தேடுதல்

முதல்வராக இருக்க விரும்புவோர், பணியாளர்களாக இருக்கவேண்டும்

நமக்குத் திருப்பி வழங்கமுடியாதவர்களுக்கு, குறிப்பாக, ஏழைகளுக்கு, நாம் சேவையாற்றும்போது, நாம் கடவுளின் அன்பையும், அரவணைப்பையும் கண்டுகொள்கிறோம்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள் 

எருசலேமுக்குச் செல்லும் வழியில் சீடர்கள், யார் தங்களுக்குள் பெரியவர் என பேசிக்கொண்டதை அறிந்த இயேசு, அவர்களை நோக்கி, “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என அறிவுறுத்திக்கூறிய வார்த்தைகளை மையமாக வைத்து, தன் ஞாயிறு மூவேளை செபவுரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

செப்டம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை நண்பகலில் வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் குழுமியிருந்த மக்களுக்கு ஞாயிறு திருப்பலி நற்செய்தி வாசகம் (மாற் 9:30-37)  குறித்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல்வராக இருக்க விரும்புவோர், பணியாளர்களாக இருக்க வேண்டும் என்று அன்று தன் சீடர்களிடம் இயேசுக் கூறிய வார்த்தைகள், இன்று, நம்மனைவருக்கும் பொருந்துவதாக உள்ளன என எடுத்துரைத்தார்

ஒருவரிடம் என்ன உள்ளது என்பதை வைத்து அல்ல, மாறாக, என்ன அவர் கொடுக்கிறார் என்பதை வைத்தே, ஒருவர் கணிக்கப்படுகிறார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘மானிட மகன் தொண்டு ஏற்பதற்கு அல்ல, மாறாக, தொண்டு ஆற்றுவதற்கு வந்தார்' (மாற் 10:45).என்ற இயேசுவின் வார்த்தைகளில் அனைத்தும் அடங்கியுள்ளன என எடுத்துரைத்தார்.

இயேசுவின் பாதையில், அதாவது பணியின் பாதையில் நடைபோடுவது என்பது, சிலுவையின் சுவையைத் தருவதாக உள்ளது என்றபோதிலும், பிறருக்கு உதவும் பணி நம்மில் வளரும்போது, நாமும் இயேசுவைப்போல் உள்ளுக்குள் மேலும் சுதந்திரத்தை உணர்கிறோம், என உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நாம் மற்றவர்களுக்கு பணியாளராக மாறும்போது, இறைவனின் இருப்பைக் குறித்து மேலும் உணர்கிறோம், நமக்குத் திருப்பி வழங்க முடியாதவர்களுக்கு, குறிப்பாக ஏழைகளுக்கு நாம் சேவையாற்றும்போது, நாம் கடவுளின் அன்பையும், அரவணைப்பையும்  கண்டுகொள்கிறோம், என மேலும் உரைத்தார் திருத்தந்தை.

நாம் இறைவனுக்கு நம்பகத்தன்மையுடையவர்களாக இருக்கிறோம் என்பது, நாம் பணிபுரிவதற்க்குக் கொண்டிருக்கும் விருப்பத்தைப் பொருத்திருக்கிறது, என்ற திருத்தந்தை, சீடர்களின் நடுவே ஒரு குழந்தையை நிறுத்தி, சிறுபிள்ளைகளுள் ஒன்றை ஏற்றுக்கொள்பவர் தன்னையே ஏற்றுக்கொள்வதாக இயேசு கூறியதை சுட்டிக்காட்டினார்.

நம் உதவி தேவைப்படும் மக்கள் குறித்து நாம் உண்மையிலேயே அக்கறையுடையவர்களாக உள்ளோமா, அல்லது, நம்முடைய புகழுக்காகவும், வளர்ச்சிக்காகவும், செயல்களை ஆற்றுகின்றோமா என்ற கேள்வியை, ஒவ்வொருவரும், தங்களுக்குள் கேட்கட்டும் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பெறுவதைவிட கொடுப்பதிலேயே அதிக மகிழ்வு உள்ளது என்பதை, இறைவனின் பணிவான பணியாளராகச் செயல்பட்ட அன்னைமரியா கற்றுத்தருவாராக என, தன் மூவேளை செப உரையை நிறைவுச் செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 September 2021, 13:25

மூவேளை செபம் என்பது, கடவுள் மனுவுரு எடுத்த பேருண்மையை நினைவுகூர்ந்து ஒரு நாளில் மூன்றுமுறை : மூவேளை செபத்திற்கென மணி ஒலிக்கும் காலை 6 மணி, நண்பகல் மற்றும் மாலை 6 மணியளவில் செபிக்கும் செபமாகும். ஆண்டவருடைய தூதர் மரியாளுக்குத் தூதுரைத்தார் எனத் தொடங்கும் மூவேளை செபத்தின் முதல் வரியிலிருந்து, மூவேளை என்ற பெயர் வந்துள்ளது. இந்த முதல்வரியானது, இயேசு கிறிஸ்து மனுஉரு எடுத்தது மற்றும் மூன்று முறை அருள் நிறைந்த மரியே எனச் சொல்லும் எளிய பகுதியை உள்ளடக்கியது. இந்தச் செபம்,  புனித பேதுரு வளாகத்தில், ஞாயிறு மற்றும் பெருவிழா நாள்களின் நண்பகலில்  திருத்தந்தையால் சொல்லப்படுகின்றது. மூவேளை செபத்தைச் சொல்வதற்கு முன்னர், திருத்தந்தை,  அந்நாளைய வாசகங்களிலிருந்து தூண்டுதல்பெற்ற சிறு உரையும் நிகழ்த்துவார். அதைத் தொடர்ந்து திருப்பயணிகளை வாழ்த்துவார். கிறிஸ்துவின் உயிர்ப்பு முதல், தூய ஆவியார் பெருவிழா வரை,  மூவேளை செபத்திற்குப் பதிலாக அல்லேலூயா வாழ்த்தொலி செபம் செபிக்கப்படுகிறது. இச்செபம், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் நினைவாகச் செக்கப்படுகிறது. இச்செபத்தின் இறுதியில், தந்தைக்கும் மகனுக்கும், தூய ஆவியாருக்கும்... மூன்று முறை சொல்லப்படுகின்றது.

அண்மை மூவேளை செபம் / அல்லேலூயா வாழ்த்தொலி

அனைத்தையும் படிக்கவும் >