புனித அகுஸ்தீன், அவரது அன்னை புனித மோனிக்கா புனித அகுஸ்தீன், அவரது அன்னை புனித மோனிக்கா 

ஆன்மீகத்தில் எப்போதும் விழிப்புடன் இருப்பது முக்கியம்

மேலை நாட்டுக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்த புனித அகுஸ்தீன், தலைசிறந்த திருஅவைத் தந்தையருள் ஒருவராகப் போற்றப்படுகிறார்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

ஆகஸ்ட் 28, இச்சனிக்கிழமையன்று ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன் விழா சிறப்பிக்கப்பட்டவேளை, அப்புனிதர் கொண்டிருந்த இறை தாகத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் குறுஞ்செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“இயேசு என்னைக் கவனிக்காமலேயே கடந்துசெல்வார் என நான் அஞ்சுகிறேன், ஆயிரம் காரியங்களில் மூழ்கியிருந்து, கடவுளைக் கண்டுகொள்ளாமல் இருப்பது, வாழ்வில் செய்யும் மிகப்பெரிய தவறு என்பதால், எப்போதும் விழிப்புடன் இருப்பது மிகவும் முக்கியம் என்று, புனித அகுஸ்தீன் சொல்லியுள்ளார்”. இவ்வாறு திருத்தந்தை தன் குறுஞ்செய்தியில் பதிவுசெய்துள்ளார்.

புனித அகுஸ்தீன்

ஹிப்போ நகர் புனித அகுஸ்தீன், வட ஆப்ரிக்காவிலுள்ள அல்ஜீரியா நாட்டில் கி.பி. 354ம் ஆண்டு பிறந்தார். மேலை நாட்டுக் கிறிஸ்தவத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்த இவர், தலைசிறந்த திருஅவைத் தந்தையருள் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவர் கத்தோலிக்கத் திருஅவையின் மறைவல்லுனரும் ஆவார்.

இளமைப் பருவத்தில் "மனிக்கேயிச" (Manichaeism) கொள்கையால் பெரிதும் கவரப்பட்டிருந்த இவர், புனித அம்புரோஸ் அவர்களின் வழிகாட்டுதலில், தனது 33வது வயதில், திருமுழுக்குப் பெற்று கிறிஸ்துவத்தைத் தழுவி, 36வது வயதில் அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டு, 41வது வயதில் ஹிப்போ நகர் ஆயரானார்.

களியாட்டம், குடிவெறி, கூடா ஒழுக்கம், காமவெறி, சண்டைச்சச்சரவு, ஆகியவற்றைத் தவிர்ப்போமாக! தீய இச்சைகளைத் தூண்டும் ஊனியல்பின் நாட்டங்களுக்கு இடம் கொடுக்க வேண்டாம். இயேசு கிறிஸ்துவை அணிந்து கொள்ளுங்கள் (உரோ.13:13-14) என்று, புனித பவுல் கூறிய சொற்களே, இவரின் மனமாற்றத்திற்கு வித்திட்டன.

புனித அகுஸ்தீன், கிறிஸ்தவ மெய்யியல், மற்றும் இறையியல் கொள்கைகளை விரித்துரைப்பதில் ஈடுபட்டு, பல நூல்களை இயற்றினார். கத்தோலிக்கத் திருஅவையும் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபையும், புனித அகுஸ்தீனை, பெரிதும் போற்றுகின்றன.

புனித அகுஸ்தீன், கி.பி.430ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 August 2021, 14:54