ஹங்கேரி நாட்டு ஆயர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் ஹங்கேரி நாட்டு ஆயர்களுக்கு உரை வழங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் 

ஹங்கேரி நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தையின் உரை

இவ்வுலகிலும், மனித மனங்களிலும் பரவியிருக்கும் பாலை நிலத்தில் கிறிஸ்து என்ற ஊற்றை வழிந்தோடச் செய்வது, ஆயர்களாகிய உங்கள் கடமை – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

செப்டம்பர் 12, இஞ்ஞாயிறன்று, பூடபெஸ்ட் நகரில், ஹங்கேரி நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை வழங்கிய உரையின் சுருக்கம்:

அன்பு சகோதர ஆயர்களே, 52வது உலக திருநற்கருணை மாநாட்டின் நிறைவு நிகழ்வில் உங்களோடு இணைந்திருப்பதில் நான் மகிழ்கிறேன். தன் உடலையும், இரத்தத்தையும் நமக்கு வழங்கும் கிறிஸ்துவை, அர்ச்சிக்கப்பட்ட அப்பத்திலும், பழரசத்திலும், நாம் காண்கிறோம். இரத்தம் சிந்துதலுடன் கூடிய பல்வேறு துயரங்களை, தன் நீண்ட வரலாற்றில் கண்டுள்ள ஹங்கேரி நாடு, கிறிஸ்துவின் பலியுடன் இணைந்துள்ளது. இந்த நாட்டில் வாழ்ந்த நம் சகோதரர்களும், சகோதரிகளும் நொறுக்கப்பட்ட கோதுமை மணிகளாகவும், கசக்கிப் பிழியப்பட்ட திராட்சைக்கனிகளாகவும் வாழ்ந்துள்ளனர்.

இந்த நாட்டின் தியாக வலராற்றை காணும் அதே வேளையில், வருங்காலத்தையும், நாம், நம்பிக்கையோடு எதிர்நோக்கவேண்டும். பழமையைக் காப்பதும், வருங்காலத்தை நோக்குவதும், திருஅவை வரலாற்றில், இணைபிரியாமல் காக்கப்படவேண்டும்.

ஹங்கேரி நாடு பெரும் இன்னலுக்குள்ளான வேளையில், இந்நாட்டிலிருந்து, அர்ஜென்டீனா நாட்டிற்கு வந்து, அங்கு Maria Ward என்ற கல்லூரியை நிறுவி பணியாற்றிய, இயேசுவின் துறவு சபை அருள்சகோதரிகள் வழியே, நான் ஹங்கேரி நாட்டைப்பற்றி அதிகம் அறிந்துகொண்டேன். அவர்களை இன்று நினைவுகூரும் வேளையில், அவர்களைப்போல், இந்நாட்டைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்ட அனைவரையும், அவர்களது பணிகளையும், அதே வேளையில், பெரும் இன்னல்கள் நடுவில், இந்நாட்டில், தங்கள் உயிரை ஈந்தவர்களையும், இப்போது எண்ணிப்பார்க்கிறேன்.

87ம் திருப்பாடலிலிருந்து எடுக்கப்பட்ட "எங்கள் நலன்களின் ஊற்று உம்மிடமே உள்ளது" என்ற சொற்களை, இந்த திருநற்கருணை மாநாட்டின் மையக்கருத்தாக நீங்கள் தெரிவு செய்திருக்கிறீர்கள். இவ்வுலகிலும், மனித மனங்களிலும் பரவியிருக்கும் பாலை நிலத்தில் கிறிஸ்து என்ற ஊற்றை வழிந்தோடச் செய்வது, ஆயர்களாகிய உங்கள் கடமை.

உங்கள் பணியை நிறைவேற்ற ஒரு சில குறிப்புகளை வழங்க விழைகிறேன்.

முதலில், நீங்கள் நற்செய்தியின் தூதர்களாக திகழுங்கள். ஐரோப்பா முழுவதையும் பாதித்துக்கொண்டிருக்கும் பிரச்சனைகளில், உங்கள் நாடும் சிக்கியுள்ளது. கிறிஸ்தவ மறைக்கு எதிராக எழுந்த பெரும் இன்னல்களில் சிக்கியிருந்த இந்த நாடு, தற்போது, மத உணர்வும், கடவுளின் மீது தாகமும் குறைந்த நாடாக மாறிவருகிறது. மக்களின் தாகம் தீர்க்கும் வற்றாத ஊற்று கிறிஸ்துவே என்பதை மறந்துவிடவேண்டாம். ஆயர்கள் என்ற முறையில், நாம் சலுகைகளையும், மதிப்பையும் தேடுபவர்களாக இல்லாமல், நற்செய்தியின் மீது ஆழ்ந்த பற்று கொண்டவர்களாக இருக்க முயல்வோம்.

இரண்டாவது, உடன்பிறந்த நிலையின் சாட்சிகளாகத் திகழுங்கள். இந்நாடு, பல்வேறு கலாச்சாரங்கள், மதங்கள் ஆகியவற்றின் சங்கமமாக உள்ளது. பன்முகத்தன்மை ஆரம்பத்தில் நமக்கு அச்சமூட்டலாம். ஆனால், அதற்கு அஞ்சி, நம் பாரம்பரியங்களுக்குள் நம்மையே மூடிவைத்துக்கொள்ளக் கூடாது.

இந்த நகரில் வளைந்து நெளிந்து செல்லும் பெரும் ஆற்றின் நடுவே கட்டப்பட்டுள்ள சங்கிலிப் பாலம், நகரின் Buda மற்றும் Pest ஆகிய இரு பகுதிகளையும் இணைக்கிறது. திருஅவையானது, இந்நாட்டில், உரையாடலை வளர்க்கும் பாலமாக அமையவேண்டும். ஆயர்களாகிய நீங்களும், அருள்பணியாளர்கள் மற்றும் துறவியரும் உடன்பிறந்த நிலையை ஊக்குவிக்கும் ஒளிவிளக்குகளாக திகழ்வீர்களாக.

இறுதியாக, நம்பிக்கையை கட்டியெழுப்புகிறவர்களாக திகழுங்கள். நாம் நற்செய்தியை மையமாகக் கொண்டு, உடன்பிறந்த அன்புக்கு சாட்சிகளாக இருந்தால், எந்த புயல் வீசினாலும், வருங்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளமுடியும். சர்வாதிகார தளைகளிலிருந்து விடுதலை பெற்றுள்ள ஹங்கேரி நாடு, இன்னும் சில அம்சங்களில் பிரச்சனைகளைச் சந்தித்துவருகிறது. துன்புறுவோருடன் தன் அருகாமையை வெளிப்படுத்த திருஅவை ஒருபோதும் தயங்கக்கூடாது. இந்நாட்டின் மைந்தரும், தலத்திருஅவையின் தந்தையுமாக விளங்கிய வணக்கத்திற்குரிய கர்தினால் József Mindszenty அவர்கள், நம்பிக்கைதரும் இச்சொற்களை வழங்கியுள்ளார்: "கடவுள் இளமையானவர். எதிர்காலம் அவர் கரங்களில் உள்ளது. தனி மனிதரிலும், மக்களிலும் புதியனவற்றை அவர் வெளிக்கொணர்கிறார். எனவே, நாம் ஒருபோதும் விரக்திக்கு இடம்தரக்கூடாது."

சமுதாயத்திலும், திருஅவையிலும் நெருக்கடிகள் ஏற்படும்போது, நீங்கள் எப்போதும் நம்பிக்கையின் தூதர்களாக திகழ்வீர்களாக. ஆயர்கள் என்ற முறையில் எப்போதும் பிறரை ஊக்குவிக்கும் சொற்களையே பேசுங்கள். வாழ்க்கையை அருளின் பரிசாக வரவேற்க வேண்டுமே தவிர, அதை ஒரு புதிராகக் காணக்கூடாது.

ஹங்கேரி நாட்டில் புத்துணர்வுடன் நற்செய்தி அறிவிக்கப்படவேண்டும். ஆயர்கள் என்ற முறையில் இந்த மகிழ்வான பணியை முன்னின்று நடத்த அழைக்கப்பட்டுள்ளீர்கள். இந்தப் பணியில் இறைவன் உங்களை உறுதிப்படுத்துவாராக! நீங்கள் ஆற்றிவரும் அனைத்து பணிகளுக்காகவும் நன்றி கூறுகிறேன், என் மனம் நிறைந்த ஆசீரை வழங்குகிறேன். அன்னை மரியாவும், புனித யோசேப்பும் உங்களைக் காத்து வழிநடத்துவார்களாக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

12 September 2021, 11:40