காலணி அணியாத கார்மேல் சபை பொதுப் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு காலணி அணியாத கார்மேல் சபை பொதுப் பேரவை பிரதிநிதிகள் சந்திப்பு 

கார்மேல் சபையினர் ஆழ்நிலை தியான வாழ்வில் வேரூன்றியவர்கள்

ஆழ்நிலை தியான வாழ்வு, தூய ஆவியாரால் திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள கொடை. கார்மேல் சபைத் துறவிகள் இக்கொடைக்கு சான்றுகளாக வாழவேண்டும் – திருத்தந்தை பிரான்சிஸ்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மூவொரு கடவுளின் அன்புறவில் வேரூன்றி, தனிமையாயும், மற்றவரோடும் இருப்பதற்கு இடையே நலமான ஒரு சூழலை உருவாக்குவதன் வழியாக, தூய ஆவியாரோடு உள்ள உறவில் வளர, காலணி அணியாத கார்மேல் சபைத் துறவிகளை,   செப்டம்பர் 11, இச்சனிக்கிழமையன்று  கேட்டுக்கொண்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகரில் காலணி அணியாத கார்மேல் சபையைச் சேர்ந்த ஆண் துறவிகளின் பொதுப் பேரவையில் பங்குபெற்றுவரும் 105 பிரதிநிதிகளை, இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உற்றுக்கேட்டல், தேர்ந்துதெளிதல், சான்றுகளாக வாழ்தல் ஆகிய மூன்று சொல்லாடல்களை மையப்படுத்தி, அவர்களோடு தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

உற்றுக்கேட்டல் என்பது, இயேசுவின் பள்ளியில் பயில்கின்றவர்களுக்கு இருக்கவேண்டிய அடிப்படைப் பண்பு என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கார்மேல் சபையினர் ஆழ்நிலை தியான வாழ்வில் வேரூன்றியவர்கள் என்றும், இந்த உலகின் போக்கில் இழுத்துச்செல்லாதபடிக்கு விழிப்போடு இருக்கமாறும் கூறினார்.

ஆழ்நிலை தியான வாழ்வு, தூய ஆவியாரால் திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள கொடை எனவும், கார்மேல் சபையின் இருபெரும் புனிதர்களாகிய, அவிலா நகர் புனித தெரேசா, திருச்சிலுவையின் புனித யோவான் ஆகியோரைப் பின்பற்றி, இக்கால கார்மேல் சபைத் துறவிகள் இக்கொடைக்கு சான்றுகளாக வாழவேண்டும் எனவும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.

நற்செய்திக்கு பிரமாணிக்கமாக இருப்பது என்பது, நம் ஆண்டவர் இங்கு, மற்றும், இப்பொழுதே கேட்கும் தேவையான மாற்றங்களை அமைப்பதற்குத் தயாராக இருப்பதாகும் என்றும், நற்செய்தி, மற்றும், சபையின் தனிவரத்தின் விழுமியங்களுக்கு உறுதியுடன் தன்னை அர்ப்பணிப்பதாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.

அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை, மகிழ்ச்சி, மற்றும், நகைச்சுவை ஆகிய உணர்வுகள் குறித்துக் காட்டுபவை எனக் கூறிய திருத்தந்தை, கடவுளோடு நட்புறவையும், குழுத்திலும், மறைப்பணியிலும், உடன்பிறந்த உணர்வையும் வளர்த்துக்கொள்ளுமாறு கார்மேல் சபைத் துறவிகளிடம் கூறினார்.

ஐரோப்பிய அவையின் தலைவர் Charles சந்திப்பு

மேலும், செப்டம்பர் 11, இச்சனிக்கிழமையன்று  திருப்பீடத்தில் தன்னைச் சந்திக்க வந்திருந்த, ஐரோப்பிய அவையின் தலைவர் Charles Michel அவர்களிடம், ஆப்கானிஸ்தானின் புலம்பெயர்ந்த மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பிய அவையின் தலைவர் Charles சந்திப்பு
ஐரோப்பிய அவையின் தலைவர் Charles சந்திப்பு

ஐரோப்பாவின் வருங்காலம் குறித்து நடைபெற்றுவரும் கருத்தரங்கு பற்றியும், ஐரோப்பா எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும், இச்சந்திப்பில் பேசப்பட்டன என்று, திருப்பீட தகவல் தொடர்பகம் கூறியது.

ஐரோப்பிய அவையின் தலைவர் Charles Michel அவர்கள், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 September 2021, 15:02