கிளரேசியன் பொது அவையின் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் கிளரேசியன் பொது அவையின் பிரதிநிதிகளைச் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ்  

கிளரேசியன் துறவு சபையினருக்கு திருத்தந்தையின் வாழ்த்துரை

கிறிஸ்துவில் வேரூன்றியிருந்தால் மட்டுமே, கிளரேசியன் துறவு சபையினர், தங்கள் பணிகளை துணிவுடன் ஆற்றமுடியும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மறைபரப்புப்பணியாளர்களாகிய நீங்கள் ஆற்றும் பணிகளை, கிறிஸ்துவை தியானிப்பதிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன்னைச் சந்திக்க வந்திருந்த ஒரு மறைபரப்புப்பணி துறவுசபையின் பொது அவை பிரதிநிதிகளிடம் கூறினார்.

கிளரேசியன் (Claretians) என்று பொதுவாக அழைக்கப்படும், கன்னி மரியாவின் தூய இதயத்தின் மறைபரப்புப்பணி புதல்வர்கள் சபையின் பிரதிநிதிகள், உரோம் நகரில் மேற்கொண்ட பொது அவையின் இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, செப்டம்பர் 9, இவ்வியாழனன்று திருப்பீடத்தில் சந்தித்த வேளையில், இஸ்பானிய மொழியில் அவர்களுக்கு உரை வழங்கியபோது, இவ்வாறு கூறினார்.

இத்துறவற சபையின் உலகத்தலைவராக அருள்பணி மாத்யூ வட்டமட்டம் (Mathew Vattamattam) அவர்களை மீண்டும் தெரிவு செய்திருப்பதை குறித்து, தன் உரையின் துவக்கத்தில், மகிழ்ச்சியை வெளியிட்ட திருத்தந்தை, இச்சபையின் உயர்மட்டப் பொறுப்புகளுக்கு புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கும் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களையும், இறைவேண்டல்களையும் தெரிவித்தார்.

"வேரூன்றுதலும் துணிவு கொள்ளுதலும்" என்ற மையக்கருத்துடன் இந்த பொது அவை சந்திப்பு நிகழ்ந்தது என்பதை, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்துவில் வேரூன்றியிருந்தால் மட்டுமே, இச்சபையினர், தங்கள் பணிகளை துணிவுடன் ஆற்றமுடியும் என்பதை வலியுறுத்திக் கூறினார்.

"கன்னி மரியாவின் தூய இதயத்தின் மறைபரப்புப்பணி சபையின் புதல்வர்கள் ஒவ்வொருவரும், பிறரன்பினால் பற்றியெரிபவர், மற்றும் அவர் செல்லுமிடம் அனைத்திலும் சுடர் விடுவார்" என்று, இத்துறவு சபையை உருவாக்கிய புனித கிளாரெட் அவர்கள் கூறியதை தன் உரையில் மேற்கோளாகக் கூறியத் திருத்தந்தை, இறையன்பினால் பற்றியெரியும் நீங்கள் செல்லுமிடங்கள் அனைத்திலும், இந்த அன்புத் தீயைப் பரப்புங்கள் என்று அழைப்பு விடுத்தார்.

இந்த பொது அவை தெரிவுசெய்த மையக்கருத்தின் ஒரு பகுதியாக இருக்கும் 'துணிவு கொள்ளுதல்' என்ற கருத்தை விளக்கிக்கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்துறவு சபையின் உறுப்பினர்கள், தனிப்பட்ட முறையில் கொண்டிருக்கும் வலுவின்மையைக் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று எடுத்துரைத்து, "என் அருள் உனக்குப் போதும்; வலுவின்மையில்தான் வல்லமை நிறைவாய் வெளிப்படும்" (2 கொரி. 12:9) என்று புனித பவுல் கூறிய சொற்களை நினைவுறுத்தினார்.

புனித கிளாரெட் அவர்கள் உருவாக்கிய சபையின் உறுப்பினர்கள், உலகில் நிகழ்வனவற்றை, தூரத்தில் நின்று, ஒரு பார்வையாளராக காண இயலாது, மாறாக, இவ்வுலகில் நிகழ்வனவற்றில் தங்களையே முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ளும் பணியாளர்களாக மாறவேண்டும் என்று திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

தற்போது நிறைவுபெற்றுள்ள பொது அவை, இத்துறவு சபைக்குத் தேவையான அடிப்படை அம்சங்களை மீண்டும் ஆழமாகக் கண்டுணர உதவியாக இருக்கும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும், தன் ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 September 2021, 14:04