தேடுதல்

கர்தினால் FREIRE FALCAO கர்தினால் FREIRE FALCAO 

பிரேசில் நாட்டு 95 வயது கர்தினால் Falcão இறைபதம் சேர்ந்தார்

'தாழ்ச்சியில் பணிபுரிதல்' என்ற ஆயர் திருநிலைப்பாட்டு விருதுவாக்குடன், Brasilia பெருமறைமாவட்டத்தை வழிநடத்திவந்த கர்தினால் Falcão அவர்கள் மறைவு

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

பிரேசில் நாட்டின் Brasilia உயர் மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர் கர்தினால் José Freire Falcão அவர்களின் மரணம் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிடும் இரங்கல் தந்தியை அந்நாட்டு தலத்திருஅவைக்கு அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நற்செய்தி அறிவிப்புக்குரிய தணியாத தாகத்துடன் பிரேசில் திரு அவையில் அவர் ஆற்றிய பணிகளுக்கும், திருப்பீடத்துடன் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த ஒத்துழைப்புக்கும் இறைவனுக்கு நன்றி கூறுவதாகவும், பிரேசில் கத்தோலிக்க திருஅவை மற்றும் கர்தினாலின் உறவினர்களுக்கு ஆறுதல் கூற விளைவதாகவும், தற்போதைய Brasilia பேராயர் Paulo Cezar Costai அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை.

பிரேசில் நாட்டின் Brasilia உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர், கர்தினால் Falcão அவர்கள், செப்டம்பர் 26ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை இரவு, இறைபதம் சேர்ந்தார்.

கோவிட் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 95 வயது கர்தினால் Falcão அவர்கள், செப்டம்பர் 17 முதல் Santa Lúcia மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, கோவிட் பெருந்தொற்று பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்றுவந்தார்.

20 ஆண்டுகள் தலைநகர் Brasilia பெருமறைமாவட்டத்தை, 'தாழ்ச்சியில் பணிபுரிதல்' என்ற ஆயர் திருநிலைப்பாட்டு விருதுவாக்குடன் வழிநடத்திவந்த கர்தினால் Falcão அவர்களின் மறைவு, பிரேசில் திருஅவையில் ஒரு பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக திருஅவைத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் Limoeiro do Norte என்ற மறைமாவட்டத்தில், 1925ம் ஆண்டு பிறந்த கர்தினால் Falcão அவர்கள், 1949ம் ஆண்டு அருள்பணியாளராகவும், 1967ல் ஆயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார்.

1984ம் ஆண்டு முதல் 20 ஆண்டுகள் தலைநகரில் பேராயராகச் செயல்பட்ட இவரை, 1988ம் ஆண்டு, திருத்தந்தை, புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், கர்தினாலாக உயர்த்தினார்.

கர்தினால் Falcão அவர்கள் செப்டம்பர் 26ம் தேதி இரவு மரணமடைந்ததைத் தொடர்ந்து, திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 217 ஆக உள்ளது. இவர்களில், திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் 80 வயதிற்குட்பட்டோர் 121 பேர். மற்றும், 80 வயதிற்கு மேற்பட்டோர் 96 பேர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2021, 14:27