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >