அர்ஜென்டீனா காரித்தாஸ் அமைப்பிற்கு திருத்தந்தையின் செய்தி

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

அர்ஜென்டீனா நாட்டின் காரித்தாஸ் அமைப்பு மேற்கொண்டுள்ள “La Caminata 2021” என்ற முயற்சி, ஒருவருக்கொருவர் கவனமாகச் செவிமடுத்து, பிறரன்பை இன்னும் உறுதியாக நடைமுறைப்படுத்தும் ஒரு பயணம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், காணொளிச் செய்தியொன்றில் கூறியுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, அர்ஜென்டீனா நாட்டின் காரித்தாஸ் அமைப்பு மேற்கொள்ளும் “La Caminata” என்ற கூட்டம் தற்போது துவங்கியிருப்பதை முன்னிட்டு, ஆகஸ்ட் 25, இப்புதனன்று, திருத்தந்தை இஸ்பானிய மொழியில் ஒரு காணொளிச் செய்தியை அனுப்பியுள்ளார்.

அந்தந்த காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்றவாறு, நம்மைவிட்டு வெளியேறி, பிறரன்பு முயற்சிகளை மேற்கொண்டுவரும் காரித்தாஸ் உறுப்பினர்கள் அனைவருக்கும் தன் ஆசீரை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனக்காக செபிக்கும்படி விண்ணப்பித்து, இந்த குறுகிய காணொளியை நிறைவு செய்துள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் “La Caminata” முயற்சியின் முதல் பகுதியாக, தூய்மைமிகு கன்னி மரியா, புனித யோசேப்பு, மற்றும், குழந்தை இயேசு ஆகியோரின் திரு உருவங்கள், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் பயணம் செய்துவருகிறது.

ஒவ்வொரு பங்குதளத்திற்கும், இத்திரு உருவங்கள் சென்றடையும்வேளை, அந்த கிறிஸ்தவ சமுதாயம் ஒன்றுகூடி, மேய்ப்புப்பணிசார்ந்த ஒரு தேடலை மேற்கொள்கின்றது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை காரித்தாஸ் அமைப்பினால் மேற்கொள்ளப்படும் “La Caminata” முயற்சியின் வழியே, அர்ஜென்டீனா நாட்டிலும், இலத்தீன் அமெரிக்க கண்டத்திலும் மறுமலர்ச்சி உருவாகும் என்று தாங்கள் நம்புவதாக, இந்த முயற்சியை ஒருங்கிணைப்போர் கூறியுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 August 2021, 14:44