தேடுதல்

வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறைக் கழகத்தினருக்கு திருத்ந்தையின் உரை வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறைக் கழகத்தினருக்கு திருத்ந்தையின் உரை 

வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறை கழகம் – திருத்தந்தை உரை

கோவிட்-19 பெருந்தொற்றை மையப்படுத்தி, நமக்கு சலிப்பூட்டும் வண்ணம் பல்வேறு உரைகளை கேட்டுவிட்டோம், இனி, அடுத்து என்ன செய்வது என்பதை சிந்திக்கவேண்டிய தருணம் இது - திருத்தந்தை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்த பெருந்தொற்றின் நெருக்கடியால், இந்த பூமியும், அங்கு வாழும் வறியோரும் எழுப்பும் அழுகுரலுக்கு நம் செவிகளை மூடிக்கொள்ளாமல், அதை கவனமுடன் கேட்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த பன்னாட்டு உறுப்பினர்களுக்கு வழங்கிய உரையில் கூறினார்.

வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறைக் கழகம், செப்டம்பர் 27 இத்திங்கள் முதல், 29 இப்புதன் முடிய உரோம் நகரில் ஏற்பாடு செய்துள்ள ஒரு கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்திருந்த 100க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை, வத்திக்கானில், இத்திங்கள் காலையில் சந்தித்த திருத்தந்தை, மக்களின் நலவாழ்வை மையப்படுத்தி அவர்கள் நடத்தும் கருத்தரங்கிற்கு தன் வாழ்த்துக்களைக் கூறினார்.

'உலகமயமாக்கல் என்ற பின்னணியில், மக்களின் பொதுப்படையான நலவாழ்வு' என்பதை, இவ்வாண்டின் மையக்கருத்தாக இக்கழகம் தெரிவு செய்திருப்பதைப் பாராட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோவிட்-19 பெருந்தொற்றை மையப்படுத்தி, நமக்கு சலிப்பூட்டும் வண்ணம் பல்வேறு உரைகளை கேட்டுவிட்டோம், இனி, அடுத்து என்ன செய்வது என்பதை சிந்திக்கவேண்டிய தருணம் இது என்று குறிப்பிட்டார்.

நாம், மனித குடும்பம், மற்றும், நமது பொதுவான இல்லமான பூமி, ஆகிய மூன்றும் எவ்வாறு ஒன்றையொன்று சார்ந்துள்ளன என்பதை, இந்த பெருந்தொற்று உருவாக்கிய நெருக்கடி, மிகத் தெளிவாக உணர்த்தியுள்ளது என்று, தன் உரையில் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, ஒன்றையொன்று சார்ந்திருக்கும் இந்தத் தொடர்பை, மேற்கத்திய நாடுகளில் வாழும் சமுதாயங்கள் மறந்துவிட்டன என்பதை வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

அறிவியல், மருத்துவம் ஆகியவற்றின் புதிய கண்டுபிடிப்புகள், பொருளாதாரம், சமுதாயம், சுற்றுச்சூழல் ஆகிய ஏனைய தளங்களுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டுள்ளன என்பதை உணர்ந்து செயல்படுவது, இன்றைய அவசியத் தேவை என்பதை, திருத்தந்தை, தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

நம் நலவாழ்வும், நம்மிடையே தோன்றும் நோயும், உடலையும், சூழலையும் மட்டும் சார்ந்தவை அல்ல, மாறாக, அதில் சமுதாயமும், பொருளாதாரமும் இணைந்துள்ளன என்பதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்றதுபோல் நம் தீர்வுகள் அமையவேண்டும் என்று திருத்தந்தை கூறினார்.

இந்த பெருந்தொற்றை தொடர்ந்துவரும் காலத்தில், நம்மிடையே, தடுப்பு மருந்தின் விநியோகம் சமமாக இல்லை என்பது ஒரு பெரும் பிரச்சனையாக இருப்பதுபோல், நல்ல குடிநீர் மற்றும் சத்துணவு ஆகியவற்றின் குறைபாடும், அத்துடன் தொடர்புகொண்ட ஒரு பிரச்சனையாக உள்ளது என்பதை,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையில் எடுத்துரைத்தார்.

உலகினர் அனைவருக்கும் சமமான நலவாழ்வு கிடைப்பதற்குத் தேவையான உலகளாவிய ஓர் அமைப்பு உருவாக்கப்படவேண்டும் என்று, அண்மையில் G20 நாடுகளின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட ஒரு முடிவு, மிகவும் வரவேற்கத்தக்கது என்று கூறியத் திருத்தந்தை, இத்தகைய உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லையெனில், எதிர்கால பெருந்தொற்றுகளை எதிர்கொள்வது இயலாது என்று குறிப்பிட்டார்.

உலகெங்கும் நலவாழ்வை உறுதிசெய்வதற்கு பன்னாட்டு அமைப்புகள் மேற்கொள்ளும் விவாதங்களில் வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறை கழகமும் முழு ஈடுபாட்டுடன் பங்கேற்பது அவசியம் என்பதை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையின் இறுதியில் கூறினார்.

கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்த வத்திக்கானில் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பின் முயற்சிகளுக்கு வாழ்வை ஆதரிக்கும் பாப்பிறை கழகம் வழங்கிவரும் அனைத்து உதவிகளுக்கும் தன் நன்றியைக் கூறிய திருத்தந்தை, பலருக்கும் பயனளிக்கும் பொதுவான முயற்சிகளில் வத்திக்கானின் அனைத்து துறைகளும் இணைந்து பணியாற்றும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கவேண்டும் என்று விண்ணப்பித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

27 September 2021, 14:06